சிவனடியார்களுக்கு இடர் ஏற்படாமல் காத்த எறிபத்த நாயனார்..

எறிபத்த நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். இவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தார். அங்குள்ள ஆனிலையப்பரை வணங்கி வருவதை தமது பேறாக எண்ணி வாழ்ந்தார். சிவனடியார்களுக்கு திருத்தொண்டு செய்வதை முக்கிய பணியாக மேற்கொண்டிருந்தார்.

அடியார்களைத் துன்புறுத்தினாலோ அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டாலோ அவர்களுக்கு தீங்கு உண்டாக்கியவர்களை தண்டிக்க செய்வார். இதற்காகவே பரசு என்னும் மழுப்படையைக் கையில் வைத்திருந்தார். அவர் வாழ்ந்த ஊரில் சிவகாமி அம்மையார் சிவபெருமானைத் தொழுது வருவதை விடாமல் பற்றி வந்தார்.

மகாநவமியின் முதல் நாள். சிவகாமி அம்மாள் அதிகாலையில் சரீரம் தூய்மை செய்து தோட்டத்தில் பெருமானுக்கு பூக்களைப் பறித்து கூடையில் வைத்து எம்பெருமானுக்கு எடுத்து வந்தார். அப்போது புகழ்ச்சோழன் பட்டத்து யானை ஆற்றில் நீராடி அழைத்து வரப்பட்டது. திடீரென்று மதம் பிடித்து பாகனுக்கு அடங்காமல் எதிரில் பூக்கூடையுடன் வந்த சிவகாமி அம்மையாரிடம் ஓடியது. அவரிடம் இருந்து பூக்கூடையை வாங்கி எறிந்தது. வயது முதிர்ந்த சிவகாமி அம்மையார் பெருமானுக்கு உரிய பூக்கள் கீழே சிதறியதைக் கண்டு மனம் பொறுக்காமல் யானையை கோபம் கொண்டு அடிக்க விரைந்தார் ஆனால் முதுமை காரணமாக கால் இடறி  ”சிவதா சிவதா” என்று கதறியபடி கீழே விழுந்தார்.

சிவகாமி அம்மையாரின் ஒலத்தை கேட்டு அங்குவந்த எறிபத்தர் அம்மையாரிடம் நடந்ததைக் கேட்டு கோபமுற்றார். ”எங்கே யானை?” என்று கேட்டார். சிவனின் சிரசில் சாற்ற வேண்டிய மலர்களை வீதியில் தள்ளிவிட்டு ”இந்த வீதி வழியாகத்தான் போகிறது” என்றார். ”அந்த யானை எப்படி பிழைக்கும்?” என்ற படி கையிலிருந்த மழுப்படையைக் கொண்டு யானை மீதிருந்த இரண்டு பாகனையும், உடன் சென்ற மூவரையும், யானையையும் வெட்டி வீழ்த்திய பிறகே கோபம் தணிந்தார். நடந்ததைக் கேள்வியுற்ற அரசர் இது எதிரிகளின் செயல்தான் என்று நான்கு வகை சேனைகளை அழைத்துக்கொண்டு அவ்விடம் வந்தார். ஆனால் அங்கு சிவனடியார் மட்டுமே நிற்பதைக் கண்டதும் குழப்பமுற்றார்.

அங்கிருந்தவர்கள் ஐவரையும் யானையையும் கொன்றவர் இவரே என்றதும் சிவனின் மீது பற்றுக்கொண்ட இந்த அடியார் யாருக்கும் துன்பத்தைக் கொடுக்க மாட்டார். அதர்ம வழியில் நடக்கவும் மாட்டார். என்னுடைய யானையும் யானை பாகர்களும்  மன்னிக்க முடியாத பிழைகளைச் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.

பிறகு எறிதத்தரிடம் மெதுவாக சென்றார். ”மலை போன்ற யானையை வெட்டி சாய்க்கும் அளவுக்கு உங்களுக்கு தீங்கிழைத்த யானையின் செயல் என்ன?” என்றார். எறிதத்தர் நடந்ததைக் கூறினார். சிவனடியாருக்கு செய்த தீங்குக்கு இந்த தண்டனை போதாது. இக்குற்றத்தை செய்த யானையின் உரிமைக்காரன் என்னும் முறையில் என்னையும் வெட்டி சாயுங்கள் என்று தமது உடைவாளை எறிபத்தனிடம் நீட்டினார்.

இதை வாங்காது போனால் நெறி தவறாமல் வாழும் மன்னனே தனது உயிரை மாய்த்துகொள்வார் என்று எண்ணினார். அவர்தம் பட்டத்து யானையையும், ஐந்து பாகர்களையும் கொன்று குவித்து தம்மையும் குற்றமுள்ளவர்களாக கருதி தன்னுயிரை கொடுக்க விரும்பும் மன்னனுக்கு தீங்கு செய்தேனே என்று மனம் வெதும்பி தனது உயிரை மாய்த்துக்கொள்ள மன்னரின் வாளை தன்னுடைய கழுத்துக்கு கொண்டு போனார்.

அப்போது சிவபெருமானின் குரல் அசரரீயாக ஒலித்தது. ”உங்கள் இருவரது அன்பு உள்ளத்தை உலகுக்கு வெளிப்படுத்தவேயாம் யானைக்கு மதம் பிடிக்க செய்தோம்” என்றார். அதோடு பூமியில் வீழ்ந்து கிடந்த யானையும், ஐவரையும் உயிர்த்தெழ செய்தார். சிவகாமி அம்மையாரின் பூக்கூடையும் நறுமணமிக்க மலர்களால் நிறைந்து வழிந்தது.

யானைப் பாகர்களின் வேண்டுதலுக்கு இணங்க புகழ்ச்சோழர் எறிபத்தரை வணங்கி பட்டத்து யானை மீது மேலேறி அரண்மனைக்கு சென்றார். சிவகாமி அம்மாள் சிவனுக்கு பூத்தொடுக்க சென்றார். எறிபத்த நாயனார் சிவனடியார்களுக்கு இடர் நேரும் போதெல்லாம் காத்து இறுதியில் திருக்கயிலை அடைந்து சிவகணத்தருக்கு தலைவராக விளங்கினார்.

Sharing is caring!