குழந்தைச் செல்வம் அருளும் துளசி வழிபாடு…

தேவி பாகவத புராணத்தில் துளசி செல்வத்தின் அதிபதியாகவும் மகா விஷ்ணுவின் மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விருட்ச வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. துளசி வழிபாடு என்பது இவற்றுக்கெல்லாம் தலையானது. இந்துக்களின் வீடுகளில் நடு முற்றத்தில் மாடம் அமைத்து துளசி வழிபாடு செய்யப்படுகிறது.

எங்கெல்லாம் துளசி இருக்கிறதோ அந்த இடம் பிருந்தாவனம் என்று அழைக்கப்படுகிறது. துளசிக்கு மற்றொரு பெயர் பிருந்தை. துளசி என்பதற்கு நிகரில்லாததது என்ற பொருள் உண்டு. துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவபெருமானும், இடையில் விஷ்ணுவும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. துளசி என்றால் தன்னிகர் இல்லாத பெண். ஸ்ரீ மகாலஷ்மியின் அம்சமாக கருதப்படும் துளசி திருமாலின் மார்பை அலங்கரிப்பதிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது. துளசியில் சகல தேவதைகளும் வாழ்வதாக சொல்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்குச் சமமானதாக கருதப்படுகிறது. துளசி செடியில் தேங்கியிருக்கும் நீர் புண்ணிய தீர்த்தத்துக்கு நிகரானது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் பெறலாம் என்பது ஐதிகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க துளசி வழிபாடு செய்தால் விரைவில் மாங்கல்ய தோஷம் நீங்கி மண வாழ்க்கை அமையும்.

தினமும் துளசி செடிக்கு நீர் விட்டு வணங்கி துளசி ஸ்தோத்ரம் சொல்லி வணங்குவது சிறப்பு. இயலாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துளசியைச் சுற்றி உள்ள இடங்களை தூய்மை செய்து துளசி தண்டின் மீது மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடலாம்.

ஜோதிட சாஸ்திரமானது வீட்டில் செல்வம் தங்கவும், மகாலஷ்மி நிலைத்திருக்கவும் துளசி வழிபாடு அவசியம் என்கிறது. மேலும் துளசியானது மகாலஷ்மியின் அம்சம் என்பதால் சுக்கிரனின் அம்சத்தையும் செவ்வாயின் காரகத்தையும் கொண்டிருக்கிறது. துளசியை வணங்கினால் செவ்வாய், புதன், சுக்கிரனிடம் நன்மைகளைப் பெறலாம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு தரிசிப்பதை விட ஒரு குடம் துளசி தீர்த்தத்தால் உள்ளம் மகிழ்வார் விஷ்ணு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஒரு துளசி மாலை தந்துவிடும். மங்கலமாய் என்னை வணங்கினால் உங்கள் தீங்கை குறைத்து நல்வினை தருவேன் என்கிறாள் மகாலஷ்மியின் அம்சமான துளசி.

ஸ்ரீ பத்ம புராணத்தில் துளசி வழிபாடு பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. தசரத மகாராஜன் குழந்தை பேறு வேண்டி முதலில் துளசி பூஜை செய்ததாகவும் துளசி தேவி காட்சி தந்து துளசி காஷ்டம் என்னும் துளசி குச்சிகளைக் கொண்டு புத்திரகாமேஷ் என்னும் யாகம் செய் உனக்கு இறைவனே மகனாக பெறும் பாக்கியம் பெறுவாய் என்றாள். துளசி வழிபாடு என்பது சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தருவதோடு குழந்தைப்பேறை தரும் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

Sharing is caring!