சந்தோஷத்தையும் சஞ்சலத்தையும் கொண்டிருக்கும் நட்சத்திரக்காரர்கள் நீங்கள்..

குருபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட 3-வது நட்சத்திரம் பூரட்டாதி நட்சத்திரம். பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் கும்பராசியையும்,  நான்காம் பாதம் மீன ராசியையும் கொண்டிருக்கும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு.

பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் செவ்வாயை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். செய்யும் தொழிலிலும் பணியிடங்களிலும் ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். மன உறுதி கொண்டவர்களாக இருப்பீர்கள். கெளரவத்துடன் வாழ விரும்புவீர்கள். சமூகத்தில் எல்லோரும் உங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று விரும்புவீர்கள். எதிர்காலத்தைத் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். ஆடை ஆபரணங்களில் புதுமையை விரும்புவீர்கள். குடும்பத்திலும் வெளியிடங்களிலும் சச்சரவுகளை விரும்பமாட்டீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் சுக்கிரனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். எப்போதும் சுகபோகமாக வாழ ஆசைப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் உணவுகளில் கூட உயர்ந்த வகையையே விரும்புவீர்கள். பல துறைகள் கற்று சிறந்துவிளங்குவீர்கள். பழகுவதற்கு இனிமையானவர்களான உங்களைச் சுற்றி எப்போதும் நட்பு வட்டம் இருக்கும். எதையும் எதிர்பார்த்து உதவி செய்ய மாட்டீர்கள். குடும்பத்தில் அன்பு செலுத்தினாலும் கண்டிப்பு காட்டவும் தயங்கமாட்டீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் புதனை அதிபதியாக கொண்டவர்கள். அன்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்னும் கொள்கையை கொண்டிருப்பீர்கள். அதிகாரம் செலுத்தியெல்லாம் உங்களைப் பணிய வைக்க முடியாது. வாழ்வில் தடைகள் பல சந்தித்தாலும் அத்தனையும் தகர்த்தெறியும் வரை ஓயமாட்டீர்கள். குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருக்க விரும்புவீர்கள். உங்களை நம்பி வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்ப மாட்டீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சந்திரனை அம்சமாக கொண்டவர்களாக விளங்குவீர்கள். பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எல்லோரும் விரும்பும்படி உயர்ந்த கொள்கைகளைக் கொண்டிருப்பீர்கள். குடும்பத்துடன் இணக்கமாக நடந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கையோடு பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களான நீங்கள். சில நேரம் சந்தோஷத்துடனும் சில நேரம் சஞ்சலத்துடனுமே கழிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் குறைவிருக்காது. எதிர்கால தேவைக்கு திட்டமிட்டு சேமிப்பீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றிபெறும் வரை ஓய மாட்டீர்கள். உங்களிடம் வாதம் செய்பவரை தோற்று போக செய்வீர்கள். இறைபக்தியில் இயல்பாகவே நாட்டம் கொண்டிருப்பீர்கள். எளிமையான குணத்தைக் கொண்டிருப்பீர்கள்.

Sharing is caring!