சருமப் பிரச்சனைகள் தீர்க்கும் பானுஸப்தமி

தான தர்மங்களை செய்வதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும், வீட்டில் மகிழ்ச்சி நிலைக்க ஹோமங்களும், மந்திரங்களும் ஜெபிப்பதும் எப்போதும் பயன் தரக்கூடியவை. இவை அனைத்தையும் 1000 நாட்கள் தொடர்ந்து செய்து அடையும் பலனை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்தாலே போதும். அதற்கான பலன் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது இந்த நாள் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க நாளை நாம் தவறவிடலாமா? அத்தகைய சிறப்பு மிக்க நாள் இன்று.

ஒவ்வொரு தினமும் ஏதோ ஒரு வகையில் சிறப்புமிக்க நாள் தான். ஞாயிற்றுக்கிழமை ஆதவனுக்கு உகந்த நாள். ஆதவனுக்கு பானு என்றொரு பெயரும் உண்டு. இதனுடன் ஷஷ்டி திதி இணைந்து வந்தால் பானுஷஷ்டி என்றும், சப்தமி திதி இணைந்து வந்தால் பானுஸப்தமி என்றும் அழைக்கப்படுகிறது. ஸப்தமி என்பது 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள். இவற்றை நாம் திதி என்று அழைக்கிறோம். அமாவாசை அடுத்த சுக்கிலபட்சம் வளர்பிறைக் காலத்தில் வரும் ஏழாம் நாளும் பெளர்ணமி அடுத்த கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறைக் காலத்தில் வரும்  ஏழாம் நாளும், ஸப்தமி திதி 30 நாட்கள் சுழற்சி முறையில் இரண்டு முறை வருகிறது. வட மொழியில் ஸப்த என்றால் ஏழு என்று பொருள். இத் திதி வளர்பிறையிலும், தேய்பிறையிலும் ஏழாம் நாளன்று வருவதால் இதற்கு ஸப்தமி திதி என்று பெயர். ஆக பானு என்று அழைக்கப்படும் சூரியனுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஸப்தமி திதி சேர்ந்து வருவது விசேஷத் திலும் விசேஷம். ரத ஸப்தமி போல் பானு ஸப்தமியும் மிகவும் சிறப்பான நாளாக நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டது. பானு ஸப்தமியை பானு யோகம் என்றும் சொல்வார்கள். சூரிய பகவானின் புதல்வன் சனீஸ்வர மூர்த்தி தன் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த நாள் இந்நாள்தான். இன்றைய தினத்தில் ஏழு குதிரைகளைப் பூட்டி பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியன் இந்த பானுஸப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக படரவிடுகிறார் என்பது ஐதிகம்.

வேதகாலம் முதலே சூரியபகவான் உலகை இயக்கும் உயிர்நாடியாக இருக்கிறார். நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் சூரியபகவானை மூன்று வித அக்னியில் ஒன்றாக கூறுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து ஒளிபெற செய்பவனாக ஆதவன் விளங்குவதாக யஜீர்வேதம் கூறுகிறது. இதய நோயிலிருந்து விடுபடவைக்கும் ஆற்றல் சூரியனுக்கு உண்டு என்று அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதிகாலையில் எழுந்து புண்ணிய நதிகளில் குளித்து சூரிய நமஸ்காரம் செய்தால் மிக சிறப்பான பலன்களை பெறலாம்.  உயர்பதவிகளையும், பணியிடத்தில் சிரமங்களையும் அனுபவிப்பவர்கள் இன்றைய தினம் காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்து, கோதுமை மாவில் செய்த இனிப்பு பலகாரங்களை தானம் செய்யலாம். இன்றைய தினம் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்தால் கண்களில் உள்ள கோளாறுகள் நீங்கும். பானு ஸப்தமியன்று அதிகாலையில் சூரியனை வழிபட்டால் சருமம் சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இன்றைய தினம் பித்ருக்கள் தோஷம் இருப்பவர்கள் தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பித்ருக்கள் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவருடன் தொடர்புடையவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு சூட்சும வடிவில்  இருப்பவர்கள். பித்ருக்களை தர்ப்பணம் வாயிலாகவும், பிண்டம் வாயிலாகவும் வழிபடுகிறோம். சூரியனுக்கு அப்பால் உள்ள பித்ருலோகத்தில் உள்ள பித்ருக்கள் அங்கிருந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள். சூரிய கிரகணம் முடிந்து பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஒப்பானது இன்றைய தினம் பிதுர் தர்ப்பணம் செய்வது. இந்த தினத்தில் சிரார்த்தம் செய்தால் வருத்தமுற்று இருக்கும் பித்ருக்கள் கூட மனம்மகிழ்ந்து நமக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள் என்று முன்னோர்கள் நம்பினார்கள். இன்று போல் ஞாயிறும் ஸப்தமியும் இணைந்து வரும் பானுஸப்தமி நாளை மறவாமல் அதிகாலையில் ஆதவனையும், நம் முன்னோர்களையும் வணங்கி வாழ்வதற்குரிய சிறப்பான பலன்களை பெறுவோம்.

Sharing is caring!