சுரைக்காயைக் ஜூஸில் இஞ்சி சேர்த்து குடிக்க நன்மை

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும், இளமைத் தோற்றத்துடனும் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் அன்றாடம் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் உடல் வலிமையுடனும், நோய்த் தாக்குதலின்றியும் இருந்ததற்கு காரணம், அவர்களது உணவுப் பழக்கமும், இதர பழக்கவழக்கங்களும் தான்.

அக்காலத்தில் எல்லாம் ஜங்க் உணவுகள் இல்லை. ஆனால் இன்றோ ஜங்க் உணவுகள் தான் எங்கு பார்த்தாலும் உள்ளது. இந்த உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் பலரை இந்த உணவுகளுக்கு அடிமையாக்கி, பல நோய் தாக்குதலுக்கு உடலை தயார் செய்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதோடு, அவ்வப்போது நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பானங்களையும் பருக வேண்டும்.

அதற்கு சமைப்பதற்கு பயன்படுத்தும் காய்கறிகளே போதும். அதுவும் கோடைக்காலத்தில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம். இந்த காலத்தில் உடலை வறட்சி அடையச் செய்யாமல், நீர்ச்சத்துடன், உடல் வெப்பத்தைத் தணிக்கும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். அப்படி நீர்ச்சத்து நிறைந்த ஓர் காய்கறி தான் சுரைக்காய். இந்த சுரைக்காயை சிலர் ஜூஸ் தயாரித்துக் குடிப்பார்கள் என்பது தெரியுமா?

சுரைக்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், அதுவும் அத்துடன் இஞ்சி சேர்த்து தினமும் காலையில் குடித்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இக்கட்டுரையில் இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை எப்படி தயாரிப்பது என்றும், அந்த ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம்.

ஜூஸ் தயாரிக்கும் முறை:

  • பின் அதை மிக்ஸியில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் அல்லது இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • இந்த பானத்தை தினமும் காலை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.

உடல் வெப்பம் குறையும்
காலநிலை மிகவும் சூடாக இருந்தால், ஹார்மோன் மாற்றங்கள், அசாதாரண வளர்சிதை மாற்ற நடவடிக்கைகள் போன்றவற்றால் உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, மிகுந்த அசௌகரியத்தையும் உணரக்கூடும். ஒருவரது உடல் வெப்பம் அதிகரித்தால், அதனால் அஜீரண கோளாறு, தலைவலி மற்றும் சில சமயங்களில் மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் போன்றவையும் ஏற்படலாம். ஆனால் இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, அதனால் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

அஜீரண கோளாறு சரியாகும்
தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உட்கார்ந்தவாறே வேலை செய்வது அல்லது மன அழுத்தம் போன்றவற்றால், ஏராளமானோர் அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். அஜீரண கோளாறு தீவிரமானால், அதன் விளைவாக நெஞ்செரிச்சல், இரைப்பை அழற்சி மற்றும் சில நேரங்களில் குடல் புற்றுநோய் கூட ஏற்படலாம். இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் குறிப்பிட்ட நொதிகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நீர்க்கச் செய்து, அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

உடல் எடை குறையும்
இஞ்சி சேர்த்த சுரைக்காய் ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் கே போன்றவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாட்டை தீவிரப்படுத்தி, விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் இந்த ஜூஸில் கலோரிகளும் குறைவு. இந்த ஜூஸை தினமும் குடித்து, சரிவிகித டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

உயர் இரத்த அழுத்தம் குறையும்
இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் அதிக பேர் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனையாக இருப்பது உயர் இரத்த அழுத்தம். எப்போது இரத்தமானது தமனிகளின் சுவருக்கு எதிராக அழுத்தப்படுகிறதோ, அப்போது ஏற்படும் நிலை தான் உயர் இரத்த அழுத்தம். இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க உதவும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான பானமாகும்.

சிறுநீரக பாதை தொற்றுக்களை சரிசெய்யும்
சிறுநீரக பாதை தொற்றுக்கள் என்பது, சிறுநீர் செல்லும் குழாய்களில் மட்டுமின்றி, சிறுநீர்ப்பையிலும் மோசமான பாக்டீரியாக்களின் தாக்கத்தால் ஏற்படும். பெரும்பாலும் இது பாலியல் உறவின் போது அதிகம் ஏற்படும். சுரைக்காயில் உள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், சிறுநீரக பாதையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். எனவே உங்களுக்கு இந்த தொற்று ஏற்படாமல் இருக்க நினைத்தால், இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடியுங்கள்.

கல்லீரல் அழற்சியை போக்கும்
கல்லீரல் மிகவும் அத்தியாவசியமான ஓர் உறுப்பு. இது மனித உடலிலேயே மிகவும் பெரிய உறுப்பும் கூட. கல்லீரலில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதனால் உயிரையே இழக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், அதிகளவு மது பானங்களை அருந்துவது, குறிப்பிட்ட தொற்றுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவற்றால் கல்லீரலில் அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இதைத் தடுக்க, இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை தினமும் குடியுங்கள்.

தசைக் காயங்களை சரிசெய்யும்
உடற்பயிற்சிக்குப் பின், பலருக்கு தசைகளில் கடுமையான வலி ஏற்படும். அதுவும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால், இந்நிலை கட்டாயம் ஏற்படும். இந்த தருணத்தில் தசைகளுக்கு ஊட்டச்சத்துக்களையும், ஓய்வையும் வழங்க வேண்டியது அவசியம். இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை ஒருவர் உடற்பயிற்சிக்குப் பின் குடித்தால், அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தசைகளுக்கு ஊட்டமளித்து, தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

இதய ஆரோக்கியம்
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் இதய நோய்களால் 60% மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் ஆபத்தான ஓர் நோயும் கூட. ஆனால் இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

காலைச் சோர்வு
பெரும்பாலான கர்ப்பிணிகள் காலையில் மிகுதியான சோர்வை, குமட்டல் உணர்வை சந்திப்பார்கள். இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடித்தால், கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வில் இருந்து விடுபடலாம். இருப்பினும் இந்த பானத்தைக் குடிக்கும் முன் கர்ப்பிணிகள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.

Sharing is caring!