சீரடி பாபாவின் மகிமைகள்…! வெள்ளத்தில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய பாபா..!

சாயிநாதர் அன்னைக்கு நிகரானவர் ஆவார். ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தைக்கு ஆபத்து என்று தெரிந்த கணத்தில் ஓடிச்சென்று காக்கின்றாளோ, அவ்வாறே சாயிபாபாவும் தன் பக்தர்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் ஓடிச்சென்று அவர்களைக் காப்பார். அதற்கு இந்த கதையே சான்று.

இமாம்பாய் என்ற ஒரு பாபாவின் பக்தை ஒருவர் பாபாவை தரிசனம் செய்து விட்டு தன் ஊருக்குக் கிளம்புவதற்குத் தயாரானார். அதனால் பாபாவிடம் ஆசி பெற்று அங்கிருந்து செல்லலாம் என்று எண்ணிய அவர், பாபாவிடம் தான் ஊருக்கு புறப்படுவதைக் கூறி ஆசி பெற்றார். ஆனால், பாபா அவரை இப்போது ஊருக்குப் போக வேண்டாம் என்றும், நிலைமை சரியில்லை என்றும் கூறினார்.ஆனால் இமாம்பாய் அவசரத்தில் பாபாவின் வார்த்தையை மீறி ஊருக்கு கால்நடையாக புறப்பட்டார். சீரடியில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவு வரை எந்தவோர் இடைஞ்சலுமின்றி அவர் கடந்தார். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவர் சுராலா என்ற நதிக்கரையில் நடந்து சென்றார்.

அப்போது வானிலை மோசமாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் அதிகாரி அவரை மேலும் பயணத்தைத் தொடர வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால், இமாம்பாயோ இன்னும் நான்கு மைல் தூரம் மட்டும் தான். நதிக்கரையை கடந்து சென்றால் விரைவில் சென்று விடுவேன் என்று கூறி நகர்ந்தார். சில நிமிடங்களில் பெரு மழை பெய்தது. சூறைக்காற்று வீசியது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கலக்கம் அடைந்த அவர் சாயிபாபாவை உதவிக்கு அழைத்தார். அப்போது ஒளி வடிவில் தோன்றிய பாபா, பயப்படாமல் செல் என்றார்.

அப்போது ஆற்றில் தண்ணீர் அளவு முழங்கால் அளவுக்கு குறைந்து விட்டது. மறு கரைக்குச் சென்றதும் அவர் திரும்பி ஆற்றினை நோக்கும்போது அதில் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதை கண்ட இமாம்பாய் பாபாவின் அருளை கண்டு மெய் சிலிர்த்து போனார்.

Sharing is caring!