தங்கத்தில் செம்பு கலந்த கருவூரார் சித்தம் மகிமை

கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே !

திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே!

வாரி வழங்கி அருள் கொடுத்தாய்!

மாறாத சித்துடையாய்!

கல் உள்ளளவும் மண் உள்ளளவும் – உன்

கருணைக் கரங்களே காப்பு!

இந்த துதியை மனதில் நினைத்து கருவூர் சித்தரை மனமுருக வேண்டினால் உங்கள் துயரங்கள் நீங்கும். காக்கும் கருணைக் கரங்கள் கொண்ட கருவூர் சித்தரை அறியாதோரும் அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

அன்றைய சோழ நாட்டின் கருவூரில் பிறந்தவர் கருவூர் சித்தர். பிறவி ஞானியான அவர் , ஆர்வத்துடன் ஞான நூல்களை விரும்பிக் கற்றார்.ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தவர்கள் கருவூராரின் பெற்றோர்.

ஒரு சமயம் திருவாவடுதுறைக்கு போகர் வந்த போது , அவரை நேரில் சந்தித்த  கருவூரார் , தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.போகமுனியோ “கருவூராரே! உன் குல தெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறியதுடன்  வழிபாட்டு நெறிகளையும்  கருவூராருக்கு உபதேசித்தார்.அந்த நாளில் இருந்து கருவூரார் மனம் முழுக்க அம்மன் வழிபாடு நிறைந்தது. அன்னையின் அருளினால் கருவூரார் சித்துக்கள் புரியும் சித்தரானார்.

கருவூரார்,தனது இரசவாத வித்தையின் மூலம் சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார். அந்த சிவலிங்கங்கள் ஒருமுறை பார்த்தால் செம்பு போலவும், மற்றொரு முறைப் பார்த்தால் பொன் போலவும் தோன்றும்.

சோழ மன்னன் இரணிய வர்மன் தீர்த்த யாத்திரை புறப்பட்டு பல புண்ணிய தலங்களை தரிசித்துவிட்டு தில்லையை அடைந்தார். சிற்றம்பல திருக்குளமான சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடும்போது தண்ணீருக்குள் ஓங்கார நாதம் ஒலித்தது. அரசருக்கு ஆச்சரியம் தாளவில்லை. தண்ணீரை விட்டு வெளியே எழுந்தவுடன் அந்நாதம் கேட்கவில்லை. மீண்டும் நீருக்குள் மூழ்கினார், ஓங்கார ஒலி தெளிவாகக் கேட்டது.பெரும் வியப்பில் ஆழ்ந்த மன்னர், மறுபடியும் மூழ்கினார். கண்களைத் திறந்தார். அங்கு ஆடல் வல்லாரின் அற்புத நடனமும் கூடவே ஓங்கார ஒலி. அரசர் வியப்பில் ஆழ்ந்து போய் மீண்டும் மீண்டும் நீரினுள் மூழ்கி அந்த நடனத்தையும் ஓங்கார ஓசையையும் கேட்டார்.

அந்த நடன காட்சியை ஓவியமாக வரைந்த மன்னர், மிகவும் தூய்மையான சொக்கத் தங்கத்தில் விக்ரகமாகச் செய்து பொன்னம்பலத்தில் எல்லோரும் தரிசனம் செய்யும்படி அமைக்க வேண்டுமென விரும்பினார்.

 “கலப்படமில்லாத சொக்கத்தங்கத்தில் உருவாக்க வேண்டும். செம்போ அல்லது வேறு எந்த உலோகமோ கடுகளவும் சேர்க்காமல் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளுக்கு உத்தரவிட்டார். சிற்பிகள் எவ்வளவு  முயற்சிகள் செய்தும் விக்கிரகத்தை முடிக்க முடியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் விக்கிரகத்தில் குறை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

மன்னர் கொடுத்த கெடுவில் நாற்பத்தேழு நாட்கள் கடந்து விட்டது. தில்லையில் நடராசர் திருவுருவம் அமைக்க முடியாமல்  சிற்பிகள் தவிக்கிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், தமது  சீடரான கருவூராரை தில்லைக்கு அனுப்பினார்.
மன்னர்  சிற்பிகளுக்கு கெடு கொடுத்த கடைசி நாள் – நாற்பத்தெட்டாவது நாள் வந்து விட  பெரும் துயரத்திலும், மரண பயத்திலும் தவித்துக் கொண்டிருந்த சிற்பிகள் முன் கருவூரார் போய் நின்றார்.

“விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன். கவலை வேண்டாம்” என்று சிற்பிகளுக்கு ஆறுதல் கூறி, விக்கிரகம் செய்வதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார் கருவூரார். இத்தனை நாட்கள் நாம் போராடியும் நடக்காத ஒன்றை இவர் எப்படி செய்வார் என புரியாமல் சிற்பிகள் திகைத்துப் போய் நின்றார்கள்.  ஒரு மணி நேரத்திற்குள்   கதவு திறந்து வெளியேவந்த  கருவூரார், “உங்கள் எண்ணப்படியே விக்கிரகம் முடிந்து விட்டது. போய்ப் பாருங்கள்” என்றார்.

