சாய்பாபாவின் ஊஞ்சல் படுக்கை!

ஷீரடியில் இருந்த கோயிலில் சனி, கணபதி, சங்கரர், சரஸ்வதி, மாருதி, கிராம தேவதைகள் அனைத்தும் இருந்தன. இவற்றையெல்லாம் தாத்யா பாட்டீல் என்னும் பக்தர் மூலமாகச் சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தினார் சாய்பாபா.
இரவுப் பொழுதில் தன்னுடன் படுத்து உறங்குவதற்கு மகல் சபதி மற்றும் தாத்யா பாட்டீல் ஆகிய இருவரை மட்டுமே பாபா அனுமதிப்பார். அவர்கள் தலைகளை தெற்குப் புறமாக வைத்துப் படுக்கக்கூடாது என்பார்.

ஹோமத்தைத் தனக்குத் தானே சுற்றி பிரதட்சணம் செய்வார் சாய்பாபா. அப்போது அவர் மந்திரங்களை உச்சரிப்பார். அவை அரேபி மற்றும் பொசிய மொழியில் மட்டுமே இருந்தது. சமஸ்கிருத மந்திரத்தை சாய்பாபா உச்சரித்ததே இல்லை என்றும் கூறுவர். சில சமயங்களில் சங்கு ஊதுவார். அப்போது ‘ஒம்” என்னும் ஒலி மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும், அழுத்தமாகவும் வெளிக்கிளம்பும். பிரார்த்தனையின் போது, காதுகளிலும், மூக்கிலும் மலர்களைச் செருகிக் காட்சியளிப்பார். தன் தலையிலும் மலரை அணிந்துகொள்வார்.

அவர் அமர்ந்துகொள்வதற்கென வெள்ளியிலான சிம்மாசனம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டியதே இல்லை. தனது பிரத்யேகமான சாக்குத் துணியிலேயே சாய்பாபா அமர்வார். மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் சாய்ந்து நின்று கொண்டு, அங்கு செல்வோரிடம் பேசுவார். அவரது பேச்சுக்கள் அனைத்துமே எளிதில் புரிந்து கொள்ள முடியாது, ஆனால் ஏராளமான அர்த்தங்கள் உள்பொதிந்ததாக இருக்கும்.
சாய்பாபா இரவில் படுத்து உறங்குவது ஒரு சாக்குத் துண்டை விரித்துதான். சாய்ந்து கொள்ள முதுகிற்கு ஒரு திண்டு மட்டும் உண்டு. பக்தர்கள் ஆசையுடன் அவர் படுத்து உறங்க மெத்தை வாங்கிக் கொடுத்தனர்.
ஆனால் அதனைப் புறக்கணித்துவிட்டார்.

நானா சாகேப் டாங்ளே என்ற பக்தர் சாய்பாபா படுத்துக்கொள்ள நான்குமுழ நீளமும், ஒரு முழ அகலமும் கொண்ட ஒரு மரப்பலகையை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதனைத் தரையில் அமர்த்தி அதன்மீது படுத்து உறங்குவார் என்று பார்த்தால், சாய்பாபா அவ்வாறு செய்யாமல் ஏமாற்றினார். மசூதியின் உத்தரத்தில் இற்றுப்போன கந்தல் துணியைக் கயிறாக்கி, அதனை ஊஞ்சல் போல் அமைத்துக்கொண்டார். ஊஞ்சலைத் தாங்க வேண்டுமென்றால் இரும்புக் கம்பிகளைத்தான் பயன்படுத்துவார்கள். அதுதான் பலமானதாகவும்,
மனித உடலைத் தாங்கும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். ஆனால் சாய்பாபாவோ துணியைக் கயிறாக்கி, அதிக பலமற்ற உத்திரத்தில் தொங்கவிட்டு….

இது பக்தர்கள் அனைவரின் அடிவயிற்றையும் கலக்கியது. சாய்பாபாவின் எடையை அந்த ஊஞ்சல் எப்படித் தாங்கப் போகிறது? மேலும், அந்த ஊஞ்சலின் நான்கு மூலைகளிலும் அகல் விளக்கு ஏற்றி
வைப்பார். அது இரவு முழுவதும் எரிந்து கொண்டே இருக்கும். அந்தக் காட்சி கண் கொள்ளாததாக இருக்கும். எனினும், சாய்பாபா அந்த ஊஞ்சலில்தான் படுத்து உறங்குவார். அவர்
எப்படி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த ஊஞ்சலில் ஏறுகிறார், இறங்குகிறார் என்பது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை வரவழைக்கும்.

Sharing is caring!