சுக்கிரனின் யோகம் கிடைக்க வேண்டுமா?

நவகிரகங்களில் சுக்கிரன் சுப கிரகம் ஆவார். களத்திரகாரகனான சுக்கிரன் வலுவாக இருந்தால்தான் இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும்.

ஒருவர் கலைத்துறையில் புகழ் பெறவேண்டும் என்றால், அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையாக இருக்கவேண்டும்.

சுக்கிரன்

ஒருவருக்கு சுக்கிர தசை 20 ஆண்டுகள் நடைபெறும். இந்த சுக்கிர தசை ஒருவரின் இளமைப் பருவத்திலேயே வருவது மிகவும் சிறப்பானது. குறிப்பாக சனி தசையின் இறுதியில் பிறப்பவர்களுக்கும், புதன் தசையில் பிறப்பவர்களுக்கும் சுக்கிர தசை இளமையிலேயே வந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும். சுகங்களை அள்ளித் தருவதில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரன்தான்.

சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது பலன்கள் மாறுபடும். எந்த கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சுக்கிரன் – சூரியன்

சுக்கிரனுடன் சூரியனின் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலும், அந்த இடத்துக்கு குருவின் பார்வை இருந்தாலும், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும். பொதுவாக இந்த சேர்க்கை அவ்வளவாக நல்லதில்லை. இப்படி சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவதால், நற்பலன்களைப் பெறலாம்.

சுக்கிரன் – சந்திரன்

சுக்கிரனுடன் சந்திரன் சேர்ந்திருக்கப் பெற்றவர்கள், நிறைந்த கல்வி அறிவும், புத்தி சாதுர்யமும் கொண்டவர்கள். சகல சுக செளகரியங்களையும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு உதவி செய்யத் தயங்கமாட்டார்கள். மூர்க்கத்தனம், பிடிவாத குணம் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்வது அவசியம்.இந்தச் சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்கள் பெண்களிடம் பேசுவதற்கு கூச்சப்படுவார்கள். சுக்கிரனுடன் தேய்பிறை சந்திரன் இருந்தால், திங்கட்கிழமைகளில் சிவபெருமானை நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

சுக்கிரன் – செவ்வாய்

இவர்கள் அழகான தோற்றமும் ஆரோக்கியமான உடலமைப்பும் கொண்டவர்கள். மிகுந்த தைரியசாலிகள். எதையும் சாமர்த்தியமாகத் திட்டமிட்டுச் செய்து, வெற்றி பெறக் கூடியவர்கள். கலைகளில் பிரியம் உள்ள இவர்கள் பொறுமைசாலிகளும்கூட! என்னதான் செல்வந்தர்களாக இருந்தாலும்கூட, பெரிய அளவில் இரக்க குணமோ, தர்ம சிந்தனையோ, உதவும் மனப்பான்மையோ இவர்களிடம் இருக்கும் என்று சொல்ல முடியாது. சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவதும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

சுக்கிரன் – புதன்

அன்பும் பாசமும் நிறைந்த இவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். நல்ல பேச்சாளர்கள். சிந்தித்துச் செயலாற்றும் திறன் கொண்ட இவர்களால் தோல்வியை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது. இயல்பிலேயே நகைச்சுவை அனுபவம் மிக்க இவர்கள் கலகலப்பாகப் பேசிப் பழகுவார்கள். வாழ்க்கையில் அனைத்து சுக சௌகர்யங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருப்பவர்கள் விஷ்ணுவை வழிபடுவதும், விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

சுக்கிரன் – குரு

இவர்கள் ஒரு கருத்தை ஆதரித்தும் பேசுவார்கள்; அந்தக் கருத்தையே மறுத்தும் பேசுவார்கள். இரக்க மனம் கொண்ட இவர்களிடம் பிடிவாத குணமும் சேர்ந்தே இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார்கள். குறைவான உழைப்பில் நிறைய செல்வம் பெற நினைப்பவர்கள். சொத்துக்களைச் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆசைகள் அதிகம் இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை எப்போதும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் தெய்வபலம் இவர்களுக்குத் துணை நிற்கும். சுக்கிரனுடன் குரு சேர்ந்திருப்பவர்கள் தட்சிணாமூர்த்தியையும், மகாலட்சுமியையும் வழிபட்டு நற்பலன்களைப் பெறலாம்.

சுக்கிரன் – சனி

கம்பீரத்தோற்றத்துடன் காணப்படும் இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று பகுத்துப் பார்க்கத் தெரியாது. வீட்டில் மனைவியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் கணவரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் சமயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் செல்வார்கள். உண்மையானவர்களாகவும், நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பவர்களாகவும் நடந்துகொள்வார்கள். இந்த சேர்க்கை அமையப் பெற்றவர்கள் ஆஞ்சநேயரை வழிபடுவதால் நற்பலன்கள் கூடப் பெறலாம்.

சுக்கிரன் – ராகு

மனைவியிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். மக்கள் நலப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபடுவார்கள். வீடு, நிலங்கள், மாடு கன்றுகள், செல்வம், செல்வாக்கு அனைத்தும் பெற்றிருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும், அதில் ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். மற்றவர்களால் புகழத்தக்க அளவுக்கு இவருடைய செயல்பாடுகள் அமைந்திருக்கும். இந்தச் சேர்க்கை சரியான இடத்தில் அமையப் பெறாத ஜாதகர்கள் எப்பொழுதும் கவலை தோய்ந்த முகத்துடனும் நோயாளியாகவும் காணப்படுவார்கள். இவர்கள் ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதால் அசுப பலன்களில் இருந்து விடுபடலாம்.

சுக்கிரன் – கேது

ஆன்மிகத்தில் ஈடுபாடும், திருக்கோயில்களைத் தரிசிப்பதில் விருப்பமும் கொண்டிருக்கும் இவர்கள் பூஜை வழிபாடுகளைச் சிரத்தையுடன் செய்வார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும், அதுபற்றித் தீவிரமாக யோசித்த பிறகே ஈடுபடுவார்கள். நீதிநேர்மையுடன் இன்னும் பல நல்ல குணங்களையும் கொண்டிருக்கும் இவர்கள் அழகான ஆடை ஆபரணங்களை அணிய விரும்புவார்கள். கவிஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் புகழுடன் திகழ்வார்கள். இவர்களில் சிலர் ஜோதிடத்திலும், மந்திர தந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்குப் பெரும்பாலும் பித்தம் சம்பந்தமான நோய்களே ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்க இவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

Sharing is caring!