தானதர்மம் இப்படிதான் இருக்க வேண்டும்

நம்மால் முடியும் போதெல்லாம் தான தர்மம்  செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி  தான தர்மம்  செய்தாலும் மனமாற  செய்தால்தான் பலனும் கிடைக்கும் என்று  புராணங்களும், இதிகாசங்களும் கூறுகின்றன. அதையே பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவும் எடுத்துக் கூறியிருக்கிறார். அதை விளக்கும்  சிறு நிகழ்வு இது.

பஞ்ச பாண்டவர்களில் தருமனுக்கு மனதில் ஒரு குறை  இருந்தது. ஒருமுறை கிருஷ்ணரைச் சந்தித்த போது, கிருஷ்ணா வெகுகாலமாக எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அதைக் கேட்கலாமா என்றார். இது என்ன தர்மா? கேளேன். எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் என்றார்.

பாண்டவர்களாகிய எங்களைப் பற்றி என்ன நினைக்கிறாய்? நீதி தவறாமல் இருப்பதிலும், வேண்டுபவருக்கு உதவி செய்வதிலும் , மனிதனாக வாழ்வதற்கு வேண்டிய அத்தனை குணங்களையும் கொண்டு வையகம் போற்ற வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதை விட வேறு சிறப்பு இருக்கிறதா என்ன? என்றார். அப்படியானால் எல்லோரும் ஏன் கொடை வள்ளல் கர்ணன் என்று அவனைப் புகழ்கிறார்கள். எனக்குப் புரியவில்லையே.  தான தர்மத்தில் நாங்கள் ஏதும் குறை வைக்கிறோமோ. தெரிந்தால்  சொல்லேன் என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சிரிப்பு வந்தது. இப்போது அதுதான் உனக்குப் பிரச்னையா? சரி உன் சகோதர்களை அழைத்து வா உன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன் என்றார். தர்மனும் ஒப்புக்கொண்டு சகோதரர்களுடன் வந்தான். ஸ்ரீ கிருஷ்ணன்  தருமனின் சந்தேகத்தை எடுத்து கூறி உங்களுக்கும் இத்தகைய சந்தேகம் உண்டா என்றார். எல்லோரும் அமைதியாக இருக்கவே சரி என்னுடன் வாருங்கள் என்றார்.

பெரிய பை நிறைய தங்காசுகளையும், மற்றொரு பையில் வெள்ளிக்காசுகளையும் நிரப்பி அவர்கள் கையில் கொடுத்தார். இன்று மாலைக்குள் இவை அனைத்தையும் நீங்கள் தானம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்து விட்டால் உங்களை விட கொடை வள்ளல் வேறுயாருமே இல்லை என்ற பேரை பெறுவீர்கள் என்று சொல்லி திரும்பினார்.

பாண்டவர்கள் கைகள் நிறைய தங்கக்காசுகளையும், வெள்ளிக்காசுகளையும் அள்ளி அள்ளிக்கொடுத்தார்கள். கிருஷ்ணபரமாத்மா சாதாரண ஆளா… குறும்புக்காரன் ஆயிற்றே. அள்ள அள்ள குறையாமல் தங்கக் காசுகள் வெள்ளிக்காசுகள் அப்படியே இருந்தன.  செய்வதறியாமல் திகைத்த பாண்டவர்கள் மாலையில் ஸ்ரீ கிருஷ்ணன் வந்ததும் தங்களால் இயலவில்லையே என்று கைவிரித்தனர். உடனடியாக கர்ணன் அங்கு வரவழைக்கப்பட்டான். கிருஷ்ண பரமாத்மா பையில் இருக்கும் செல்வத்தை தானமாக கொடுக்க வேண்டும் கர்ணா அதுவும் உடனடியாக விரைந்து செயல்படவேண்டும் என்றார்.

சரி என்று ஒப்புக்கொண்ட கர்ணன் கண்களில் அவ்வழியாக வந்த வயோதிக வழிப்போக்கன் ஒருவன் கண்ணில் பட்டான். அவரிடம் ஓடிய கர்ணன் ஐயா.. தங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். நான் கொடுப்பதை மறுக்காமல் வாங்கிக் கொள்கிறாயா? என்றார். வேண்டாம் என்று சொல்லும் மனநிலையிலா நான் இருக்கிறேன். தாங்கள் கொடுக்கும் எதுவாயினும் எனக்கு மகிழ்ச்சியே என்றார். அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்த கர்ணம் தங்ககாசுகள், வெள்ளிக்காசுகள் இணைந்த பைகளை எடுத்து கொடுத்தான்.  ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்க்க  கர்ணன் எப்போதும் கொடைவள்ளல் தான் என்றார்கள்.

Sharing is caring!