சங்கடம், வறுமை நீங்க ஶ்ரீநித்யா தேவியை வழிபடுங்கள்

அனைத்து சக்கரங்களின் தாய்  சக்கரமாக  போற்றப்படுவது,  ஆதிசங்கரரால் போற்றி, புகழ்ந்து உருவாக்கப்பட்ட  ஸ்ரீ சக்கரம்.  அன்னை ஆதிபராசக்தியானவள், ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி, காஞ்சி காமாட்சி, மூகாம்பிகை என பல அவதாரங்களை  எடுத்த போது, ஆதிசங்கரர் ஸ்ரீ லலிதா  பரமேஸ்வரியை, ஸ்ரீ சக்ர ரூபத்தில் வழிபடும் முறையை உருவாக்கினார். இது ஸ்ரீ வித்யை என்று போற்றப்படுகிறது.

அந்த ஸ்ரீ சக்கரத்தில், 15 மைய முக்கோணத்தில் வீற்றிருந்து வாசம்  செய்யும், 15 தேவியர்களை,  திதி நித்யா தேவதைகள் என்று அழைக்கிறோம். இவர்கள் அனைவரும், லலிதாம்பிகையின்  அங்க தேவதைகள். இந்த சக்கரத்தில், பிந்து ஸ்தானம் என்னும் இடத்தில், தேவி காமேஸ்வரனோடு இணைந்து, காமேஸ்வரியாக அருள்தருகிறாள்.

இந்த முக்கோணத்தின், மூன்று புறமும், பக்கத்துக்கு, ஐந்து நித்யா தேவிகள் அமர்ந்து அருள்புரிகின்றனர். காமேஸ்வரியின் அம்ருத கலைகள், தனித்தனியாக பிரிந்து,  ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொரு தேவியாக உருப்பெற்று,  அருள்புரிகின்றனர்.

திதியில் இருக்கும் சூனியத்தை நீக்கி, வாழ்க்கையில் வெற்றியும், வளமும்  பெறுவதற்கு இவர்களைத் தான்  வணங்க வேண்டும். இந்த திதி நித்யா தேவிகள் தான், இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் பொறுப்பை  ஏற்றிருக்கிறார்கள்.

கிருஷ்ணபட்சமான பெளர்ணமி தேய்பிறை, 15 நாட்களும், சுக்ல பட்சமான வளர்பிறை அமாவாசை,  15 நாட்களும் என மாதத்திற்கு இரண்டு நாட்கள் இந்த நித்யாதேவிகள்  பிரபஞ்சத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

முன்னோர்களுக்கும், தெய்வங்களுக்கும் வழிபாடுகளை மேற்கொள்ளும் நாம், இந்த பிரபஞ்சத்தைக் காக்கும் திதி நித்யா தேவதைகளை வழிபடுவதில்லை. அவர்களைப் பற்றி அறியாமல், வழிபடவே மறந்துவிடுகிறோம்.

திதி நித்யா தேவிகளை வணங்காமல் என்ன பரிகாரம் செய்தாலும், உரிய பலனை எப்படி பெற முடியும்? பிரபஞ்சத்தைக் காக்கும் தேவிகள்  நம்மையும்  காக்கிறார்களே!

ஸ்ரீ லலிதாம்பிகையின் திருவுருப்படத்தை வைத்து, பெளர்ணமி காலங்கள் வரை, அப்பிரதட்சண மாகவும், அமாவாசையன்று பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண் டும்.

உங்கள் பிறந்த திதியில் அந்தத் திதிக்குரிய நித்யாதேவியை அவளுக்குரிய நாட்களில் வணங்கினால்,  வாழ்வில் எண்ணிய எண்ணம் அனைத்தும் ஈடேறும், தொட்டதெல்லாம் துலங்கும்.

திதிகளுக்குரிய நித்யாதேவியையும், அதற்குரிய மந்திரத்தையும் தேவிகள் மகிழ்ந்து அளிக்கும் அருளையும்  தினம் ஒன்றாகப் பார்க்கலாம்.

Sharing is caring!