சாய்பாபாவுக்கு கங்கா அபிஷேகம் செய்த பக்தர்!

“மேகா “ என்பவர் சாய்பாபாவின் பக்தர். சாய்பாபா மீது அளவு கடந்த பக்திகொண்டவர். இவருக்கு ஒரு ஆசை.  மகர சங்கராந்தி  அன்று சாய்பாபாவை  கங்கை நீரால் அபிஷேகம் செய்து கண்குளிரக் காண ஆசைப்பட்டார்.

ஆனால் ,அதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த சாய்பாபா மேகாவின் அன்பு வலியுறுத்தலின் அழுத்தம் தாங்காமல் கடைசியாகச் சம்மதித்தார் .   இதனால் சந்தோஷமடைந்த  மேகா ,  அங்கிருந்த சுமார் 24 மைல் தொலைவில் இருந்த “கோமதி ஆற்றை”  நோக்கிச் சென்றார்.  ஒரு கலயத்தில் நீரை மொண்டு கொண்டு ஷீரடிக்கு வந்து சேர்ந்தார்.  சாய்பாபாவை  ஆசனம் ஒன்றில் அமரும்படிச் செய்தார் .  தான் கொண்டு வந்த கலயத்தை சாய்பாபாவின் அருகில் வைத்தார்.

அப்போது சாய்பாபா சொன்னார், “உனது அன்பை நான் மெச்சுகிறேன். ஆனால்,  கங்கா நீரை என் தலைக்கு மட்டுமே நீ ஊற்ற வேண்டும். உடலுக்கு ஊற்றவே கூடாது இதனைக் கண்டிப்பாக நீ மீறக் கூடாது”  என்று கட்டளையிட்டார்.    நீரை ஊற்றுவதற்கு சாய்பாபா சம்மதித்ததே பெரிய விஷயம்.   அப்படியிருக்கும் போது சாய்பாபாவின் கட்டளையை மீறுவது உசிதமா என்ன?  உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டார் மேகா.

கலயத்தைத் தூக்கி சாய்பாபாவின் தலையில் மட்டும் நீர் விழுமாறு பிடித்தார்.  அப்போது அவர் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார்.  மகர சங்கராந்தி அன்று சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வது போல அவரது மனத்தில் தோன்றியது சாய்பாபாவிடம் அளித்த வாக்குறுதியை மறந்தவராக , அப்படியே சாய்பாபாவின் தலை மட்டுமல்ல உடல் முழுவதும் நனைகிற மாதிரி நீரை ஊற்றிவிட்டார்.

நீர்  தீர்ந்த  பிறகு  தான்  மேகாவிற்குத்  தன்னுணர்வு வந்தது. ‘அய்யய்யோ, சாய்பாபாவின் கட்டளையை மீறி அவர் உடல் முழுவதும் தண்ணீர் விழுகிற மாதிரி நடந்து கொண்டு விட்டேனே! என்று பதறிப்போய் சாய்பாபாவை பார்த்தார் .
என்ன ஆச்சர்யம் !

சாய்பாபாவின் தலையில் மட்டுமே நீர் விழுந்து நனைத்திருந்தது  அவருடைய உடலில் தண்ணீர் படவே இல்லை.   உலர்ந்த நிலையிலேயே இருந்தது.  ஆக சாய்பாபா தன் பக்தரின் உணர்வுக்கு எந்த அளவிற்கு மதிப்பு கொடுத்திருக்கிறார் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது.
ஓம்ஸ்ரீசாய்ராம்!!!!

Sharing is caring!