தனது பக்தர்களை வாழ்வாங்கு வாழ வைக்கும் சீரடி பாபாவின் மகா சமாதி குறித்த அற்புதமான குறிப்புக்கள்..!

‘எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான்.  ஷீர்டி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்’.– பாபா. அவர் வாழ்ந்து தனது வரம் நல்கும் திருக்கரங்களால் தனது பக்தர்களுக்கு நல்லாசி வழங்கிய சீரடியில் இப்போது நாம் கண்டு தொழுது வணங்கும் பாபாவின் திருவுருவ சிலையின் பின்னணி வரலாற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.1918- ம் வருடம் விஜயதசமி அன்று சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும் பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில் முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பாபாவின் சமாதிக்கு முன்பு அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள் கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும் அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது.

அது அப்பொழுது எதற்கு வந்தது? ஏன் வந்தது? என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர்.இந்த விஷயம் ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.சிலை செய்ய மாதிரியாக பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது.

அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் திகதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும் பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது.

Sharing is caring!