தாயனார் என்னும் அரிவட்டாய நாயனார்…

63 நாயன்மார்களின் இன்று நாம் பார்க்க விருப்பவர் அரிவட்டாய நாயனார். இவர் 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். சோழ நாட்டில் கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர்.  தாயனார் என்னும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். வேளாளர்களுக்கு தலைவராக இருந்தவர். சிவனின் மீது அதிக பக்தி கொண்டவர். தி்னமும் செந்நெல் அரிசியில் சோறு செய்து செங்கீரை சமைத்து மாவடு சேர்த்து எடுத்துகொண்டு சி்வனை தரிசித்து நைவேத்யம் செய்து அதை சிவனடியார்களுக்கு அளித்து வந்தார்.

பெருகி வரும் வெள்ளத்திலும், கடும் கோடையிலும், எத்தகைய சோதனையிலும் சிவனுக்கு நைவேத்யம் செய்வதை தவறவில்லை. தன் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ள அடியாரின் அன்பை உலகுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தார் அகில நாயகனாகிய எம்பெருமானாகிய சிவபெருமான்.

செல்வத்தில் திளைத்த தாயனார் கூலிக்கு ஆட்கள் வைத்து வேலை வாங்கும் அளவுக்கு  பெருமளவு செல்வத்தைக் கொண்டிருந்தார். நாளடைவில் அவரிடம் இருந்த செல்வத்தின் அளவு குறைய தொடங்கியது. சிறிது சிறிதாக வறுமை அவரை ஆட்கொண்டது. என்ன வறுமையாக இருந்தால் என்ன. சிவனுக்கு அன் றாடம் அமுது படைத்து நைவேத்யம் செய்யும் பணியை மட்டும் விடவேயில்லை. கூலிக்கு ஆட்களை வைத்து வேலை வாங்கிய  தாயனார்  பிறரிடம் கூலிக்கு செல்லும் நிலையை அடைந்தார்.  கூலிக்கு ஈடாக கிடைத்த பொருளில் செந் நெல்லை ஈசனுக்கும், கார் நெல்லை குடும்பத்தின் பசியாறவும் வைத்துக் கொண்டார். இவ்வளவு வறுமையிலும் நைவேத்யம் செய்வதைக் கண்ட ஈசன் அடுத்து ஒரு திருவிளையாடல் புரிந்தார்.

அன்று கூலிக்கு சென்ற அரிவட்டாயருக்கு செந்நெல் மட்டுமே கிடைத்தது. தாயனாருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஈசனுக்கு அமுது படைக்க செந்நெல் கிடைத்துவிட்டதே என்று உவகை கொண்டார். வீட்டுக்கு கார் அரிசி கிடைக்கவில்லை என்ற எண்ணம் கூட அவர் மனதில் எழவில்லை. அவர் அன்பு துணைவியாரும் அதைப் பற்றி எண்ணம் இல்லாமல் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்துக்கு சென்றார்.

மழைக்காலம் என்பதால் கீரைகள் செழித்து வளர்ந்திருந்தது. அந்தக்கீரையை  மேலாக பறித்து அன்று இருவரும் சமைத்து உண்டார்கள். அடுத்த நாள் கீரை தண்டை சமைத்து  சாப்பிட்டார்கள். மூன்றாவது நாள் கீரையின் வேர்களை சமைத்து சாப்பிட்டார்கள். அடுத்து வந்த நாள்கள் தண்ணீர் குடித்து பசியைப் போக்கி கொண்டார்கள். அப்படியும் சிவனுக்கு அமுது படைப்பதையும் அடிய வர்களுக்கு பிரசாதம் அளிப்பதையும் நிறுத்தவில்லை.

இந்நிலையில் சிவனுக்கு படைக்க  கூடையில் பிரசாதம் வைத்து எடுத்து சென்றார், அவரது  பின்னாடி அவரது மனைவி பஞ்சகவ்யம் ஏந்தி சென்றார். பசி மயக்கத்தால் தடுமாறி விழப்போன தாயனாரை தாங்கி பிடித்தாள் அவரது மனைவி. அப்போது கூடையில் இருந்த பிரசாதங்கள் சிதறி கீழே விழுந்தது. சிவனுக்கு கொண்டு வந்தபிரசாதங்கள் கீழே விழுந்ததில் பதறிய தாயனார் ”இன்று எப்படி உங்களுக்கு அமுது படைப்பேன்.

தங்களை பட்டினியாக்கி விட் டேனே. இனி நான் எப்படி உயிர் வாழ்வேன். வாழ்ந்து என் செய்வேன்” என்று  கத்தியால் தன் கழுத்தை அறுக்க தொடங்கினார். இனியும் பொறுக்க மாட் டோம் என்று சிவபெருமானின் அசரீரி ஒலிக்க அவரது கரம் நிலத்திலிருந்து மேல் எழும்பி தாயனாரின் கரத்தை தடுத்து ”வேண்டாம் நிறுத்தி விடு அன் பனே” என்றது.

நீ கொண்டு வந்த அமுதை நாம் இங்கேயே உட்கொண்டோம் என்று சிவபெரு மான் பார்வதி தேவியுடன் காட்சி அளித்தார். அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் தாயனார் அரிவட்டாயர் என்று அழைக்கப்பட்டார். மீண்டும் செல் வத்தால் திளைத்து அடியவர்களுக்கு தொண்டு செய்து இறுதிக்காலத்தில் மனைவியோடு  சிவலோகம் சென்றார்.

Sharing is caring!