சகல பாவங்களையும் நீக்கவல்ல ஷட்திலா ஏகாதசி விரதம்…!!

பெருமாளை வழிபடுவதற்கு ஒரு அற்புதமான நாளாக ஷட்திலா ஏகாதசி விரத தினம் வருகிறது. இந்த ஏகாதசி விரத தினத்தின் முக்கியத்துவம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பூலோகத்தில் வாழ்ந்த பெண் ஒருத்தி தான் செய்த புண்ணிய பலன் காரணமாக மனித உடலோடு சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெற்றால். சொர்க்க லோகத்தில் தனக்கு அத்தனை வசதிகள் இருந்தாலும் தன்னால் நேரத்திற்கு தான் விரும்பிய உணவு கிடைக்காமல் அவதியுற்றார். அப்போது அங்கே ஒரு துறவி உருவத்தில் வந்த பெருமாளிடம் தனது இந்த நிலை குறித்து கூறி, அதற்கான காரணம் என்ன என்று கேட்டாள்.அதற்கு துறவி உருவில் இருந்த பெருமாள் அந்த பெண்ணிடம் அவள் பூலோகத்தில் அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு தான தர்மங்களை செய்திருந்தாலும், ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுக்க இருக்கும் பிணியான பசி பிணியினை போக்கும் அன்னதானம் செய்ய மறந்து விட்டதாகவும், மேலும் ஒரு முறை துறவி ஒருவர் சாப்பிட உணவு கேட்டு பாத்திரத்துடன் அவள் வீட்டின் முன்பாக வந்த போது, அந்த பாத்திரத்தில் மண்ணை கொட்டி அவரை அவமதித்த பாவமே அந்த பெண் சொர்க்கலோகத்தில் இருந்தாலும் உணவு கிடைக்காமல் அவதியுற நேரிட்டதாக கூறினார் துறவி உருவத்தில் இருந்த பெருமாள்.

இதையறிந்து வருந்திய அந்த பெண்ணிடம் பெருமாள் மண்ணுலகில் வாழும் மனிதர்கள் நன்மைகளை பெற பல விரதங்களை கடைபிடிக்கின்றனர். அதில் ஒன்று தான் மாசி மாத தேய்பிறை காலத்தில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதம் ஆகும். இந்த விரதத்தை மேற்கொள்ளவர்கள் வாழ்வில் பசிப்பிணி தீர்ந்து அன்னம் எனப்படும் உணவிற்கு பஞ்சமிருக்காது என்றும், உன்னை இங்கு தரிசிக்க வரும் தேவலோக பெண்களிடம் இந்த ஷட்திலா விரதத்தின் பலன்களை பெற்றால் உனது பசிப்பிணி தீரும் என்று கூறி மறைந்தார்.

வந்தது நாராயணனே என்றறிந்த பெண் தேவலோக பெண்கள் அவளின் தரிசனம் பெற வந்த போது ஒரு அறைக்குள் சென்று மறைந்துகொண்டாள். வந்த தேவலோக பெண்கள் அப்பெண் தங்களுக்கு தரிசனம் தருமாறு கெஞ்ஜினர். அதற்கு அந்த பெண், தேவலோக பெண்கள் கடைபிடித்த ஷட்திலா விரதத்தின் பலனை தனக்கு தந்தால் தான் அவர்களுக்கு தரிசனம் தருவதாக கூறினாள். அதற்கு அவர்களும் ஒப்புக்கொள்ள, விரதத்தின் பலனை பெற்ற பெண் தனது பசிப்பிணி நீங்க பெற்றாள்.

மகத்துவம் வாய்ந்த நாளான இந்த மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவான பெருமாளை விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் இதர பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிப்பட்டு உங்களால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், உங்களின் சகல பாவங்கள் நீங்குவதோடு, உங்கள் வாழ்நாளில் உணவிற்கு ஏங்கும் உணவு பஞ்சம், வறுமை போன்ற நிலை ஏற்படாமல் பெருமாள் காத்தருள்வார்.

Sharing is caring!