குறைவில்லா செல்வம் பெற வணங்க வேண்டிய தெய்வம்

ஏழு தலைமுறைக்கு தொடரும் மகாலஷ்மி தரும் செல்வம்;  தீடீர் லாட்டரி போல் வந்து மறைவது குபேர செல்வம்; அருள்பார்வை இருந்தால் கிடைப்பது இந்திர செல்வம். நமக்குத் தேவை செல்வம் தான். யார் தந்தால் என்ன என்று கேட்கலாம்.

ஆனால் செல்வம் என்பது, இன்று வந்து நாளை போவது கிடையாது. தமக்கு அடுத்த சந்ததியும் குறையின்றி வாழவேண்டும் என்பதே, எல்லோரது விருப்பம். நாம் நலமும், வளமும் பெற்று வாழத்தான் செல்வத்தை தேடி ஓடுகிறோம். செல்வத்தைத் தக்கவைக்க அரும்பாடு படுகிறோம். ஆனால் செல்வம் நிரந்தரமாக இருக்க இம்மூவரில் யாரை வழிபட போகிறீர்கள்.

மகாலஷ்மி செல்வம்:
பாற்கடலில் மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி, தேவர்கள் வாலையும், அசுரர்கள் தலையையும் கடைந்த போது, வெளி வந்தவள் மகாலஷ்மி.

இந்திரன் இழந்த செல்வத்தை மீட்டுக் கொடுத்ததும், கிருஷ்ண பரமாத்மாவின் நண்பன் குசேலனுக்கு நிதி கொடுத்தவளும், குபேரனை அழகாபுரிக்கு அதிபதியாக்கியதும், மகாலஷ்மியின் அருள்பார்வை தான்.

மகாலஷ்மியின் அருள் பார்வை பெற்றுவிட்டால், பக்தர்கள் பதினாறு வகையான பேறுகளையும் பெறுவார்கள்.
மகாலஷ்மியின் அருளைப் பெற்றவர்கள், தர்ம வாழ்வை மேற்கொண்டால்,  இவர்கள் பெற்ற செல்வமானது ஏழுதலைமுறையையும் தாண்டி நிலைத்து  தழைத்து ஓங்கும்.

ஆனால் மகாலஷ்மியின் அருளைப் பெற,  இயல்பிலேயே  பிறருக்கு உதவும் மனத்தை கொண்டிருக்க வேண்டும்.

குபேர செல்வம்:
திடீர் லாட்டரி போல் குவியும் செல்வத்தை அளிப்பவர் குபேரன். குபேரனது செல்வம் நிலைக்காது. திடீர் லாட்டரி போல் வரும் செல்வம், திடீரென மாயமாய் மறைந்துவிடும். குபேர செல்வம் நிலைக்க வேண்டுமென்றால், அதிகம் மெனக்கெட வேண்டும்.
இத்தகைய செல்வத்தைப் பெற்றவர்கள், இலவசக் கல்வி, ஏழைப்பெண்களுக்கு திருமணம், தர்ம காரியங்கள், அன்னதானம்  போன்றவை தொடர்ந்தால், மூன்று தலைமுறைக்கு செல்வம் தங்கும்.

இந்திர செல்வம்:
தேவலோக தலைவனான இந்திரனை வணங்கினால், பசு,வீடு, அரச வாழ்க்கை, பொன், பொருள் போன்ற இந்திர சம்பத்துக்களை அடையலாம். ஆனால் இவற்றை பெறும் பக்தர்களது அடுத்த சந்ததியினர் கூட, இச்செல்வத்தை அனுபவிப்பது சந்தேகமே… எனினும் இச்செல்வத்தை தடையின்றி பெறுவதற்கு, குலதெய்வ வேண்டுதலும், கிரிவலம் செல்வதும், செல்வத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும்.

எனவே செல்வத்துள் எத்தனை வகையான செல்வம் இருந்தாலும், மகாலஷ்மி அருளும் செல்வமே பெறுவதற்கரிய, பெரிய செல்வம் என்பதால், பெரும்பாலானோர், மகாலட்சுமியிடம் செல்வம் வேண்டி பிரார்த்திக்கின்றனர்.

அவள் தரும் செல்வத்தை, தானும், தன்னை சார்ந்த நெருங்கிய உறவினரும் மட்டுமே அனுபவிக்காமல், வறுமையிலும், ஏழ்மையிலும் தவிப்போருக்கு தந்து உதவ வேண்டும். அப்படி செய்தால், நீங்கள் செய்யும் தர்மம், பல மடங்கு செல்வமாக மாறி உங்களுக்கே திரும்ப வந்து சேரும் என்பது முன்னோரது வாக்கு.

Sharing is caring!