சிவனை எப்படி வழிபடவேண்டும்?

கடவுள் எங்கு நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் சிறப்பாக நின்று அருள் செய்கின்றார். பசுவின் உடம்பெல்லாம் பால் வியாபித்திருந்தாலும் அது அகடுகளின் வழியாகவே நமக்குக் கிடைக்கிறது. அதுபோல் இறைவன் எங்கு வியாபித்திருந்தாலும் ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் வழியாகவே அருளைச் சுரக்கிறார்.ஆலய வழிபாடுகளில் நாம் எம்மை ஆயத்தப்படுத்தி கொள்ளவேண்டும்.

ஆன்மா லயப்படும் இடம் ஆலயம் என்பார்கள் அந்த வகையில் ஒவ்வொரு மனிதனும் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடும் போது அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவை பின்வருமாறு,

1.சிவாலயத்திற்குச் செல்லும்போது நீராடி உலர்ந்த ஆடை தரித்து தூய்மையாகச் செல்ல வேண்டும்.

2.திருக்கோவிலை அடைந்ததும் திருக்கோபுரத்தைத் தரிசித்து சிவநாமங்களை உச்சரித்து உள்ளே போக வேண்டும்.

3.முதலில் பலிபீடத்தையும் கொடி மரத்தையும் ரிஷப தேவரையும் கும்பிட வேண்டும்.

4.வடக்கு, மேற்கு நோக்கிய சன்னதியாயின் இடப்பக்கத்திலும் கிழக்கு, தெற்கு நோக்கிய சன்னதியாயின் வலப்புறத்திலும் நின்று வணங்க வேண்டும்.

5.வீழ்ந்து வணங்கும்போது தலை, இரண்டு செவிகள், இரண்டு கைகள், கால்கள், முகம் இவை நிலத்தில் படும்படி ஆண்கள் அட்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

6.தலை, இரு கைகள், முழங்கால்கள் இவை பூமியில் பதிய பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்காரம் மூன்று, ஐந்து அல்லது ஏழு தடவை செய்தல் நலம்.

7.கீழே விழுந்து வணங்கும்போது மேற்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் கால் நீட்ட வேண்டும். கிழக்காகவும் வடக்காகவும் நீட்டக் கூடாது.

8.கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றபின் எந்த இடத்திலும் வீழ்ந்து வணங்குதல் கூடாது.

9.நமஸ்காரம் செய்தபின் திருநாமம் உச்சரித்து அடிமேல் அடி வைத்து மெல்ல வலம் வரவேண்டும்; தெய்வ வாகனங்களையும் சேர்த்துத்தான் வலம் வர வேண்டும்.

10.ஒரே திருக்கோவிலில் உள்ள கணபதி – முருகன் – அம்பாள் சன்னதிகளை தனித்தனியாக வலம் வரக் கூடாது. சேர்த்துப் பொதுவாக வலம் வர வேண்டும்.

11.வஸ்திரங்களால் உடலை மூடிக் கொண்டு வலம் வரவோ, வழிபடவோ கூடாது.

12.வலம் வந்த பின்னர் துவார பாலகரை வணங்கி, நந்திதேவரைத் துதித்து உள்ளே செல்ல வேண்டும்.

13.விநாயகரை தரிசித்து, பின் சிவனையும் – தேவியையும் வழிபட்டு, பின்னர் சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர் முதலிய மூர்த்திகளையும் சமயக் குறவர்களையும் வழிபட வேண்டும். வழிபட்டதும் வடக்காக சண்டிகேஸ்வரரை அடைந்து மூன்று முறை மெலிதாகக் கை தட்டி பிரார்த்திக்க வேண்டும்.

14.பின் வலமாக வந்து நந்திதேவரின் இரண்டு கொம்புகளின் இடைவெளி வழியாக பெருமானை தரிசித்து, பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை வீழ்ந்து வணங்க வேண்டும்.

நாம் அனைவரும் இவற்றினை கடைப்பிடித்து இறைவனின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெற்று வாழ்வில் உயர் நிலை அடைவோம்.

Sharing is caring!