சரும நோய் போக்கும் மருதாணி

மருதாணி  ஓர் ஆயுர்வேத மூலிகையாகும். பெண்களின் கைகளுக்கு  அழகிய வர்ணம் தீட்டும் இது உடலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது என்று தெரியுமா? மருதாணி பெண்களின் அனைத்து சுபக்காலங்களிலும் உடன் பயணித்து மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கி நறுமணமாக்கும். மருதாணி ஓர் ஆயுர்வேத மூலிகை,பெண்களின் கைகளுக்கு அழகிய வர்ணம் தீட்டும் இது உடலுக்கும் பல நன்மைகளைத் தரும். இது புதர் செடியாகவோ, குறுமரமாகவோ காணப்படும். நடுத்தரமான அல்லது பெரிய அதிகமான கிளைகளுடன் கூடிய தாவரமாகும். மருதாணி மலர்கள் சிறியவை. வெள்ளை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறங்களில் இருக்கும். மருதாணி பொதுவாக வெப்பத்தன்மையும் துவர்ப்புச் சுவையையும் கொண்டது..

மருதாணி இலைகளுடன், கொட்டைப் பாக்கு, புளி வைத்து மைய அரைத்து கை மற்றும் கால்களில் வைத்து காயவைத்து எடுத்தால் அழகாகச் சிவந்திருக்கும். அழகுக்கு மட்டுமல்ல…சேற்றுப்புண், நகச்சுத்தி, அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றைக் குணமாக்கும் வல்லமை கொண்டது. மருதாணி வைத்தால் நமது நகங்கள் அழகுடன் பளபளப்பாகும்.நகங்கள் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும்.

மருதாணி வேர், நோய் நீக்கி என்று சொல்லலாம். இது உடலைத் தேற்றும். மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணைப் போல் செய்து படுத்து வந்தால் தூக்க மாத்திரை தேவையில்லை. தலையில் உள்ள பேன்களும் குறையும்.

மருதாணி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதைத் தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாட்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டிப் பத்திரப்படுத்தி, தலையில் தடவி வந்தால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி யடையும்.

மருதாணி இலைக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து வாய்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் தீரும்.

உஷ்ணம் அதிகமிருப்பவர்கள் பாதத்தில் இரவில் மருதாணி இலை விழுதைத் தடவி உறங்கினால் உடல் உஷ்ணம் குறையும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை மருதாணியில் உள்ளதால் தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் மருதாணி விழுதைப் பயன்படுத்தலாம். வலியும் எரிச்சலும் குறையும்.

மருதாணியில் பல உடல் நன்மைகள் அடங்கியுள்ளது. அதனை ஆன்டி- பாக்டீரியல் பேஸ்ட் அல்லது ஆன்டி -பங்கல் பேஸ்ட்டாகப் பயன்படுத்தப்படுகிறது. முடி வளர்ச்சிக்கும் இதனைப் பயன்படுத்தலாம்.அனைத்து வகை தலை முடி பிரச்னைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதாணி இலைகளைப் பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த மருதாணி பேஸ்டைத் தலைமுடி யில் தடவினால் பொடுகு குறையும். கூந்தல் பள பளப்பாகும். நரை முடியை மறைக்கவும் இது பயன் படுகிறது.  ஆனால் சீரான முறையில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். செடியிலிருந்து பயன்படுத்தப்படும் மருதாணியே சிறந்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Sharing is caring!