கிருஷ்ணனிடம் அன்பு காட்டினால்…

அன்பை கொடுக்க கொடுக்க அது இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என்று சொல்வார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல நம்மைக் காக்குக் கடவுளுக்கும் இது பொருந்தும். குறும்புக்கார கண்ணன் இருக்கானே அவன் மீது நாம் செலுத்தும் அன்பை பன்மடங்கு திருப்பிக்கொடுப்பதில் அவனுக்கு நிகர் யாருமே கிடையாது.

கிருஷ்ணர் குழந்தைப் பருவமாக இருக்கும் போது அவரை கொஞ்சி மகிழ்ந்தவர்களும், அவருடன் விளையாடியவர்களும் அவரைத் தூக்கி வளர்த்தவர்களும் பெரும் பேறை பெற்றார்கள். அவருடைய காலத்தில் பொருள்களை பண்டம் மாற்று முறையில் தான் பெற்றுக்கொண்டார்கள். அதாவது தம்மிடம் இருக்கும் பொருளைக் கொடுத்து அதற்கேற்ப வேண்டிய பொருள்களைப் பெற்றுக்கொள்வார்கள்.

கிருஷ்ணனிடம் ஒரு குணம் உண்டு. வெண்ணெயை எங்கு கண்டாலும் அனுமதி இன்றி எடுத்துக்கொள்வான். தானாக அன்பாக கொடுப்பதை விட யாரும் அறியாமல் கள்ளத்தனமாய் எடுத்து உண்பதைத்தான் கண்ணன் விரும்பினான். இதனால் கோபம் கொண்டு கிருஷ்ணனை திட்டியவர்கள் நேரில் கிருஷ்ணனை பார்க்கும் போது தண்டிக்க விரும்புவார்கள். ஆனால் மாயக்கண்ணனை பார்க்கும் வரை தான் கோபம் எல்லாம் இருக்கும். கண்ணனின் குறும்பு கண்களைக் கண்டால் மலைபோன்ற கோபங்கள் கூட மடுவாய் கரைந்திரும். மாயக்கண்ணன் மாயம் செய்வதிலும் பெண்களின் மனதைக் கொள்ளையடிப்பதிலும் சிறப்புற்று விளங்கினான்.

ஒருமுறை நந்தவன தோட்டத்தில் பெண்ணொருத்தி கூடை நிறைய பழங்களை எடுத்துவந்தாள். கிருஷ்ணனுக்கும் பழம் சாப்பிட வேண்டும் போல் தோன்றியது. அதனால் அன்னையின் அருகாமையை நாடினான். ஆனால் யசோதையைக் காணவில்லை. குறும்புக்கார கிருஷ்ணனுக்கு கொடுக்கல் வாங்கல் பண்ட மாற்று முறையில் பொருள் வாங்குவது நினைவுக்கு வந்தது. உடனே தானியக் கிடங்கு இருக்கும் இடத்துக்கு ஓடிச்சென்றான். தன்னுடைய பிஞ்சு கைகளால் தானியங்களை அள்ளி எடுத்து வந்தான். கண்ணன்… குழந்தையாயிற்றே கையில் இருந்த தானியங்கள் அவன் நடக்க நடக்க சிதறியபடி இருந்தது.

கண்ணனின் தளிர் நடையிலும் அழகிலும் மயங்கிய பழக்காரி கிருஷ்ணனிடம் இருந்த சொற்ப தானியங்களைப் பெற்றுகொண்டு கை நிறைய பழங்களை அள்ளிக்கொடுத்தாள். மிகுந்த மகிழ்ச்சியோடு பழங்களைப் பெற்றுக்கொண்ட கண்ணன் தன் நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டான். அன்று பழங்களை விற்று விட்டு, வீட்டுக்கு சென்ற பழக்காரியின் கூடையை ஆபரணங்கள், பொன்மணிகள் போன்றவை நிறைத்திருந்தன. கிருஷ்ணன் மீது அவள் காட்டிய அன்பை பன்மடங்கு செல்வமாய் அள்ளிக்கொடுத்திருந்தார் கிருஷ்ண பகவான்.

அன்பை கொடுக்க கொடுக்க பல மடங்கு திருப்பி கிடைக்கும் என்பதை  நாம் தெரிந்து கொள்ள கிருஷ்ணனே வழிகாண்பித்திருக்கிறார். அன்பு செய்வோம். அன்பால் ஆள்வோம்.

Sharing is caring!