தமிழர்களின் உணவுக்கு சுவையூட்டும் ”தேங்காய் பால்”!

இலங்கை தமிழர்களின் உணவுகளில் தேங்காய்க்கு ஒரு முக்கிய இடமுண்டு, பெரும்பாலான கறிகளில் தேங்காய்பால் பயன்படுத்தப்படுகிறது.

இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஃப்ரஷ்ஷான தேங்காயை துருவி வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்றாக பிழிந்து எடுத்தால் சுவையான தேங்காய் பாலை தயார் செய்து விட முடியும்.

கோடைகாலத்தில் ஒரு டம்ளர் தேங்காய் பாலை குடித்தால் உங்கள் உடல் வெப்பத்தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கும். உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்கும்.

பசும் பாலுடன் ஒப்பிடும் போது தேங்காய் பால் அதிகம் வயிறு அடைத்த உணர்வைக் கொடுக்காது, தேங்காய் பாலின் நன்மைகளை தெரிந்து கொண்டால் நிச்சயம் அதை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க மாட்டீர்கள்.

இதேபோன்று தேங்காய் எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் உணவுகளும் ருசியாக இருக்கும்.

அடங்கியுள்ள சத்துகள்

தேங்காய் பாலில் விட்டமின் சி, இ, கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

இதில் தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.

மேலும் கார்போஹைட்ரேட், புரோடீன், நார்ச்சத்து, நிறைவுற்ற கொழுப்புகள், இயற்கை சர்க்கரை ஆகியவையும் காணப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்
 • தேங்காய் பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.
 • மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய் பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கும்.
 • பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • சரும எரிச்சல், சொரியாசிஸ், பக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு தேங்காய்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ நிவாரணம் கிடைக்கும்.
 • வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற தேங்காய் பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.
 • தேங்காய் பால் ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து குளித்தால் கூந்தலுக்கு நல்லது.
 • வறண்ட போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய் பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.
 • வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத்தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய் பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர இளமைப் பொலிவு கிடைக்கும்.
 • தேங்காய் பாலில் காணப்படும் குறிப்பிட்ட வகை கொழுப்புக்கள் பசியினை அடக்குவதோடு உணவு உட்கொள்ளும் அளவினையும் குறைக்கிறது, எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
 • இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, எதிர்ப்பு அழற்சி பண்பு ஆகியவற்றால் அல்சர் மற்றும் வாய்புண்ணிற்கு இது சிறந்த தீர்வினை வழங்குகிறது.
 • தேங்காய் பாலில் உள்ள இரும்புச் சத்தானது உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால் இரத்த சோகை என்னும் அனீமியா நோய் குணப்படுத்தப்படுகிறது.
  குழந்தைகளுக்கு சிறந்தது

  தேங்காய் பாலானது பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நுண்நோய்கிருமிகள் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. தேங்காயில் தாய்பாலில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் உள்ளது.

  லாரிக் அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே சிறுகுழந்தைகளுக்கும் தேங்காய் பாலினைக் கொடுக்கலாம்.

Sharing is caring!