பெரும் ஆச்சர்யத்துடன் நுழைந்த சிற்பிகள் முகத்தில் பெரும் மகிழ்ச்சி.அங்கு கருவூராரால் வடிவமைக்கப்பட்ட நடராஜப் பெருமானின் அழகு திருமேனி உருவத்தை பார்த்து . வெளியே வந்தவர்கள்  கருவூராரை வணங்கினர்.

மறுநாள் சூரியோதயத்திற்கு முன்னரே மன்னர் இரணிய வர்மன் நீராடி திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகள் இருந்த இடத்திற்கு வந்தவர் ,நடராசர் சிலையின் அழகில் மயங்கினார். சிலையின் ஒளியில் அவர் கண் கூசியது. “இறைவா! நீ இங்கு எழுந்தருளிய கோலம் தான் என்னே!” என்று வியந்தார். அங்கம் அங்கமாகத் தங்கச் சிலையை பார்த்து வியந்தார்.

சிற்பிகள் பக்கம் திரும்பிய மன்னர், ‘அபாரம்! அற்புதமாகச் செய்து விட்டீர்கள் உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப் போகிறேன்” என்றார். அப்போது மந்திரி, “மன்னா! சிலையிலிருக்கும் தங்கத்தை சோதித்த பின்னர் இவர்களுக்கு வெகுமதி கொடுக்கலாமே!” என்றார். அதைக் கேட்ட மன்னர், “சிற்பிகளே! விக்கிரகம் செய்யும் போது தங்கத்துகள்கள் சிந்தியிருக்குமே அந்தத் துகள்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

தங்கத்துகள்களை சிற்பிகள் கொண்டு வந்தார்கள். சோதனை செய்த மன்னரின் முகம் கடுமையாக மாறியது.“சுத்தமான தங்கத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்லித்தானே உங்களை நியமித்தேன். சிலையில் சிறிது செம்பைக் கலந்து என்னிடம் நம்பிக்கை மோசடி செய்யலாமா?” என்று கடுமை காட்டினார்.

பயந்து நடுங்கிய சிற்பிகள்  “அரசே, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சிலையை எங்களால் செய்ய இயலவில்லை. அடியார் ஒருவர் தான் இந்தச் சிலையை வடிவமைத்தார்.” என்றார்கள்.

“அடியார் செய்தாரா?அவரை இழுத்து வாருங்கள்” என்று கட்டளை பிறப்பித்தார் மன்னர். உடனே பணியாட்கள் கருவூராரை அழைத்து வந்தார்கள். கருவூராரை மேலும் கீழுமாகப் பார்த்த மன்னர், “இவரைச் சிறையில் தள்ளுங்கள். யோசித்து, நாளை தண்டனை வழங்குகிறேன்!” என்று சொல்லி சிலையுடன் அரண்மனையை அடைந்தார்.

அங்கு விக்கிரகத்தை ஒரு பீடத்தில் வைத்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் மன்னர்..அந்தப்பொழுதில் மன்னர் முன்பு தோன்றினார் போகர். போகரின் ஐந்து சீடர்கள், தலைகளில் தங்க மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு சீடரிடம் தராசு ஒன்றும் காணப்பட்டது. திடீரென்று அவர்களைப் பார்த்ததுமே மன்னருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுந்து நின்று கைகளைக் குவித்தார்.
“மன்னா! நீ சிறைச்சாலையில் அடைத்து வைத்திருக்கிறாயே அவன் என் மாணவன். உன் ஆட்சியின் நியாயம் இது தானோ? அவனைச் சிறையில் அடைத்து விட்டாய்?” எனச் சீறினார் போகர்.

“சுத்தத் தங்கத்தில் செய்ய சொன்ன சிலையை செம்பு கலந்து செய்தது மாபெரும் தவறு அல்லவா? அதற்கேற்ற தண்டனைதான் அது” என்றார் மன்னர்.

“சுத்தத் தங்கத்தில் விக்கிரகம் செய்ய முடியாது. அதனால் தான் செம்பைக் கலக்கச் சொன்னேன். அப்படி செய்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு கேள். தூய்மையான சொக்க தங்கத்தில் வடிவம் செய்து வைத்தால், அதிலிருந்து கிளம்பும் ஒளி, பார்ப்பவர்களின் கண்களை நாளாக நாளாக குருடாக்கி விடும். இந்த அறிவியல் உண்மை உனக்குத் தெரியாது.சரி, இதோ நீ தந்த அதே சுத்த மாற்று தங்கம்” என்றதோடு தராசில் சிலையை வைத்து இன்னோரு தட்டில் தங்கத்தைக் கொட்ட சீடர்களிடம் கூறியதுடன், சிலையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினார்.

போகரின் காலில் வீழ்ந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு கேட்ட மன்னரிடம் ,”நடராசப் பெருமானை உமக்கே தருகிறேன். என் சீடனை எனக்குத் திருப்பித் தா” என்றார் போகன். சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார்.அங்கிருந்து திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கி குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டு பதில் கொடுத்தார். இன்றும் திருவிடை மருதூர் தலத்தில் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் காட்சி தருகிறார்.

கருவூரார் போற்றி போற்றி!

Sharing is caring!