சிவனது மந்திரத்தை உருத்திரம் செய்து முக்தி அடைந்த நாயனார்…

’வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே’ என்றார் சம்பந்தர். இந்த அடிகளை மனதில் கொண்டு மந்திரத்தை விடாமல் ஜபித்து சிவமுக்தி பெற்றவர் உருத்திரபசுபதி நாயனார். உருத்திரம் என்பது வேதத்தின் பயனாக விளங்கும் சுருக்க மந்திரம் என்று சொல்லலாம்.

ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் 4 வேதங்கள் உண்டு. இதில் அதர்வண வேதங்கள் மற்ற மூன்று வேதங்களின் திரட்டு என்று சொல்வதுண்டு. எஞ்சிய மூன்று வேதங்களில் நடுநாயகமாக இருப்பது யஜூர் வேதம். இந்த ஏழு காண்டங்களுள் இடையில் இருப்பது வேதத்தின் கண் போன்ற உருத்திரம். இதன் இடையில் வேதத்தின் கண்மணிகளாய் விளங்குகிறது திரு ஐந்தெழுத்தான நம சிவாய என்னும் திருமந்திரம். இந்த மந்திரத்தை விடாமல் பற்றியபடி சிவமுக்தி பெற்றார் பசுபதி நாயனார்.

திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூருக்கு அருகில் இருக்கும் திருத்தலையூரில் பிராமணக் குளத்தில் பிறந்தவரான இவரது இயற்பெயர் பசுபதியார். சிவபெருமானின் மீது தீராத பற்றுக்கொண்டவர். அன்றாடம் நாள் தவறாமல் சிவாலயத்திற்கு சென்று தாமரைக்குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து உருத்திரமந்திரத்தை ஜெபித்து வந்தார். காலைத் தொடங்கி உச்சிப்பொழுது வரையிலும் பிறகு மாலையிலும் உறுதியோடு பாராயணம் செய்துவந்தார்.

நாள் தவறாமல் இரவும் பகலும் தவறாமல் நீரில் நின்று இவர் சொல்லும் இம்மந்திரத்தால் கயிலை நாயகனே பெருமகிழ்வு கொண்டார். வேதத்திலும் உருத்திரை மேலானது. அவற்றிலும் மேலானது ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என்னும் மந்திரம். இவற்றிலும் சிறந்தது சிவ என்னும் இரண்டெழுத்து மந்திரம். இதை மனமொற்றி சிவன் மீது முழு அன்பு செலுத்தி உரிய முறையில் உச்சரித்தால் முக்தி பெறுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள்.

பசுபதியார் நீரில் நின்று ஐம்புலன்களை அடக்கி சிவன் மீது முழு பற்று கொண்டு உருத்திரம் செய்த காரணத்தால் வேத நாயகன் அகிலாண்ட நாயகன் மனம் மகிழ்ந்து நேரில் காட்சியளித்தார். உம் உருத்திர ஒலியை எப்போதும் நான் கேட்க விரும்புகிறேன் என்று தாம் வாழும் கயிலைக்கு அழைப்பு விடுத்தார்.. பசுபதியார் சிவனதுமந்திரத்தை உருத்திரம் செய்ததால் அவர் உருத்திர பசுபதி நாயனார் ஆனார். இறுதியில் கயிலாயத்தைச் சென்றடைந்தார்.

Sharing is caring!