காளிதேவி நாக்கை வெளியே நீட்டியிருக்க காரணம் என்ன தெரியுமா?

இறைவன் எப்போதுமே சாந்தஸ்வரூபியாகத்தான் இருக்க வேண்டும். அப்படி சாத்விகமாக இருப்பவர்களைத்தான் நாம் வணங்கவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இறைவன் எத்தகைய கோபத்தைக் கொண்டிருந்தாலும் பக்தர்கள் மனமுருக அன்போடு அவன் நாமத்தை அழைக்கும் போது சாந்தமடைந்துவிடுகிறார்.

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள் குறும்பு கண்ணனாக அவதரித்து ஒட்டு மொத்த கோபியர்களின் மனத்தை கவர்வதிலும், ஒழுக்கத்தில் சீலராகவும் அவதரித்தவர் தான் இரண்யகசிபுவை வதம் செய்ய நரசிம்மனாக படு ஆக்ரோஷத்துடன் காட்சி தந்தார். தேவர்களே அருகில் செல்ல பயந்த நிலையில் பக்தன் பிரகலாதன் அவரை சென்று சாந்தப்படுத்தினான்.

இறைவியில் உக்கிரமானவள் காளி. காளி என்ற பெயரை சொன்னதும் மனதில் அச்சம் இயல்பாகவே தோன்றும். சிலர் அடக்க முடியாத கோவத்தைக் கொண்டிருக்கும் போது பத்ரகாளி போல் ஆடுவாள் என்று பெயரெடுப்பார்கள். காளி என்னும் பெயர் சில பக்தர்கள் மனதில் பொல்லாதவளாக உருமாற்றியிருக்கிறது.

காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம் தான். நல்லவர்களை இறைவன் எப்போதும் வதம் செய்வதில்லை. அசுரர்களையும் தீங்கிழைக்கும் துஷ்டர்களையும் வதம் செய்யவே காளியானவள் அம்பிகையின் மற்றொரு தோற்றமாக உருவெடுத்தாள் என்று  புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளியைக் கண்டு பயந்து நடுங்கும் பக்தர்களுக்கு காளியின் உபதேசம் என்னவென்று தெரியுமா?

அறியக்கூடியவள் நான். பிறர் அறியாதவளும் நான் என்கிறாள் காளி. மேலும் பிறப்பினவும் பிறப்பில்லாததும், மெய்ஞானமும், அஞ்ஞானமும், மேலும் கீழும் நான் என்று சகலமும் நானே என்கிறாள் காளி தேவி. காளியின் இருப்பிடம் மயானங்கள் தான். காரணம் மனிதப்பிறவி பேதங்கள் ஒழிந்து அகங்காரத்தை துறந்து பூதவுடலானது பஞ்சபூதங்களோடு ஐக்கியமாகி விடுவது இங்குதான். மனிதன் நல்ல நிலையில் மகிழ்ச்சியில் இருக்கும் போது உணராத இறை பக்தியை இறுதிக்காலத்தில் ஆன்மாவை பிரிய நேரும் போது அங்கு காத்திருக்கும் காளியின் அருளைப்பெறுகிறான்.

காளியின் விரிந்த கூந்தலில் தான் ஞானம், விஞ்ஞானம் அடங்கியிருக்கிறது. நாக்கை அடக்கினால் எல்லாமே வசப்படும் என்பதை உணர்த்தவே காளிதேவி நாக்கை வெளியே நீட்டியபடி காட்சிதருகிறாள். மனித உடலில் தலைதான் பிரதானமாக இருக்கிறது. இதுவே ஞானசக்தி நிலையமாக ஆன்மிக பெரியவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் தான் பிரும்மாண்டம் உள்ளது. இதை படைத்து காத்து அழிப்பவள் காளி தேவியே. காளிதேவியின் நடுங்கவைக்கும் சிரிப்பு துன்பம் கண்டு நடுங்காதே என்பதையே உணர்த்துகிறது.

காளியை வழிபட்டு அவளது அருளை பெற பூஜை முறைகள் சொல்லப்பட்டிருந்தாலும் அவளது நாமாவளியை சொன்னாலே போதும் மகிழ்ந்து அருள் புரிவாள் காளி. காளி கவசம், காளி கீலக ஸ்தோத்ரம், காளி அர்க்களா ஸ்தோத்ரம் என்று பல ஸ்தோத்ரங்கள் உள்ளன.  நன்மை செய்வதற்காகத்தான் இறைவன்  என்பதால் காளிதேவியைக் கண்டு பயப்படத்தேவையில்லை. காளி என்பவள் அனுக்கிரக தெய்வம் என்கிறார்கள். காளியை வணங்க வணங்க அச்சம் விலகிவிடும். அவளிடம் ஈடுபாடு உண்டாகும்.

Sharing is caring!