சாதனை நிச்சயம்….கடவுளின் சோதனை புரிந்தால்

வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு, லஷ்மிதேவியின் சந்தேகத்தை  புன்னகைத்தப்படி தீர்த்துக்கொண்டிருந்தார். ‛‛தேவி… தொண்டைக்குள் வைத்து முழுங்கவும் முடியாமல், வெளியேற்றவும் முடியாமல் ஏன் அவஸ்தைப்படுகிறாய்?  என்ன வேண்டும் கேள்?” என்றார். ‛‛தாங்கள் என்னிடம் கோபித்துக்கொண்டால் என்ன செய்வது” என்று தயங்கினாள்…. ‛‛சரி.. நான் கோபம் கொள்ளவில்லை. உன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு என்னுடையதாகிறது. அதனால் தயங்காமல் கேள்”  என்று தூண்டினார்.

‛‛உங்களுக்கு என் மீது எவ்வளவு அன்பு இருக்கும்…” என்றாள் லஷ்மி தேவி.. ‛‛அடியேன் உனக்கு அடிமை அம்மையே… உன் மீது நான் கொண்ட அன்புக்கு எல்லையே இல்லை” என்றார். ”சுவாமி, கலியுகத்தில் தங்கள் பக்தன் ஒருவன் தங்கள் மீது அளவில்லா அன்பு கொண்டிருக்கிறான்.

ஆனால் அவனது குழந்தைகள் பசி, பட்டினி என்று நாட்களை கடத்துகிறார்கள்” என்றாள் செல்ல  கோபத்தோடு…

‛‛சரிதான் தேவி. அவனுக்கு நாம் ஏதாவது செய்யப்போனால் அவனுக்குத்தான்  கெடுதலாக முடியும்” என்றார் பகவான்.  ‛‛நீங்கள் செய்யும் நல்லதை அவன் உணர வேண்டிய அவசியம் இல்லை. அவன் போக்கில் அவனை விடுங்கள்”  என்றாள். சரி நீ இங்கேயே அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார் என்றார்.

நாராயணா என்னும் நாமத்தை சொல்லியபடி உள்ளே வந்தார் பக்தர். அவரைக் கண்ட மனைவி ‛‛இன்றும் எதுவும் கிடைக்கவில்லையா ?” என்றாள். ‛‛நாராயணன் படி அளப்பார். அவர் கொடுப்பதாக நினைத்தால் கூரையிலிருந்து  கூட செல்வம் கொட்டும்” என்றார்.

என்ன அதிசயம்…  பழைய கட்டடம் என்பதால் பிளந்திருந்த கூரை வழியே தங்கக் காசு ஒன்று விழுந்தது. கணவனும், மனைவியும் ஓடி வந்து பார்த்தார்கள். தங்கக்  காசைக் கண்ட அவர்களது கண்கள் மின்னியது. ‛‛பார்த்தீர் களா நாராயணன் படியளந்துவிட்டார்” என்றாள் அவர் மனைவி மகிழ்ந்தபடி…

இப்படியே தினம் ஒரு காசாக பிளவுப்பட்ட கூரையிலிருந்து வந்து விழுந்தது.  பக்தனின் வறுமை தீர்ந்தது. செல்வம் பெருகியது. பக்தி குறைந்தது..
செல்வத்தால் மிதந்த பக்தன் நாராயணனை மறந்தான்.  வறுமையில் இருந்தாலும் மகிழ்ச்சியோடு உதவி செய்தவன், குறையாத செல்வம் கிடைத்தும் யாருக்கும் உதவி செய்யவில்லை. மனிதனைப் போலவா கடவுள். அவர் கொடுக்க ஆரம்பித்ததை நிறுத்தவேயில்லை.

செல்வத்தைக் காண காண, ‛நாராயணா’  என்னும் நாமம் சொன்ன பக்தன்  அதை மறந்து மதியிழந்தான். உலகில் எண்ணற்ற சுகங்கள் இருக்க  எப்படி இத்தனை நாட்கள் இதை  மறந்தோம் என்று தன்னையே நொந்து கொண்டான்.  வாழ்வின் இறுதிவரை இப்படித்தான் வாழ்வேன் என்று அப்ப டியே வாழ்ந்தும்  இறந்தான்.  இறந்தவனை  எமனிடம் அழைத்து வந்தார்கள்.

தேவி,  மஹாவிஷ்ணுவைப் பார்த்தாள். ”அவன் வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகளை அனுபவித்தாலும் அத்தகைய சோதனை யாருக்கும் வரக்கூடாது என்று  வேண்டினான். அவனுடய  உழைப்புக்கான பலனை அவன் அடைந்து அனைவருக்கும் முன்னுதாரணமான வாழ்க்கை வாழ்ந்து இறுதியில் சொர்க்க லோகத்துக்கு செல்ல வேண்டியவன்…

உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவனை  விட்டுவிட்டேன்.  அதனால் அவனது முடிவும் இப்படி ஆயிற்று. ஆனால் அவன் தலையெழுத்தும் இப்படித் தான் இருக்க வேண்டும் என்றிருக்கிறது.  உனக்குப் புரிந்ததா?” என்றார்.

நாம் நல் வழியில் செல்லும் போது, அதிலிருந்து மாறுகிறோமா என்பதை சோதிக்க பல நிகழ்வுகள் நடக்கும். அவற்றை புரிந்து நல்லனவற்றை மட்டுமே நாடி நடப்பதுதான் உண்மையான பக்தனுக்கு அழகு. உலகே  நம் கைக்குள் அடங்கினாலும், நாம் கடவுளுக்குள் அடக்கம்தான் என்பதை உணர வேண்டும்.

Sharing is caring!