குழந்தைப்பேறும் ஷஷ்டி விரதமும்….?

தமிழ்க்கடவுள் முருகன் அழகன் என்றும் அழைக்கப்படுகிறான். தகப்பனுக்கே பாடம் எடுத்த தகப்பன் சாமி என எல்லோராலும் கொண்டாடப்படுகிறான். வினைகளை தீர்ப்பான் வேலவன் என்பது முன்னோர்களது வாக்கு. அந்த வேலவனுக்கு உரிய முக்கிய விரத தினங்களில் ஒன்று ஷஷ்டிவிரதம். ஷஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது.

ஆறு என்ற எண் முருகனுக்கு மிகவும் தொடர்புடையது. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு. அறுபடை வீடுகள் ஆறு,முருகனுக்குரிய மந்திரம் சரவணபவ  எழுத்துகள் ஆறு, முருகனது திருமுகங்கள் ஆறு. அமாவாசை, பெளர்ணமி அடுத்து வரும் ஆறாம் நாள் ஷஷ்டி திதி என்று அழைக்கப்படுகிறது. இதுவே முருகனுக்குரிய முக்கிய விரததினமாகவும் உள்ளது.

ஷஷ்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்னும் பழமொழியிலிருந்து ஷஷ்டிக்கான முக்கியத்துவத்தை அறியலாம். இதுதான் இன்று சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்று மருவி விட்டது. ஆனால் ஷஷ்டி அன்று வேலவனை நினைத்து விரதம் இருந்தால் பெண்கள் கருப்பையில் குழந்தைப்பேறு உருவாகும் என்பதே உண்மையான விளக்கம். குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் ஷஷ்டியில் விரதமிருந்தால்  நிச்சயம் குழந்தை உண்டாகும் என்பது ஐதிகம்.

குடும்பத்தில் தொல்லைகள் நீங்கவும், வினைகள் ஓடிடவும், கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், எண்ணிய எண்ண்ம் ஈடேறவும் முருகனை நினைத்து இவ்விரதம் மேற்கொள்ளலாம்.  அதிகாலையில் எழுந்து நீராடி பூஜையறையை சுத்தம் செய்து முருகன் படத்துக்கு முன்பு விளக்கேற்றி வழிபடவேண்டும்.காலையில்  உணவருந்தாமல் கந்த ஷஷ்டி கவசத்தை சத்தமாக படிக்க வேண்டும்.

எந்த விரதங்களின் போதும் மனதுக்குள்  தீமைசெய்யும் எண்ணங்களும், வக்கிரமங்களும், கோபங்களும் இருக்க கூடாது. இன்றைய தினம் மூன்று வேளையும் உணவருந்தாமல் முருகனை நினைத்து வழிபட வேண்டும். முதியோர்கள், உடல்நிலை சுகவீனமாக இருப்பவர்கள், கர்ப்பிணிகள்  சாப்பிடலாம்.  உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஷஷ்டி விரதம் என்று சொல்வார்கள். ஷஷ்டி விரதம் இருப்பவர்கள் பழச்சாறு அருந்தலாம். ஆனால் இளநீர், எலுமிச்சைச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை அருந்தக்கூடாது. பால் பழங்கள் அருந்தலாம். இன்றும் எச்சில் கூட விழுங்காமல்பலரும் ஷஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஷஷ்டி தினத்தில் கந்த ஷஷ்டி தினத்தை பாராயணம் செய்தோ அல்லது கேட்கவோ செய்யலாம். பணியிலிருந்தாலும் மனதில் ஓம் முருகா, ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை உச்சரித்தாலே கூட போதும். முருகனுடைய  அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

கருப்பையில் இருக்கும் பிரச்னைகள் அகலவும், குழந்தைப்பேறு உண்டாகவும் சிறந்த வழிபாடு ஷஷ்டி விரத வழிபாடுதான் என்கிறார்கள் முன்னோர்கள்.  குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களில் முதன்மையானவர் முருகன் என்பதால் முருகனை வழிபடுங்கள். குழந்தை பேறை அடையுங்கள்.

Sharing is caring!