காற்றை தூய்மையாக்கும் அற்புத செடிகள்..!!!

நாம் சுத்தமான காற்றை பெற இயற்கை வரப்பிரசாதமாக அளித்துள்ள மரம், செடி, கொடிகளை வீட்டில் வளர்ப்பதனால் ஆரோக்கியமான காற்றை சுவாசிக்கலாம். ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க நாம் இந்த செடிகளை வீட்டில் வளர்த்து வந்தால் போதும்.

வீட்டின் கொல்லையில் துளசி உள்ளிட்ட மூலிகைகளையும், செடிகளையும் வளர்ப்பார்கள். காற்றை தூய்மைப்படுத்துவது, காற்றில் இருக்கும் கிருமிகளை அழிப்பது என்று இந்த துளசிக்கு அதிசயமான பல சக்தி உண்டு. இது போல், சில தாவரங்கள் நம்மை சுற்றி கிடைக்கின்றன. இவை தூய பிராண வாயுவை வெளியிடுகின்றன.

இதில் முதலில் வருவது போதேஸ் என்று அழைக்கப்படும் ‘மணி பிளாண்ட்’. இவை மிக வேகமாக வளரும் கொடி வகையாகும். வீடுகளில் வளர்த்தால் பச்சை பசேல் என்று அழகை கூட்டும். தொங்கும் தொட்டிகளில் வளர்க்கும் போது கூடுதல் அழகாக இருக்கும்.

சைனீஸ் எவர்கிரீன்

சைனீஸ் எவர்கிரீன் என்ற வகை செடியும் உள்ளது. இது ஆண் தாவரம். வடக்கு திசை ஜன்னல்களை ஒட்டிய பகுதியில் இதனை வளர்க்கலாம். இந்த திசையில் வைத்து வளர்க்கும் போது இதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இது வளரும் தொட்டியில் மண் காய்ந்து விடாமல் ஈரப்பதமாக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

பாம்பு கற்றாழை

ஸ்நேக் பிளாண்ட் என்று சொல்லப்படும் பாம்புக் கற்றாழை. இந்த செடி எந்த விதமான சுற்றுச்சூழலிலும் நன்கு வளரும். எவ்வளவு ஒளி குறைவாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும் செழிப்பாக காணப்படும். உள் அறை நிழலில் கூட சிறப்பாக வளரும்.

ஸ்பைடர் பிளாண்ட்

இதே போல், ஸ்பைடர் பிளாண்ட் என்றொரு செடி. தொங்கு தொட்டிகளில் வளர்க்க அழகான தாவரம் இது. இவை நன்றாக சூரிய ஒளி கிடைக்கும் போது பச்சைபசேல் என்று வளர்ந்து காணப்படும். ஆனாலும், மிகச்சிறிதளவு சூரிய வெளிச்சத்திலும் கூட தன்னை தக்கவைத்துக் கொண்டு வளரும்.

நீங்கள் குடியிருக்கும் வீடு மிக அழகாக உங்களை சுற்றி பசுமை போர்த்தி தெரிய வேண்டும் என்றால் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது ‘ஸ்பைடர் பிளாண்ட்’ என்னும் இந்த வகைச் செடி தான்.

மேற்கண்ட தாவரங்களை வீட்டில் சிறிய தொட்டிகளில் வளர்ப்பதன் மூலம் அவை வெளியிடும் தூய காற்றை நாம் சுவாசித்துக் கொள்ளலாம். இந்த செடிகள் தமிழகத்தில், செடிகளை விற்பனை செய்யும் நர்சரிகளில் கிடைக்கிறது.

Sharing is caring!