செய்வினை விலகி ஓட ஹனுமனை வழிபடுங்கள்

வலிமை, மன உறுதி, தைரியம், வீரம், அறிவு, ஆற்றல், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பொறுமை, புகழ், ஆரோக்கியம் அனைத்தும் சேர்ந்த ஒருவரை வழிபட்டால் என்ன கிடைக்கும். இவை அனைத்தும் அவரது அருளால் கிடைக்கும். உங்களுக்கு அவா இருந்தால் அவரை இன்று வழிபடுங்கள்… நினைத்தது நினைத்தப்படி உங்களுக்கு கிடைக்க ஆஞ்சநேயர் ஸ்ரீராமனின் அருளையும் பெற்றுத்தருவார். சிறப்பிலும் சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர். புண்ணியமான திதியான அமாவாசையும்,ஞானத்தின் அடையாளமாக விளங்கும் மூலநட்சத்திரமும் இணைந்த இந்நாளில் அவதரித்தார் அனுமன்.   அவரது பிறந்தநாள் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள வைணவக் கோயில்களிலும், ஆஞ்சநேயர் கோயில்களிலும் இன்றைய தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இதர மாநிலங்களில் வைகாசி மாதம் வரும் வளர்பிறை  தசமி திதியில் அனுமன் ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். இன்றைய தினம் அனுமனை வழிப்பட்டால் சிவனையும், பெருமாளையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

அதிகாலையில் எழுந்து குளித்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு அல்லது வைணவக் கோயில்களுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஸ்ரீ ராம ஜெயம் சொல்லியபடி ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை,வெண்ணெய் சாத்தி வழிபடலாம்.   பாம்பு போன்ற உடலைக் கொண்ட ராகு அவருக்கு பிடித்த தானியமான உளுந்தை, அவர் உடல் போல் வளைத்து அனுமனின் உடலில் சாற்றுபவரை தான் பிடிப்பதில்லை என்று அனுமனுக்கு வாக்கு கொடுத்தார். ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் உளுந்து வடையை 54, 108, 1008 என்ற எண்ணிக்கையில் சாத்தினால் ராகு தோஷம் நிவர்த்தியாகிவிடும். சனி தோஷம் உள்ளவர்களும் அனுமனை வணங்கினால் இன்னல்கள் நீங்கப் பெறலாம்.

இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடைபெறும்போது சீதாபிராட்டி பக்கத்தில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து வெற்றிலையைக் கிள்ளி அனுமனது தலையில் இட்டு வாழ்த்தினாள். அதனால் வெற்றிலை மாலையும் அனுமனுக்கு உகந்ததாயிற்று.  வெற்றிலையில் பாக்கும் பணமும் வைத்து மாலையாக தொடுத்து அனுமனுக்கு சாத்தி மகிழ்வார்கள் பக்தர்கள். இதே போன்று 108 சுமங்கலிகளுக்கு வெற்றிலைப் பாக்குடன் பழம், குங்குமம், மஞ்சள் வைத்து  தாம்பூலமாக தருவதும் நல்லது.

இராவண சம்ஹாரத்தில் இரண்டு அசுரர்களை வதம் செய்ய ஆஞ்சநேயர்  சென்றபோது மாயக்கண்ணன் கைமுழுக்க வெண்ணெய் எடுத்து அனுமனிடம் தந்து இந்த வெண்ணெய் உருகுவதற்குள் நீ செல்லும் காரியம் ஜெயம் உண்டாகும் என்று ஆசிர்வாதம் அளித்தார். அதுபோலவே அசுரர்களை வதம் செய்தார். அதுபோல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் அவை உருகுவதற்குள் நீங்கள் நினைத்தது நடைபெறும்.

அனுமனது வாலுக்கு குங்குமத்தில் பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அனுமனுக்கு வாலில் தான்சக்தி அதிகம் என்பது ஐதிகம். இதற்கு தனி வழிபாடே உண்டு. பக்தியுடன் அனுமனின் வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி,குங்குமத்தால் பொட்டு வைத்து வரவேண்டும். வாலின் நுனி வரும்போது கலைத்து விட்டு மீண்டும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

அனுமனுக்கு பிடித்த அவல், சர்க்கரை, பானகம், தேன், இளநீர், கடலை,பொரி, பழம் போன்று அனுமனுக்கு பிடித்த பொருள்களை நைவேத்தியமாக செய்து படைக்கலாம். இன்றைய தினம் பொரி, பழம், கிழங்கு வகைகளை சாப்பிடுவது நல்லது. அன்றைய தினம் கோதுமை மாவில் செய்த பூரியையும் அனுமனுக்கு படைக்கலாம். ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள்,ஸ்லோகங்கள் சொல்லி வழிபடலாம்.

அனுமனை வழிபட்டால் தைரியம் உண்டாகும். மனதில் உள்ள அச்சங்கள் போகும். மன உறுதி அதிகரிக்கும். அனுமனின் பக்தர்களைக் கண்டு செய்வினையும் விலகி ஓடும். அனுமன் ஜெயந்தியன்று ஸ்ரீ ராமநாமம் என்று ஜெபித்தால் ஆஞ்சநேயரும் அருகில் இருந்து சொல்வார். உங்களுக்கும் அருள் புரிவார்.

Sharing is caring!