சடாரி ஆசிர்வாதம் தலையெழுத்தையே தங்கமாக மாற்றும்

ஆலயத்துக்குள் சென்று மூலவரைத் தரிசிக்கும் போது முதலில் அவரது திருவடிகளைத் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆன்மிக பெரியவர்கள் கூறுகிறார்கள். இறைவனுடைய அருள் அவனது திருவடிகளில் தான் கொட்டிக் கிடக்கிறது என்பதால் அவனது திருவடிகளைத் தவறாமல் தரிசிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

விஷ்ணு தலங்களில் பக்தர்கள் வழிபாடு செய்து முடித்ததும் சடாரி வைக்கும் வழக்கம் உண்டு. இறைவனுடைய திருத்தலங்களை கிரீடம் போன்று அலங்கரித்து செய்திருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் விஷ்ணு  கோயிலைத் தரிசிக்கும் போதெல்லாம் வைக்கப்படும் சடாரி எத்தனை முறை நம் தலை மீது வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நம் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்பது ஐதிகம்.

இராமயணத்தில் கைகேயி பரதன் நாடாள வேண்டும் இராமன் காட்டுக்கு போக வேண்டும் என்று தசரத மன்னனிடம்  கோரிக்கை வைக்கிறாள். பரதனுக்கு விருப்பமில்லை என்றாலும் பரதன் அறியாமல் நிகழ்ந்த நிகழ்வு இது என்பதால் நாடு திரும்பிய பரதன் பதறினான்.

கைகேயியிடம் கோபம் கொண்டு இராமனைக் காண காட்டிற்கு வந்தான். இராமனைக் கண்டதும் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டு கைகூப்பி மீண்டும் அயோத்தி வந்து நாடாள  வேண்டும் என்று கேட்கிறான்.. இராமர் தாய், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவது அவர்களது பிள்ளைகளின் கடமை என்று கூறி மறுத்துவிடுவதோடு உடன் இருக்கும் பரதனையும் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப கோருகிறார். நீங்கள் இல்லாத சிம்மாசனத்தில் நான் அமரமாட்டேன். நீங்கள் இல்லையென்றாலும் உங்கள் திருவடிகளைச் சுமந்தி ருக்கும் பாதுகைகளை மட்டும் கொடுங்கள் என்று ஸ்ரீ இராமனின் பாதுகைகளைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் வைத்து பூஜிக்கிறான்.

இராம இராஜ்ஜியத்தை விட பவித்ரமாக இருந்தது பாதுகா ராஜ்ஜியம் என்றால் இறைவனது திருவடிகளுக்கு எவ்வளவு சக்தி உண்டு என்பதை யூகித்து கொள்ளுங்கள். வைணவப் பெரியவரான ஸ்ரீவேதாந்த தேசிகர்  ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டுள்ள இறைவனின் திருவடிகளை மையமாக வைத்து பாதுகா சஹஸ்ரம் என்ற ஸ்லோகத்தை எழுதியிருக்கிறார்.

மக்களின் தலையெழுத்துகள் துன்பக் கடலில் ஆழ்வது போல் இருந்தாலும் இறைவனது திருவடிகளைக் கொண்ட சடாரியைத் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்யும் போது தலைகீழாக இருக்கும் தலையெழுத்தும் நேராக  நிமிர்ந்து வாழ்க்கையை பூரணத்துவம் ஆக்குகிறது. இனி விஷ்ணு கோயில் சென்றால் மறக்காமல் சடாரி வைத்து திரும்புங்கள். தலையெழுத்து வாழ்க்கையைத் தங்க மாக மாற்றும்.

Sharing is caring!