சரியான அளவு மெட்டபாலிசத்தை பெற்று, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க என்ன செய்யலாம்

மெட்டபாலிசம் என்பது வளர்சிதை மாற்றத்திற்காக இயற்கையாக உடலில் உண்டாகும் ஒருவித வேதியியல் மாற்றமாகும். இது உடலின் வளர் சிதை மாற்றத்திற்கும், உணவு சரியான முறையில் செரிமானம் அடைந்து உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற பெரிதும் உதவுவது.

இந்த மெட்டபாலிச ஆற்றல் குறைந்தால் உடல் சோர்வு, எந்த வேலையிலும் கவனமின்மை உடல் எடை கூடுதல், அல்லது உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

பொதுவாக வயது முதிற்விக்கு பின்னர் ஏற்படும் மெட்டபாலிச மாற்றம், இன்றைய சூழலில் சில வாழ்க்கை முறைகளை பின்பற்றாமல் இருப்பதால், அனைத்து வயதினருக்கும் மெட்டபாலிச அளவில் மாற்றம் ஏற்படுகிறது. இவ்வாறான மாற்றத்திற்கு காரண‌மானவற்றை பார்க்கலாம்.

போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை

உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பதனால் மெட்டபாலிச அளவில் மாற்றம் ஏற்படும். அதாவது ஒருநாளில் 6லிருந்து 7 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். இதனால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதுடன் மெட்டபாலிச அளவையும் அதிகப்படுத்தும். உணவுக்கு முன்னர் அருந்தும் நீரானது அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தி உடல் எடை குறைவதற்கு உதவும்.

உணவு இடைவெளியை பின்பற்றாமை

சராசரியாக ஒரு நாளில் 4லிருந்து 6 முறை உணவு உட்கொள்ள வேண்டும்.அவ்வாறு உட்கொள்ளாத பட்சத்தில், மெட்டபாலிச அளவு குறைவதுடன் கொழுப்பு உடலில் படிவதற்கான வாய்ப்பையும் அதிகப்படுத்துகிறது. உணவை தவிர்த்தல் வெகுவாக உடல் வளர்சிதை மாற்றத்தில் குறைபாட்டை ஏற்படுத்த கூடும்.

காலை உணவை தவிர்த்தல்

காலை சாப்பிடும் உணவே அன்றைய நாளில் சுரக்கவிருகும் மெட்டபாலிச அளவை நிர்ணயிக்கிறது. அதன்படி காலை உணவை தவிர்ப்பதோ அல்லது நேரம் தவறி உட்கொள்வதோ மெட்டபாலிச அளவில் முறையற்ற மாற்றத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு எடுத்துகொள்ள வேண்டும் என்பதால், காலை உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

டிரான்ஸ் கொழுப்பு உள்ள திண்பண்டங்களை எடுத்துக்கொள்வது

பிஸ்கெட்டுகள், ப்ரட், மிட்டாய் வகைகள், ஃபாஸ்ட் புட், கேக், ஜங் புட், மைக்ரோவேவ் உணவுகள், உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகள் என வெளியில் சாப்பிடும் அனைத்து வித உணவுகளும் டிரான்ஸ் கொழுப்பு உணவுகளில் அடங்கும். இந்த உணவுகளை சாப்பிடுவதனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதுடன் மெட்டபாலிச அளவிலும் மாற்றங்கள் ஏற்படும்.

உடற் பயிற்சி இன்மை

வாரத்தில் 6 நாட்களாவது சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும், ஒருநாளில் 2லிருந்து 3 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும், முடிந்த வரை படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும். இது போன்ற சின்ன சின்ன பயிற்சிகளால் உங்களது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுக்க முடிவதுடனும், மெட்டபாலிச அளவையும் சமமாக வைத்து கொள்ள முடியும்.

சரியான அளவு தூக்கம்

ஆய்வின் படி சராசரியாக ஒருவர் 6லிருந்து 7 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும் அவ்வாறு தூங்காத பட்சத்தில் வயிற்றை சுற்றி கொழுப்பு அதிகளவில் சேருமாம். விரைவாக தூங்கி அதிகாலை சீக்கிரம் எழுவதால், மெட்டபாலிச அளவு சமனாக இருக்கும் என்கிறது ஆய்வு.

நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளல்

நார்ச்சத்துள்ள பழங்கள் காய்கறிகளை எடுத்துக்கொள்வதால் 30 சதவீதம் கொழுப்புக்களை எரிக்க முடியும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.ஒரு நாளைக்கு குறைந்தது 25 கிராம் அளவிற்காவது நார்ச்சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுதல்

புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இரத்த ஓட்டத்தில் இன்சுலின் சரியான அளவு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. சராசரியாக ஒவ்வொரு நாளும் குறைந்தது 70 கிராம் அல்லது அதைவிட அதிக‌ அளவில் புரதம் உட்கொள்ள வேண்டும்.

மாலை நேர உடற்பயிற்சி

பலருக்கு மாலை நேரங்களில் மெட்டபாலிச அளவு குறைவாகவே இருக்கும். அந்த நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். அதிலும் இரவு உணவிற்கு முன்னர் செய்யப்படும் உடற்பயிற்சியால் இரவு உணவு முறையாக செரிமானம் அடைந்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

Sharing is caring!