செல்வம் பெருக, நிம்மதியான வாழ்வுக்கு முருகனுக்கு உகந்த விரதங்கள்

முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மேற்கொள்ளும் முக்கிய விரதங்கள் மூன்று.

நிம்மதியான வாழ்வு தரும் முருகனுக்கு உகந்த விரதங்கள்
முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மேற்கொள்ளும் முக்கிய விரதங்கள் மூன்று. கார்த்திகை- கிருத்திகை விரதம், சுக்கிர – வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி விரதம்.

கார்த்திகை நட்சத்திரத்தன்று முருக பக்தர் விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு செல்வம், கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, பசுக்கள், நிலபுலம், நிம்மதியான வாழ்வு ஆகிய எல்லாம் கிடைக்கும்.

விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகையில் வரும் பரணியன்று பகலில் உண்டு இரவில் உண்ணாது இருக்க வேண்டும். கார்த்திகை அன்று காலையில் நீராடி முருகன் கோயில் சென்று வழிபடவேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருகனின் அருட்பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். முழு தினமும் முருகனை தியானம் செய்ய வேண்டும். மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடி நித்திய வழிபாடு செய்து, அன்னதானத்திற்கு பிறகு அமுது செய்ய வேண்டும். (சைவ உணவு, பூண்டு, வெங்காயம் தவிர்க்கவேண்டும்). பிறகு ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகையன்று விரதம் மேற்கொள்ள வேண்டும்.

சுக்கிர விரதம்

சுக்கிரவார (வெள்ளிக்கிழமை) விரதம் விநாயகர், அம்பிகை, முருகப்பெருமான் ஆகிய மூவருக்கும் உரியது. ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி முன்சொன்னபடி வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும்.

சஷ்டி விரதம்

ஐப்பசி மாதம் வளர்பிறை (சுக்கிலபட்சம்)யில் வரும் பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் விடியற்காலை எழுந்து நீராடி, நித்திய கடன் முடித்த பின் பூரணகும்பம் வைத்து நீர் பரப்பி, மாவிலை வைத்து தருப்பையைப் பரப்பி அதன்மீது சந்தனம் வைத்து குங்குமம் அட்சதை இட்டு, முருகப்பெருமானை அதில் எழுந்தருளச் (ஆவாகனம்) செய்து, மலர் தூவி, தூப தீபம் காட்டி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

பகலில் உறங்கக் கூடாது. ஆறு நாட்களும் முருகப்பெருமான் அருட்பாடல்களை ஓதவேண்டும். கந்தன் சரிதம் படிக்க/கேட்க வேண்டும். தியானம், ஜபம் செய்ய வேண்டும். அருகிலுள்ள முருகன் கோவிலில் நடை பெரும் சஷ்டி விழாக்களில் தினமும் கலந்து கொள்ள வேண்டும்.

சூரசம்ஹாரவிழா, திருக்கல்யாண விழாக்களை கண்டு களித்து அதன்பின் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மாதம் தோறும் வளர்பிறை சஷ்டியில் ஒருநாள் இதுபோல் விரதம் மேற்கொள்ளலாம். விரதம் இருப்பவர் எண்ணிய நலன் பெறுவர், புண்ணிய பலம் பெறுவர். ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேல் வேல் வெற்றிவேல்!!!

Sharing is caring!