காற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கணுமா?

தற்போதைய காலக்கட்டத்தில் சுத்தமான காற்று என்ற பேச்சிற்கே இடமில்லை. எங்கும் மாசு, எதிலும் மாசு என்பது மட்டுமே சாத்தியமாகிவிட்டது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு, தொழிற்சாலைகள் இன்ன பிற பல்வேறு காரணங்கள் தினமும் காற்றை மாசுப்படுத்தி கொண்டே தான் இருக்கின்றன. இத்தகைய காற்று மாசு பல்வேறு விதங்களில் உயிர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இதில் முதலில் தாக்கப்படுவது யாரென்று பார்த்தால் குழந்தைகளாக தான் இருப்பர்.

எதிர் காலத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சொத்துக்களையும் சேர்த்து வைத்து வரும் நாம், சுத்தமான காற்றை தர தவற விட்டோம். அதற்கு கைமாறாக, காற்று மாசில் இருந்து நமது குழந்தைகளை காப்பதற்கான வழிகளை சரிவர செய்யலாம். அதற்கு சில முக்கியமான சத்துக்களை நமது குழந்தைகளின் உடலில் போதுமான அளவு சேர்த்தாலே காற்று மாசில் இருந்து அவர்களது உடல் பாதிக்காத வண்ணம் தடுத்திடலாம். வாருங்கள், அவற்றைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்…

வைட்டமின் சி
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் அனைத்திலுமே ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக இருக்கும். அவை நச்சுப் புகை மற்றும் காற்று மாசினால் உடல் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்க பெரிதும் உதவக்கூடியவை. எனவே, உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளான கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, ஆரஞ்சு, கிவி, நெல்லிக்காய் மற்றும் திராட்சை போன்ற பழங்களை தொடர்ந்து கொடுங்கள்.

அது தவிர, வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளான காலிஃப்ளவர், கேல், முட்டைகோஸ், ப்ராகோலி, முருங்கை காய், குடைமிளகாய் போன்ற காய்கறிகளையும் அதிகமாக உணவில் சேர்த்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்த வகையில் காற்கறிகளை செய்து கொடுத்து, அவர்களை விரும்பி உண்ண செய்ய வேண்டும்.

குழந்தைகள் உடலில் வைட்டமின் சி சத்தை அதிகரிக்கச் செய்ய மிக சுலபமான வழி என்றால் எலுமிச்சை ஜூஸ் தான். 2 பழங்களை பயன்படுத்தி ஜூஸ் போட்டு கொடுத்தால் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் சி குழந்தைகளுக்கு கிடைத்து விடும்.

வைட்டமின் ஈ
நச்சு புகையில் இருந்து நுரையீரலை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வைட்டமின் ஈ தான். மேலும், அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், காற்று மாசுபாட்டின் விளைவுகளை பெருமளவில் தடுக்க உதவுகின்றன.

உங்கள் குழந்தைகளுக்கு கை நிறைய பாதாம் பருப்புகளை ஸ்நாக்ஸாக கொடுக்கலாம். அது தவிர, வேர்க்கடலைகளை கூட மதிய உணவிற்கு முன்பு கொடுக்கலாம்.

வைட்டமின் ஈ நிறைந்த சூரிய காந்தி விதைகள் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. அவற்றை ஸ்நாக்ஸாக அல்லது சாலட், ஆம்லெட் போன்றவற்றின் மீது தூவி கொடுக்கலாம். மொறுமொறுப்பாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பச்சையாக அல்லது சமைத்து சாப்பிட ஏற்ற ஒரு உணவு வகை என்றால் கீரைகள் தான். அவற்றை குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் செய்து கொடுத்து சாப்பிட வையுங்கள். ஒருவேளை, நீங்கள் அசைவ பிரியர்களாக இருந்தால், கடல் உணவுகள் அனைத்துமே சிறந்தது. அவற்றில், ஆரோக்கியமான புரதங்களும், முக்கியமாக வைட்டமின் ஈ உள்ளது. சூரியகாந்தி எண்ணெய், ரைஸ்ப்ரான் ஆயில் மற்றும் பிற தாவரம் சார்ந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவது சிறந்தது. ஆலிவ் ஆயில், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் கூட மிகவும் நல்லது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்திட, ஆரோக்கியமான இதயம் மற்றும் அழற்சி எதிர்ப்புக்கு உதவக்கூடிய ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

அனைத்து குழந்தைகளுக்குமே மில்க் ஷேக்ஸ் மற்றும் ஸ்மூத்திஸ் பிடித்தமானவை தான். அப்படிப்பட்ட மில்க் ஷேக்களை சத்துக்கள் நிறைந்தவையாக, சியா விதைகள், ப்ளக்ஸ் ஷீட்ஸ் மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் மாற்றலாம்.

சோயா பீன்ஸ், ராஜ்மா, கொள்ளு, வெந்தய விதைகள், திணை, கடுகு போன்றவற்றை உங்கள் குழந்தைகளின் டயட்டில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால், இவை அனைத்திலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவே உள்ளன.

சாலமன், மத்தி போன்ற மீன்கள் சுவையில் மட்டும் சிறந்தவை அல்ல, சத்துக்களிலும் தான். அதிலும், இதுபோன்ற காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் விளைவுகளை தடுக்க பெரிதும் உதவக்கூடியவை. இவற்றை, சாலட், சாண்ட்விச் அல்லது பிட்சாக்களில் கூட சேர்த்து குழந்தைகளை சாப்பிட வைக்கலாம்.

பீட்டா கரோட்டீன்
பீட்டா கரோட்டீன் எனும் ஆன்டி-ஆக்சிடன்ட் உடலில் நோய் உண்டாக்கும் காரணிகளுடன் சண்டையிட்டு உடலை காக்கும். இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் போது நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு, ஒட்டுமொத்த உடலும் நலன் பெறும்.

கேரட், குடைமிளகாய், சர்க்கரைவள்ளி கிழங்கு, பூசணி, ப்ராகோலி மற்றும் அடர் நிறங்களை உடைய அனைத்து காய்கறிகளுமே பீட்டா கரோட்டீன் நிறைந்தவை தான். பச்சை இலைகளை உடைய கீரைகள், கொத்தமல்லி, வெந்தயகீரை, முள்ளங்கி கீரை அனைத்துமே தினசரி உணவுகளில் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆயுர்வேதம்
சில ஆயுர்வேத தீர்வுகள் சாதாரண சுவாச நோய்களுக்கு சிறந்த மருந்து என்பது நிரூபணமாகியுள்ளது.

* மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள், குழந்தைகளை நச்சு புகைகளின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. தூங்குவதற்கு முன்பு மஞ்சள் தூள் கலந்த பாலை உங்கள் குழந்தைக்கு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* ஆஸ்துமா அறிகுறிகளுக்கு, நெய் அல்லது வெல்லத்துடன் சேர்ந்த மஞ்சள் கலவை மிகுந்த நன்மை பயக்கும்.

* ஹரிட்டகி போன்ற சில மூலிகைகள் வெல்லத்துடன் சேர்த்து பயன்படுத்த கபத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

* கருப்பு மிளகு, இஞ்சி, துளசி, ஜாதிக்காய், புதினா ஆகியவை சுவாசக் கோளாறுகளை விரட்டுவதில் சிறப்பு வாய்ந்தவை.

ஆரோக்கியமான உணவு என்பது நம் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான முதல் படியாகும். எனவே, அந்த கூடுதல் முயற்சியில் ஈடுபடுங்கள், அதன்மூலம் அனைத்தும் சிறப்பாக மாறுவதை நேரடியாக காணலாம்.

Sharing is caring!