சாபம் பலிக்குமா? பரிகாரம் உண்டா?

சாபம் விட்டால் பலிக்குமா? அப்படியே சாபம் விட்டாலும் அவர்கள் என்ன முனிவர்களா? ரிஷிகளா? அப்படியே பலிப்பதற்கு? அதுவும் 21 ஆம் நூற்றாண்டில் அதிவேக விஞ்ஞான வளர்ச்சியில் வானத்தையே தொட்டுவிடுகிறோம்… இப்படியெல்லாம் சிலர் அலட்சியமாக  பேசுவார்கள் தான். ஆனால் மனம் நொந்து போனவர்கள் தங்கள் மனதை நோகச்செய்பவர்களை நோக்கி அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து சபிக்கும் சொல் நிச்சயம் பலித்துவிடும் என்பது நூறுசதவீத உண்மை.

முன்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், யோகிகள் தங்களைக் கோபம் கொள்ள வைத்தவர்களை சபித்து விடுவார்கள். மனிதனாக இருந்த நீ மாடாக கடப்பது… மரமாக வளர்வது… இப்படி அவர்கள் சபித்து, அவை பலித்தும் இருக்கின்றன. இதுபோல் கணக்கிலடங்கா கதைகளை கேட்டிருக்கிறோம்.அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்கிறார் தெய்வப்புலவர். இதிலிருந்து சாபத்துக்கு வலிமை உண்டு என்பதை அறியலாம். அதனால் தான் முன்னோர்கள் யாருக்கும் உதவி செய்ய முடியவில்லையென்றாலும் பரவாயில்லை,உபத்திரவம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். கண் முன்னால் நன்றாக வாழ்ந்த ஒருவன்  வீழும்போது நிச்சயம் அவன் விமர்சிக்கப்படுவான். “எத்தனை பேரை ஏமாற்றி யாருடைய சாபத்தைப் பெற்றானோ இன்று இத்தகைய நிலைக்கு ஆளாகியிருக்கிறான் ” மிகவும் சகஜமாக வரும் வார்த்தைகள் இவை. அன்றாடம் நம் காதால் கேட்கக் கூடிய வார்த்தைகள் தான். ஆனால் ஆழ்ந்து யோசித்தால் சாபம் வாங்குவது சாவின் விளிம்புக்கு சென்று திரும்புவதற்கு சமம் என்று கூட சொல்லலாம். ஓம் என்னும் வார்த்தை எப்படி நேர்மறை சக்தி மிகுந்த ஆற்றலான வார்த்தையாக கருதப்படுகிறதோ அதுபோல் சாப வார்த்தைகள் எதிர்மறை ஆற்றல் அதிகம் மிகுந்த வார்த்தைகள்.

வீட்டிலும், உறவினர்களிடமும், சுற்றத்திலும் ஒருவர் மற்றொருவர் மனம் நோகும்படி வார்த்தைகளாலோ செயல்களாலோ அதீத துன்புறுத்தலுக்கு உள்ளாகும் போது பொறுக்க முடியாத அவரால்,தன்னை துன்புறுத்துபவர்களை தண்டிக்கவும் இயலாத நிலையில் உள்ளம் நொறுங்க, கண்களில் கண்ணீர் பெருக, தொண்டையில் வார்த்தைகள் வராமல் தவிக்கும்போது பாதிப்புக்குள்ளாக்கியவர்களை ”எனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போல் உனக்கும் நேரும் என்று அவர்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கேற்ப ஏதேனும் ஒரு  சாபத்தை சபிப்பார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் சாபம் இடுவதும், அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் மகா பாவம். அத்தகைய நிலையில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் அதனினும் மிகுந்த பாவத்தைச் செய்தவர்கள் என்று சொல்லலாம். இவையெல்லாம் நம் கண்முன்னாடி பார்க்கும் சாபங்கள்.

