சிவபக்தியும் பதிபக்தியும் நிறைந்த இசை ஞானியார்

இசை ஞானியார் தாம், தம்முடைய கணவர், தம் புதல்வர் என்று குடும்பமே நாயன்மார்களாக அழைக்கப்படும் பேறை பெற்றார்கள். சிவ கெளதம கோத்திரத்தில் ஞான சிவாசாரியார் குலத்தில் அவதரித்தவர் இசைஞானியார். சடையனாரின் வாழ்க்கைத்துணையாக இவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பெற்றெடுத்து பெரும் பேறைப் பெற்றார்.

நாயன்மார்கள்  அறுபத்து மூவரில் மூன்று பேர் பெண்கள். திருநாவலூரைச் சேர்ந்த சடையனாரின் மனைவியான இசைஞானியாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது புத்திரனே சுந்தரமூர்த்தி ஆவார். சைவக்குரவர் நால்வருள் ஒருவரான இவர் நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.

சிவனடியார்களான நாயன்மார்கள் 60 என்னும் அடிப்படையில் திருத் தொண்ட தொகையில் சுந்தரமூர்த்தியார் குறிப்பிட்டுள்ளார். இதை மையமாக கொண்டே சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார். அப்போது திருத்தொண்ட தொகை இயற்றிய சுந்தரமூர்த்தியையும், அவரது பெற்றோர்களான சடையனார், இசை ஞானியாரையும் சேர்த்து 63 நாயன்மார்களாக இணைத்து எழுதினார். 63 நாயன்மார்களில் தலைசிறந்தவர் சுந்தர நாயனார்.

இசை ஞானியார் பதிபக்தியும் சிவபக்தியும் நிறைந்தவர். தவம் புரிந்து சுந்தர மூர்த்தியை மகனாக பெற்றார். சேக்கிழார் இசைஞானியாரைப் பற்றி குறிப்பிடும் போது உலக கேடுகளிடம் முதன்மையானது தீய ஒழுக்கம் நிறைந்த புதல்வனை மகனாக பெறும் பேறு. அதே நேரம் நன்மைகளுள் முதன்மையானது  தூய மைந்தனை மகனாக பெறுதல். திருத்தொகை பாடி உலகம் உய்வித்த உத்தமப் புதல்வரை ஈன்ற உத்தமியானவர் என்கிறார். இசைஞானியாரின் புகழை பெருமையை வார்த்தைகளால் அடக்க இயலாது என்றும் கூறுகிறார்.

இசைஞானியார் மிகச்சிறந்த சிவபக்தையாக விளங்கினார். இவரது பக்தியில் மெச்சிய சிவபெருமான் தன்னால் சாபமடைந்த சிவனடியாரான ஆலாலசுந்தரத்தை இசைஞானியாரின் கர்ப்பத்தில் கருவாக தரிக்க செய்து சுந்தர மூர்த்தியாக  பிறப்பெடுக்க செய்தார். இவரது புகழ் அகிலம் முழுவதும் பரவியது போலவே இவரை ஈன்றெடுத்த இசைஞானியாரின் புகழும் பரவி 63 நாயன்மார்களில் ஒருவராக உருவாக்கியது.

Sharing is caring!