கோடி புண்ணியம் தரும் வைரவர் வழிபாடு

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதாலும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதாலும் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் – அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் “திரிசூலம்” அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்யும் வைரவரை வழிபடும் நாட்களை பற்றி காண்போம்.

வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்

செவ்வாய்க்கிழமை விரதம்

தை மாதம், முதல் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டும் அருந்தி கொள்ளலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் முழுவதும் பால், பழம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

சித்திரை பரணி விரதம்

சித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.

ஐப்பசி பரணி விரதம்

ஐப்பசி மாதப் நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று இரவில் மட்டும் உண்ணலாம். இல்லையென்றால் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்கலாம். இந்த விரதங்களை முறைப்படி கடைப்பிடித்து வந்தால் நல் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி அனைத்து விதமாக சந்தோஷங்களும் கிடைக்கும்.

Sharing is caring!