சரியாக தூக்கம் வரவில்லையா? உங்களுக்கான தீர்வு இதோ

ஆழ்ந்த உறக்கம் இன்மை அல்லது தொடர்ந்து தூங்க முடியாமல் போவதையே  “தூக்கமின்மை” என்கிறோம். இதனால், பகல்  நேரங்களில் சரிவர செயல்பட முடியாமல் சோர்வாக காணப்படுவதுடன், விரைவிலேயே தீவிர உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடலாம்.  ஏறத்தாழ, ஒவ்வொரு ஆண்டும் 64 மில்லியன் அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாகவும், தூக்கமின்மை, ஆண்களைவிட பெண்களிடத்தில் 41% அதிகம் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறை இதுகுறித்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுவாக தூக்கமின்மை, அது ஏற்படும் நேரங்களை பொருத்து வகைபடுத்தப்படுகிறது.

நிலையற்ற தூக்கமின்மை – இது இரவின் முதல் பாதியில் தூங்குவதற்கு சிரமப்படுவ‌து. இதனால் மன அழுத்த பிரச்னைக்கு ஆளாக நேரிடும்.

நள்ளிரவில் விழிப்பவர் மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது,  இது வலிப்பு நோய்களுக்கு ஆளாக்க கூடியது.

பகல்பொழுது முழுவதும் கடின உடல் உழைப்பை மேற்கொண்டு , உடலை  சோர்வாக்குவதும், காபி போன்ற பானங்களை அளவாக எடுத்துக்கொள்வதும், புகைபிடித்தல், இரவில் மது அருந்துவதை தவிர்ப்பதும், மன அழுத்ததை குறைப்பதற்கான யோகா, தியானம் போன்றவற்றை செய்வதனால், தூக்கமின்மை பிரச்னையை குறைக்கலாம் என்கிறது, பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு.

தூக்கமின்மையை குறைப்பதற்கான சில வீட்டு மருத்துவ  குறிப்பு:

புதினா பொடியை தண்ணீரில்போட்டு 10-15 நிமிடங்கள்  கொதிக்கவிட்டு வெத்துவெதுப்பாக அருந்தினால் தூக்கம் நன்றாக வ‌ரும்.

தூங்க செல்வதற்கு முன்  சூடான பால் அருந்துவது தூக்கமின்மையை கட்டுக்குள் கொண்டுவரும்.

பாதாம் பால் அருந்துவதால், மூளையில் சுரக்கும் மெலடோனின் அளவு சீராகி, நல்ல உறக்கத்தைப்பெற முடியும்.

வாழைப்பழத்துடன் சீரகப்பொடியை கலந்து உட்கொள்ள தூக்கமின்மை நீங்கும்.

தூங்க செல்வதற்கு முன், கால் பாதங்களில் நல்லெண்ணையை தேய்த்து, காலுறை அணிந்து தூங்கினால் நல்ல தூக்கத்தை பெற முடியும்.

ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சை ஆகிய பழங்களும் நல்ல தூக்கத்தை பெற உதவும்.

வெங்காயத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து, இரவு உணவோடு சாப்பிட வேண்டும்.

தலையணைக்கு  அடியில் மருதாணி செடியின்  பூக்களை  வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்.

கொத்தமல்லியுடன்,  கசகசா சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் தூக்கமின்மையில் இருந்து விடுபடலாம்.

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே இரவில்  எடுத்துக் கொள்ள வேண்டும்.

மனதை அமைதியாக வைத்துக்கொள்ளும் தியானம், யோகா போன்றவற்றை இரவில் மேற்கொள்வதால் நல்ல தூக்கத்தை பெற முடியும்.

Sharing is caring!