குரு இருக்கும் வீடும் பலனும்

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம். வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் – சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:

நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குரு பயோடேட்டா:

சொந்த வீடு – தனுசு, மீனம்

உச்சராசி – கடகம்

நீச்சராசி – மகரம்

திசை – வடக்கு

அதிதேவதை – பிரம்மா

நிறம் – மஞ்சள்

வாகனம் – யானை

தானியம் – கொண்டைக்கடலை

மலர் – வெண்முல்லை

வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை

ரத்தினம் – புஷ்பராகம்

நிவேதனம் – கடலைப்பொடி சாதம்

உலோகம் – தங்கம்

இனம் – ஆண்

உறுப்பு – தசை

நட்புகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்

பகைகிரகம் – புதன், சுக்கிரன்

மனைவி – தாரை

பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்

பிரதானதலங்கள் – ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்

தகுதி -தேவகுரு

ஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்?

குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த வாழ்க்கைத்துணை அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.

குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்சு திறமை இருக்கும். இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணம் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.

குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.

குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.

குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.

குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு.

குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர்வதை இல்லாமல் போகும்.

குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.

குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.

குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.

குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுகத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார்.

Sharing is caring!