தலையை கொடுத்து கடமையை நிறைவேற்றியவர்

நீராடக் கூட நேரமில்லாமல்,  பலரும் தொல்லை தருகிறார்களே என்று நினைத்த பார்வதிதேவி,  தன் கையில் இருந்த மஞ்சளைக் கொண்டு, சிறிய உருவம் ஒன்றை செய்து, அதற்கு உறுப்புகள் கொடுத்து,  பிள்ளையார் என்று பெயரிட்டாள்.

‛‛தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் தாயே?” என்று அன்போடு கேட்ட குழந்தையிடம் ‛‛எனது அந்தப்புரத்துக்கு காவலனாக இரு மகனே… என்னுடைய அனுமதியின்றி யாரும் உள்ளே வரக்கூடாது..”  என்று பணித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

சும்மாவே வம்பை தேடி அலையும் நாரதர், ஏதேனும் கலகம் பிறக்குமா என்று அந்தப்புரத்துக்கு வந்து  ‛‛பொடியனாய் இருக்கும் சிறுவனே நீ யார்? என்றார்.  ‛‛நான் பிள்ளையார்.  என் அன்னையின் கைவண்ணத்தில் வடிவெடுத்தவன். அவர்கள் தொல்லையின்றி ஓய்வெடுக்கவே என்னை  படைத்திருக்கிறார்கள். ஆனால்  நீங்கள் வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்?” என்றார் பிள்ளையார்.

‛‛என் பெயர் நாரதர்” என்று மிடுக்கோடு கூறினார். ”ஓ.. ஓ….  கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று சொல்லி கலகம் தேடும் நல்லவர் நீர்தானா?” என்ற பிள்ளையார் சிரித்தார். நாரதர் நழுவினார். அடுத்து வந்த பிரம்மனும், விஷ்ணுவும் பொடியனைக் கண்டு புருவம் உயர்த்தி அலட்சியமாக அந்தப்புரத்துக்குள் போக,  பாய்ந்து வந்த சிறுவன் கையிலிருந்த கதாயுதத்தைக் கொண்டு  விரட்டினான்.

நாரதர் கலகம் ஏற்கனவே பரமனிடம் சொல்லப்பட்டுவிட்டது போலும். அடுத்து சிவபெருமான் வந்தார். ”தாங்களே முதன்மையானவராகவும் இருக்கலாம். எனக்கு முதன்மையானவர் என்னைப் படைத்த அன்னை பார்வதி தேவியே. நான் அவர் சொல்படியே நடப்பேன். அதனால் என்னை தாண்டி தங்களால் செல்ல முடியாது” என்று குறுக்கே வந்து வழிமறித்தான்.

‛‛உன்னை என்ன செய்கிறேன் பார்” என்றபடி பிள்ளையாரின் தலையை சீவிவிட்டார்  சிவப்பெருமான். சத்தம் கேட்டு வந்த பார்வதி  ‛‛என் புதல்வனை கொன்றுவிட்டீர்களே?” என்று கதறினாள். ‛‛பூலோகத்தில் வடக்கு திசையில் தலை வைத்திருக்கும் உயிரினத்தின் தலையை கொண்டு வந்து பிள்ளையாருக்குப் பொருத்தினால் உயிர் பெறுவான்” என்றார்.

அதன்படி பூலோகத்தில் யானை ஒன்று வடக்கு பக்கம் பார்த்து அமர்ந்திருப்பதைக் கண்டதும், அதன் தலையைக் கொண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்திவிட்டார்கள். இப்படித்தான் பிள்ளையாரின் முகம் யானை முக மாக மாறியது.
இதற்கு மற்றொரு கதையும் உண்டு.  கஜமுகாசுரன் என்னும் அசுரன், பிரம்மாவை நினைத்து கடுந்தவம் புரிந்து ஆண்,பெண் சம்மந்தமில்லாதவர்களால் தான் தனக்கு அழிவு நேரிடவேண்டும் என்ற வரம் பெற்றான்.

தேவர்களை துன்புறுத்தி அவர்களை இன்னல்களுக்கு உள்ளாக்கினான்.  அதை மனதில் வைத்துதான், சிவப்பெருமான் பிள்ளையாருக்கு யானை முகம் கொடுத்ததாகவும்,  பிள்ளை யார் கஜமுகாசுரனை வீழ்த்தியதாகவும் கூறுவர்.

எப்படியிருந்தால் என்ன பிள்ளையாரை பிடிக்காதவர்கள் யார் தான் இருக்கிறார்கள்?
முறம் போன்ற காதுகளும், கோலி குண்டு கண்களும்,   பானை போன்ற தொந்தி வயிறும், எங்கு வேண்டுமானாலும்  பொருந்திகொள்ளும் பாங்கும்  கணபதிக்கே உரியதாயிற்றே…

Sharing is caring!