சிவபெருமான் தோற்றம் உணர்த்தும் தத்துவம்

கோரிக்கைகளை  இறைவனிடம் வைத்தால்,  மனம் போல் வாழலாம் என்று நினைக்கும் நாம், அந்த இறைவன் சொல்லும் தர்மம், நீதி,நேர்மை, நாணயம், இரக்கம், அன்பு, தானம் போன்ற பாதையில் பயணிக்க முயற்சி செய்கிறோமோ….?

  நாம் செல்லும் பயணத்தில், இவை அனைத்தையும் சற்று பார்க்கிறோம். ஆனால், முழுக்க முழுக்க இவற்றுடனான நம் பயணம், மன உறுதிமிக்க மகான்களால் மட்டுமே இயலும் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கிறார், பிரபஞ்சத்துக்கே அதிபதியான சிவப்பெருமான்…

அவரது தோற்றமும், அவர் அணிந்திருக்கும்  அணிகலன்களும்,  மனித வாழ்வின் மகத்துவத்தை விளக்குவதாகவே இருக்கின்றன.
சிவப்பெருமானின் தோற்றத்தில், நம்மை அதிகம் கவர்வது ஆழ்ந்த நிலை தியானம் தான்… இந்த ஆழ்நிலை உருவம் நமக்கு எதை உணர்த்துகிறது? வாழ்வில் வரும் எத்தகைய பிரச்னைகளுக்கும், துயரங்களுக்கும், அமைதியும் பொறுமையும் மருந்தாக தரும்போது, தெளிவான மனநிலையுடன் வாழும் மனப்பாங்கை பெற முடிகிறது.

நான் தான் எல்லாம். நானே அத்தகைய செயலுக்கு காரணகர்த்தா என்று எண்ணாமல்,  நான் என்னும் அகங்காரத்தை எந்த கணத்தில் விட்டு ஒழிக்கிறோமோ, அக்கணமே நமது மனநிலையும், உடல்நிலையும் மேன்மையான இடத்தைப் பெறு கிறது.

இதை உணர்த்தவே, நாகத்தை கழுத்தில் மாலையாக்கி கோர்த்திருக்கிறார்.மனதில் இருக்கும் தீய எண்ணங்களும்,  தங்கியிருக்கும் எதிர்மறை எண்ணங் களையும் பொடியாக்கி தூக்கி எறிய வேண்டும் என்பதுதான் சிவ பெருமான் கையில் இருக்கும் கமண்டலம் உணர்த்துகிறது.

அவரது நீலத்திருமேனி உணர்த்தும் தத்துவம் முக்கியமானது. அளவுக்கு மீறிய கோபத்தைக் கட்டுப்படுத்த பழக  வேண்டும். அடக்க முடியா கோபத்திலிருந்து வரும் விஷம் போன்ற வார்த்தைகள், உங்கள் மீதான மதிப்புகளைக் குறைக்க கூடும்.

அலைபாயும் மனதை ஆர்ப்பரிக்கவிடாமல்,  மனதில் இருக்கும் எண்ணங்களை ஒருமுகமாக செயல்படுத்துவது நல்லது. இதனால், உடல் சுத்தமாகி, ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாமல் இருக்கும் என்பதையே  உடுக்கை உணர்த்துகிறது.

அறியாமையில் இருந்து ஒரு தேடல் பிறக்கும் .அந்த தேடலில் இருந்தே  உங்களுக்கான  புதிய வழி பிறக்கும் என்பதையே, சிவப்பெருமானின் தலையில் உள்ள கங்கை உணர்த்துகிறது.

நமக்கு முன்னால் இருக்கும் பிரச்னைகளை மட்டுமே ஆராயாமல், பின்னாடி இருக்கும் பிரச்னைகளையும் ஆராய்ந்து களைந்தால், முடியாது என்ற பிரச்னைகளைக் கூட எளிதாக முடித்துவிடக்கூடிய ஆற்றலை பெற்றுவிடலாம் என்பதை உணர்த்துவதாகவே சிவபெருமானின்  நெற்றிக்கண் இருக்கிறது.

மனம், ஆற்றல், கவனம் அனைத்தும் கட்டுப்படுத்தி, ஒருமுகமாக செயல்பட்டால், எந்த வேலையிலும் தடைகளின்றி  தோல்வியே இல்லாமல் வெற்றியைப் பெறலாம் என்று திரிசூலம் உணர்த்துகிறது.

வாழ்வில் எதுவும் நிரந்தரமல்ல. எல்லாம் கடந்து போகும். எதைப்பற்றியும் சிந்திக்காமல் தோல்விகளிலும் துன்பத்திலும் உடைந்து போகாமல் மீண்டு வாருங்கள் என்பதுதான் சிவப்பெருமானின் சாம்பல் தரித்த தேகம் உணர்த்தும் உண்மை.

ஆக, மனிதனின் வாழ்வியல் முறைகளை உணர்த்துவதற்காகவே சிவப்பெருமான்,  தாம்  அணிந்திருக்கும் அணிகலன் மூலம், எளிமையாக உணர்த்தியிருக்கிறார். இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் வகுத்த பாதையில் பயணிப்போம், இறைவனை துணையாக பெறுவோம்.

Sharing is caring!