ஒருவர் செய்த துரோகத்தை நினைக்கும் போது மனமும் எண்ணமும் அதைப் பற்றிய சிந்தனையில் மட்டுமே இருக்கிறது. மீண்டும் மீண்டும் அதை நினைத்து நாம் மருகி அதற்கு ஒரு சக்தியை உண்டாக்கிவிடுகிறோம். நமது முழு எண்ணமும் அவர் மீதான கோபத்தில் தாக்குண்டு இருக்கிறது.தியானம் செய்யும் போது எப்படி ஒரே நோக்கோடு இறைவனை தியானிக்கிறோமோ அதே  தீவிரத்துடன் நமக்கு துரோகம் செய்தவர்களைக் காணும் போது வரும் கோபமும் தீவிரமாகிறது. அப்போது வெளிப்படும் வார்த்தைகள் சக்தி மிகுந்ததாக பலிக்கும் வகையில் இருக்கிறது,.

பெண்சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம் என சாபத்தின் வகைகள் நிறைய உண்டு. சாபத்தைப் பெற்றவர்கள் அத்தகைய தவறை உண்மையாக செய்திருந்தால் நிச்சயம் அவர்கள் தங்கள் மனம், உடல் அல்லது வம்சம் ரீதியாக பிரச்னைகளை அனுபவிப்பார்கள். ஒருவரை சபித்து விட்டு பிறகு அவருடன் உறவு கொண்டு ஒட்டி வாழும்போது சாபம் சபித்தவரையே திருப்பி சேரும் என்ற நம்பிக்கையை முன்னோர்கள் கொண்டிருந்தார்கள். அதனாலேயே உறவுகளுக்குள் விரிசல் இல்லாமல் குறிப்பாக வாதங்களின் போது எதிர் மறையான வாக்குதல்களை ஈடுபடுத்தாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தனர்.

முன்னோர்கள் எவ்வித மூடநம்பிக்கையையும் நம் மீது திணிக்கவில்லை என்பதை ஆய்வாளர்கள் சபிக்கும் நிகழ்விலும் நிரூபித்து இருக்கின்றனர். ஆம் சாப வார்த்தைகள் அதிக சதவீதம் பலிக்கும் என்று கூறி அதற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார்கள். சாப வார்த்தைகளை உச்சரிக்கும் போதே தவறு செய்தவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அவரது மனதில் அவர் செய்த குற்றங்கள் உறுத்தி கொண்டே இருக்கும், வெளியில்  இயல்பாக காட்டிக்கொண்டாலும் மனரீதியாக அவர்கள் பலவீனமடையத் தொடங்குவார்கள். இது அவர்களை எத்தகைய செயலிலும் முன்னொக்கி அழைத்து செல்லாது. படிப்படியாக அவர்களை வேதனைக்கு உண்டாக்கும். இவைதான் காலப்போக்கில் அவர்களை அழிவுப்பாதைக்கும் கொண்டு செல்லும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சாபத்துக்கு பரிகாரம் உண்டா.. என்றால் அதற்கான பரிகாரம் நமது குலதெய்வ வழிபாடும், சிவ வழிபாடும் தான். அறிந்தும் அறியாமலும் நீங்கள் யாருக்கேனும் கொடுமை செய்ய நேர்ந்து விட்டால் உங்கள் குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து மனதார இனி இத்தகைய தவறை செய்யமாட்டேன் என்று வழிபடுங்கள். எத்தகைய சாபத்தையும் போக்கி நம்மை குலதெய்வ வழிபாடு காக்கும். எல்லாம் சரி… யார் சாபம் விட்டாலும் பலித்துவிடுமா? கெட்டவர்கள் கூட சாபம் இடமுடியுமா? நல்லவர்களுக்கு மட்டுமே அத்தகைய வாக்கு பலிக்குமா என்று தானே கேட்கிறீர்கள். ஒருவர் நல்லவராக இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையாலோ, பிறருக்கு உடந்தையாகவோ தன்னை காத்துக்கொள்ளவோ  உண்மையாக தவறு செய்யும் பட்சத்தில் துன்பத்துக்கு ஆளானவரிடமிருந்து அழுது பதறிய நெஞ்சத்திலிருந்து விம்மி புடைத்து வெளியேறும்  சொல்லொணாத் துயர வார்த்தைகள் சாபமாக மாறி எத்தகைய வலிமையான மனிதனையும் அழித்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள். சபிக்கவும் செய்யாதீர்கள்.

Sharing is caring!