குழந்தை வரம் கொடுத்த சீரடி சாய் பாபா..!

தெய்வத்தின் ஒவ்வொரு சொற்களும் அவரின் அடியவர்களுக்கு வேத வாக்கு. அவர் சொல்லும் சொற்கள் மகத்துவம் வாய்ந்தது என்று மனமார நம்பினார்கள். அவர் சொல்லிவிட்டால் அது அப்படியே பலிக்கும் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. ஸோலாபூரைச் சேர்ந்த சகாராம் ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு 27 ஆண்டு காலமாகக் குழந்தையில்லை. கண்ணில் பட்ட தெய்வங்கள் அனைத்துக்கும் கணக்கற்ற பிரார்த்தனைகளை அவள் செய்துகொண்டாள். ஆனால் அதற்கான பலனை தான் காண முடியவில்லை . இதனால் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த அவள், இறுதி முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன் சீரடி வந்து பாபாவுக்குச் சேவை செய்துகொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள்.
மசூதிக்கு அவள் சென்றபோதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்.அவள் அவரைத் தனியாகக் கண்டு வீழ்ந்து வணங்கி தனது நீண்ட நாள் கோரிக்கையான பிள்ளை வரத்தை வேண்ட விரும்பினாள். ஆனால் அதற்கான உரிய சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால், முடிவாக அவள் பாபாவிடம் அவர் தனியாக இருக்கும்போது தனக்காகப் பேசும்படி பாபாவின் நெருங்கிய நண்பரான ஷாமாவிடம் கேட்டுக்கொண்டாள்.ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காகத் தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் கூறினார். தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு ஜாடை காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார். ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார்.இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார். ஷாமா அந்தப் பெண்மணிக்கு ஜாடை செய்தார். அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம்அளித்தாள். பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார். அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது.பாபா: ஷாமா இது உருளுகிறதே, என்ன சொல்கிறது என்பதைக் கவனி. ஷாமா: இந்த பெண்மணி, அந்த மாதிரியாக ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்புற வேண்டுமென்று வேண்டுகிறாள். எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள்.பாபா: இத்தேங்காய் அவளுக்கு ஒரு மழலையை அளிக்குமா? இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் எவ்வளவு முட்டாள்தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

ஷாமா: உங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நாங்களறிவோம் . உங்களது சொல் அவளுக்கு நிச்சயம் குழந்தைப் பேற்றை அளிக்கும். நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை.விவாதம் கொஞ்சநேரம் நடந்துகொண்டு இருந்தது. பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக் கொண்டிருதார். ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக்கொண்டிருந்தார். முடிவாக பாபா சம்மதித்தார். பாபா: அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் ஷாமா: எப்போது?பாபா: 12 மாதங்களில்

இதன்பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும்உண்டனர். மறுபகுதி அவளிடம் அளிக்கப்பட்டது.பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி “தாயே ! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி. பாபாவின் கருணையால் பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை நிச்சயம் பிறக்கும். நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்” என்று கூறினார்.பாபாவின் வாக்கு பொய்யாகவில்லை. அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள். புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்துவந்தாள். கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள். பாபாவுக்கு தங்களது நன்றியை தெரிவிக்க ,அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார். ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது.சீரடி சாய் பாதம் பணிவோம் ………சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய்

Sharing is caring!