கோழைச்சளியை வெளியேற்றும் சித்தரத்தை…

மருத்துவத்துறை எவ்வளவு முன்னேறினாலும் கை வைத்தியத்துக்கு ஈடாகாது. மூலிகை பொருள்களை உணவாக்கி உணவையே மருந்தாக்கி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பது போலவே இருமலுக்கு உகந்த மருந்து சித்திரத்தை. சித்தரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகை இருந்தாலுமே பாட்டி வைத்தியத்தில் சித்தரத்தை தான் முக்கியத்துவம் பெறுகிறது.

நமது முன்னோர்கள் சுக்கு, வால் மிளகு, சித்தரத்தை, ஓமம், கடுஞ்சீரகம் போன்றவற்றை எப்போதும் வீட்டில் வைத்திருப்பார்கள். ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்பது மூத்தவர்களது வாக்கு. தொண்டையில் இருக்கும் கபத்தை வெளியேற்ற சித்தரத்தையை விட சிறந்த மருந்தில்லை என்றே சொல்ல வேண்டும். சித்தரத்தை காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மையைக் கொண் டிருக்கும் என்பதால் இதை தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், இளைப்பு, சளி, வறட்டு இருமல், வாயு கோளாறுகள், வாய் துர்நாற்றம், ஈறுகள் பாதுகாப்பு, காய்ச்சல், சுவாச கோளாறுகள், மூட்டுவலி, தசைபிடிப்பு போன்றவற்றை விரட்டும் தன்மையைக் கொண்டது சித்தரத்தை. சளிக்கு காரணமான சால்மோனெல்லா. ஸ்ட்ரெப்டோ காக்கஸ் போன்ற நுண்ணுயிரிகளை  எதிர்க்கும் எதிர் நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கிறது சித்தரத்தை என்பதை  மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

சிறு குழந்தைகளுக்கு இளைப்பு சளி இருந்தால் சித்தரத்தையை விளக்கெண்ணெயில் தோய்த்து தீயில் பொசுக்கி தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினால் விரைவில் பலன் தெரியும்.

சித்தரத்தையைத் தொடர் இருமலை கொண்டிருப்பவர்கள் சித்தரத்தையைச் சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு ஊறவைத்து குடித்தால் இருமல் கட்டுப்படும். அந்நீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். நீரை கொதிக்க வைத்து நறுக்கிய சித்தரத்தையைத் துண்டுகளாக்கி சேர்த்து மூன்றுபங்காக குறையும் போது குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை என இரண்டு வேளை குடித்துவந்தால் நாள்பட்ட இருமலும் நீங்கும்.  சித்தரத்தைப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கோழைச் சளியை வெளியேற்றும் இருமலையும் குறைக்கும்.

வறட்டு இருமலால் தொண்டைப்புண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சித்தரத்தை தூளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குணமாகும். சிலருக்கு பயணகாலங்களில் வாந்தி உணர்வு ஏற்படும். சித்தரத்தை துண்டை நறுக்கி  வாயில் போட்டு அடக்கி கொள்ளவும்.  இது உமிழ்நீரோடு கலந்து விழுங்கினால் குமட்டல், ஒவ்வாமை நீங்கும். மூட்டுவலி பாதிப்பு இருப்பவர்கள் அடிக்கடி காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் பாலில் நாட்டுச்சர்க்கரை, சித்தரத்தைப்பொடியைக் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சித்தரத்தையை  நாட்டு மருந்துகடைகளில் வாங்கி நிழலில் உலர்த்தி பொடியாகவோ சிறுதுண்டுகளாகவோ நறுக்கி வைத்துக்கொள்ளலாம். இதைத் தூளாக்கினால் மூன்று மாதங்கள் வரை உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் காரம் விறுவிறுப்பு தெரியாமல் இருக்க தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து கொடுக்கலாம். இனி சமையலறையில் அஞ்சறைப் பெட்டி போன்று மருத்துவப் பெட்டியிலும் சித்தரத்தையை வைத்திருங்கள்.

Sharing is caring!