கும்ப வழிபாடு ஏன் தெரியுமா?

கலசத்தை ஏன் வழிபடுகிறோம்?
உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளின்  ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன.  மீண்டும் தண்ணீரிலேயே  ஐக்கியமாகி விடுவதாக வேதங்கள் கூறுகின்றது. அதனால் ஜீவராசிகளுக்கு ஆதிகாரணமாக இருக்கும் மூலகர்த்தாவாகிய எல்லாம் வல்ல இறைவனை நீரின் உருவ வழிபாட்டுக்கு கொண்டு வருவதே பூரண கும்பத்தின் தத்துவம்.

கலசம் என்பது கும்பம் என்று அழைக்கப்படுகிறது. கங்கையின் புனித நீர் போன்று இந்தக் கலசத்தில் இருக்கும் நீருக்கும் புனிதம்  அதிகம்.  இந்துக்கள்  தங்கள் வீட்டின் சுப நிகழ்ச்சிகளிலும், விசேஷ விரத நாட்களிலும் பூஜையறையில் கும்பம் வைத்து வழிபடுவார்கள். செம்பு, பித்தளை, தாமிரம், வெள்ளி போன்ற உலோகத்தினால் செய்யப்பட்ட நீர் நிறைந்த செம்பு  கலசம் அல்லது கும்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கலசத்தில் நீர் அல்லது அரிசி நிரப்பப்படும் இந்தக் கலசம்  விசேஷ காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து பூஜிக்கப்படுகிறது.

இதற்கு கார ணம்..உலகை படைக்கும் முன்  பாற்கடலில் விஷ்ணு பாம்பணையில் மேல் சாய்ந்திருந்தார். அவருடைய நாபிக்கமலத்திலிருந்து வெளிப்பட்ட தாமரை மலரிலிருந்து வெளிப்பட்ட பிரம்மன் உலகை படைத்தார்.  கலசத்தில் உள்ள புனித நீர் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் மங்களகரமான அனைத்தையும் படைக்கும்  சக்தியை கொண்டிருக்கிறது.  பூரண கும்பத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருள்களும் மங்களத்தை உண்டாக்கும் பொருள்களாகவே  இருக்கின்றன. ஜடப்பொருளான நம் உடல் தெய்வீகச்சக்தியால் உயிர்பெறும்போது போற்றத்தக்க செயல்களைச் செய்கிறது.

கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படுகின்றன. இவை சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்ற  வெள்ளை அல் லது சிவப்பு நிற நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் பின்னிப்பிணைந்து ஒன்றாக இருக்கும் அன்பைக் குறிக்கும் வகையில் டைமண்ட் வடிவில் நெருக்கமாக  இது கட்டப்படுகிறது. கலசத்தில் உள்ள நீரில் தேவதைகளின் ஆசி நீரில் வந்து சேரவேண்டும் என்று வேண்டப்படுகிறது. கலசத்தின் மேல் லஷ்மி தேவியின் உருவத்தை வரைந்து பூஜிப்பதும் உண்டு.

கோயில்களில்  கும்ப அபிஷேகம் (கும்பாபிஷேகம்) என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள நீர் கோயில் கோபுரத்தின் உச்சியில்  ஊற்றப்படுகிறது.  அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இந்த அமுதம் இறவாவரத்தை  கொடுத்ததால் அமுதம் கொடுத்த கலசமும் இறவாத தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்த நீர் நம் மீது படும்போது நமது ஆயுள் நீடிக்கும் என்பது ஐதிகம். பூரண கும்பத்தின் நிறைவு போன்று ஞானிகளும்  மகிழ்ச்சியும் அன்பும்  கொண்டு நிறைந்து வாழ்ந்தார்கள். ஞானிகளை வரவேற்கவும், பெரியோர்களை வரவேற்கவும் பூரண கும்ப மரியாதை செய்வது வழக்கமாகிவிட்டது.

தலைவாழை இலை போட்டு, அரிசியை பரப்பி,  நீர் நிறைந்த  நெருக்கமிக்க நூல்களால் கட்டப்பட்ட கும்பத்தை  நடுவில் வைத்து கும்பத்தின் வாயில் மாவிலையை விரித்து,  தேங்காய் வைத்து கும்பத்தின் இடதுபக்கத்தில் வெற்றிலை, பழம் வைத்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து  வழிபாடு செய்யும் விசேஷ  விரத நாட்கள், திருமணம், புதுமனை புகுவிழா போன்றவற்றை மேலும் விசேஷமடையச் செய்வது இந்த பூரணக் கும்ப வழிபாடுதான்.

Sharing is caring!