சத்துள்ள பாலை தான் குடிக்கிறீர்களா?

அன்றாடம் காலை பொழுதை துவங்கும் போதே ஒரு கப் காஃபி/ டீ  இல்லாமல் பொழுது விடிவதில்லை. இரவு நேரங்களில் ஒரு கப் பாலில்லாமலும் உறங்க செல்வதில்லை. காரணம் பாலில் இருக்கும் கால்சியம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்பெற செய்கிறது. பற்களை பாதுகாக்கிறது. எலும்பு தேய்மானத்தைத் தடுத்து நிறுத்துகிறது என்பதால் தான். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்குத் தான் கால்சியம் சத்துக்கள் அதிகமாக வேண்டும் என்று மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். அன்றாடம் 500 கிராம் அளவு பால் அவசியம் என்கிறார்கள்.

சத்து அதிகமுள்ள பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்கள் சுவையாக இருப்பதால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். பாலில் இருந்து பெறப்படும் தயிர், மோர், வெண்ணெய், நெய் என்று அனைத்துமே சத்துக்கள் நிறைந்தவை. பாலில் தரமான நல்ல புரதம், கால்சியம், கொழுப்பு, மாவுச்சத்து, வைட்டமின்கள் பி1,  பி2,பி12, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்த சத்துக்கள் எல்லாமே உடலுக்கு அப்படியே கிடைக்க வேண்டும். ஆனால் காய்ச்சிய பாலை திரும்ப திரும்ப காய்ச்சுவதால் இதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடுகிறது.

பால் வாங்கியதும் நுரைத்து வரும் வரை காய்ச்சும் போது அதில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியாக்கள், நுண் கிருமிகள் அழிந்துவிடும். நுரைத்து வரும் பால் பாத்திரத்தில் கரண்டி போட்டி 10 நிமிடங்கள் வரை சூடாக்கினாலே போதுமானது. 100 டிகிசி செல்சியஸ் வரை காய்ச்சும் போது பாலில் இருக்கும் கிருமிகள் அழியும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

ஏற்கனவே காய்ச்சிய பாலை மீண்டும் சூடுபடுத்தும் போது அதில் இருக்கும் சத்துகள் ஆவியாகிவிடும். கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் தான் பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் அத்தகைய கால்சியம் அடிக்கடி காய்ச்சப்படும் பாலில் வீணாகிறது என்பதே உண்மை. பசும்பாலுக்கு மட்டுமல்ல பாக்கெட் பாலுக்கும் இது பொருந்தும்.

இன்று பாக்கெட் பால் தான் அதிகம் பயன்படுத்துகிறோம். டோன்ட் மில்க்,  பாஸ் டரைஸ்டு மில்க் என்று பதப்படுத்தி வரும் பாக்கெட் பாலில் தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு வருகிறது. அதனால் அதை நுரைத்து வரும் வரை காய்ச்ச தேவையில்லை. 10 நிமிடங்கள் வரை  சூடு செய்தாலே போதுமானது.

பசும்பாலாக இருந்தாலும், பாக்கெட் பாலாக இருந்தாலும் இரு முறை சூடுபடுத்தினாலே போதுமானது. பாலை காய்ச்சியதும் ஆறவைத்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான போது வேண்டிய மட்டும் எடுத்து பயன்படுத்தலாம். அப்போதுதான் பாலில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

Sharing is caring!