கோடையில் மஞ்சள் காமாலை பாதிப்பிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம்?

மஞ்சள் காமலை என்றால் என்ன ? 
மஞ்சள் காமாலை என்பது நோய் அல்ல, மாறாக இந்த அறிகுறி உடலில் ஏற்பட்டுள்ள நோய் தொற்றை குறிக்க கூடியதாக இருக்கிறது. நம் உடல் இயக்கத்திற்கு தேவையான‌ முக்கிய பிராண வாயுவை கொண்டு செல்பவை, இரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுலோபின். இந்த‌ ஹீமோகுலோபினின் ஆயுட்காலம் முடிந்தவுடன், தானாகவே உடைய துவங்கிவிடும். இந்த நிகழ்வின் போது, சில வேதியியல் மாற்றாங்களால், ஹீமோகுலோபின், பிலிரூபின் என சொல்லக்கூடிய கழிவுப்பொருளாக மாறிவிடும்.

இந்த கழிவு பொருளை வெளியேற்றும் பணியில் முக்கிய பங்கு வகிப்பது கல்லீரல். இந்த ஈரல் மூலம், பிலிரூபின் மீண்டும் இரைப்பைக்கு சென்று, மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த நிகழ்வு, நமது உடலில் தொடர்ச்சியாக நிகழக்கூடிய ஒன்று. இவ்வாறான தொடர்நிகழ்வினை  தடுக்கும் வகையில்,  ஹீமோகுலோபின் அளவுக்கு அதிகமாக உடைவது, கல்லீரலின் பாதையில் தடை ஏற்படுவது போன்ற காரணங்களால் மஞ்சள் நிற‌முடைய பிலிரூபின் ரத்தத்தில் கலந்து விடுகிறது.

இதனால்,உடலின் சில உறுப்புகளின் நிறம் மாறுவதே, மஞ்சள் காமாலை எனப்படுகிறது. பொதுவாக மஞ்சள் காமாலை ஹெ‌பிடைடி‌ஸ் ஏ முத‌ல் ‌பி,‌சி,டி,இ, ‌‌ஜி வரையிலான‌ 6 வகை வைரஸ்களாகும்.

மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்:

மஞ்சள் காமாலை இருவகையாக பிரிக்கப்படுகிறது. அவை, அடைப்புக் காமாலை, அடைப்பில்லா காமாலை.  இதில் அடைப்புக் காமாலை என்பது, பித்தக்குழாய் கற்கள், கணைய கோளாறு,  பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று பிரிவுகளாகவும். அடைப்பில்லா காமாலை என்பது, அ‌திகமாக அரு‌ந்து‌ம் மதுபானம், ‌பா‌க்டீ‌ரியா‌க்களின் பாதிப்பு, மலேரியா ஒட்டுண்ணிகள், ‌சில மா‌த்‌திரைக‌‌ள் போ‌ன்றவ‌ற்றாலு‌ம் ம‌ஞ்ச‌ள் காமாலை ஏற்படுகிறது.

இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் கண், நகம், நாக்கின் அடிப்பகுதி, தோல் போன்றவை மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். அதோடு குமட்டல், வாந்தி, பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல் பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு, கல்லீரல் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

தடுக்கும் வழிமுறைகள்;

அதிகப்படியான மது, கல்லீரலை பாதிக்க கூடியது. எனவே மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது காமாலை பாதிப்பை குறைக்கிறது.கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது ஏற்படும், பித்த நாளப்பிரச்னையால் மஞ்சள் காமாலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே அதிகமாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளமல் இருப்பது நல்லது.

இரத்தம் கொடுப்பவர், பெறுபவர்  ஆகிய இருவருமே, முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதனால் இரத்தம் ஏற்றுவதால் உண்டாகும் மஞ்சள் காமாலையை தடுக்கலாம்.

கோடை காலங்களில் கல்லீரல், கணையம் இவை இரண்டுமே அதிக‌ பாதிப்பை சந்திக்க கூடிய உறுப்புகள். இவ்விரண்டையும் பாதுகாக்க, உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்த கூடிய மோர், எலுமிச்சை, இளநீர், தர்ப்பூசணி  சோற்று கற்றாழை, கரிசலாங்கண்ணி போன்றவற்றை  அதிகம் உட்கொள்ள வேண்டும்.

மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் கழிவறையை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்துவதால்,ஹெ‌பிடைடிஸ் வைரஸின் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்.
மஞ்சள் காமாலை பாதிப்புள்ளவர்கள், முட்டையில் மஞ்சள் கரு, அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.

அருந்தும் குடிநீர் சுத்தமானதாக‌ இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

மஞ்சள் காமாலை அறிகுறி தென்பட்ட உடன், விரைவாக மருத்துவரை சந்தித்து, இது எந்த நோயின் அறிகுறி என உறுதி செய்து, முறையான சிகிச்சையை மேற்கொள்வதனால் உயிரிழப்பை தவிர்க்கலாம்.

Sharing is caring!