சுவையையும் ஆபத்தையும் சேர்த்து தரும் அஜினோமோட்டோ…

உயிர் வாழ்வதற்காக உணவு சாப்பிடும் நுட்பமான தெளிவை மனிதர்கள் மறந்து அநேக வருடங்களாகிவிட்டது. உணவு உடம்பை ஆரோக்யமாக வளர்க்க என்பதை மறந்துவிட்டோம். கண்களைப் பறிக்கும் விதவிதமான உணவு வகைகள், நாக்கிற்கு சுவையைக் கூட்டும் வெந்த வேகாத அரைவேக்காட்டு உணவுகளைத்தான் அதிகம் விரும்புகிறோம். இவை நிறத்துக்கு இவை சுவைக்கு என்று சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் தான் இன்று அனைத்து வயதினரையும் கட்டிப்போட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று அஜினோமோட்டோ உப்பு. மோனோ சோடியம் குளூட்டமெட் என்ற வேதி பெயரைக் கொண்டது.

சாம்பார், ரசம், பிரியாணி  என வீட்டு உணவுகளிலும் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் என்று துரித உணவுகளிலும் சுவைக்காகவும் வாசனையைத் தூண்டுவதற்காகவும் சேர்க்கப்படும் அஜினோமோட்டோக்கள் சந்தையிலும் விற்பனைக்கு வந்துவிட்டது. உணவு பொருளில் இது தரும் சுவையையும் வாசனையையும் மக்கள் விரும்பியதால் எல்லோர் வீடுகளின் சமையலறையிலும் அஜினோமோட்டோ அலங்கரித்தது. ஆனால் தொடர்ந்து அஜினோமோட்டோ எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்யம் நிச்சயம் கெடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அஜினோமோட்டோவில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் கலந்துள்ளது. ஆனால் இயற்கையாகவே பால், பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள், இறைச்சி, மீன், காய்கறிகளில் இந்த அமினோ அமிலங்கள் இயற்கையாகவே இருக்கின்றன. இவை அதிகமாகும் போது உடலுக்கு பிரச்னை உண்டாகிறது.

மூளையில் உள்ள  ஹைப்போ தலாமஸ் பகுதியை பாதிக்கிறது. நமது உடலில் இருக்கும் இன்சுலின், அட்ரினலின் சுரப்பையும் அதிகரிக்கிறது. அதனால் வழக்கத்துக்கு மாறாக அதிக உணவை நாம் எடுத்துக்கொள்ள தூண்டுகிறது. உடலில் துத்தநாகத்தின் அளவை குறைத்து தூக்கத்தை சீர்குலைக்க செய்கிறது.

மோனோ சோடியம் குளூட்டமெட் இவை உடலில் சேரும் போது ஹார்மோனில் தடுமாற்றங்களை உண்டாக்குகிறது, உடல் சோர்வு, மன அழுத்தம், கோபம், சட்டென்று உணர்ச்சி வசப்படுதல், உடல்பருமன், நீரிழிவுநோய் முதலானவற்றை உண்டாக்குகிறது. நாவின் சுவை மட்டத்தை மறக்க செய்துவிடுகிறது. அஜினோமோட்டோ உணவு வகைகளைத்  தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளின் உடல்வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோனின் வளர்ச்சி தடைபடுகிறது.

மேலும் குழந்தைகளுக்கு வயிற்று வலியையும் உண்டாக்குகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகளும் எச்சரித்துள்ளன. அதனாலேயே ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகள் அஜினோமோட்டோ கலந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

1970 களின் ஆரம்பத்திலேயே சோடியம் குளூட்மெட் கலந்த உணவை சாப்பிட்டால் தலைவலி, வயிறு வலி, ஒவ்வாமை போன்றவை உண்டாகும் என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். சர்வதேச மருத்துவர்களும் துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். உடல் வளர்ச்சியில் தடை, தலைவலி, ஒவ்வாமை, தூக்க குறைபாடு, உடல் சோர்வு, நீரிழிவு, உடல் பருமன் அனைத்து குறைபாடுகளையும் உருவாக்கும் அஜினோமோட்டோக்களை பயன்படுத்த தான் வேண்டுமா? யோசியுங்கள்..

Sharing is caring!