தினமும் காலையில் இட்லி சாப்பிடலாமா?

தினமும் காலை உணவாக இட்லி சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியமாக வாழ முடியும்.

அதுமட்டுமின்றி சமீபத்திய ஆய்வு ஒன்றில், இட்லி இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்த ஓர் சிறந்த உணவு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இனிமேல் வீட்டில் காலையில் இட்லி செய்தால், அதை தவறாமல் சாப்பிடுங்கள்.

தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால், அதில் புரதங்களின் இருப்புத்தன்மை அதிகமாகும் மற்றும் வைட்டமின் பி சத்தின் அளவு மேம்பட்டு இருக்கும்.

உடல் வலிமையை அதிகரிக்கும் உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது.

முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இட்லி மிகவும் சிறப்பான காலை உணவு. அதிலும் இதனை சிட்ரஸ் அமிலம் நிறைந்த தக்காளி சட்னியுடன் சேர்த்து உட்கொண்டால், சிட்ரஸ் அமிலமானது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, அரிசியினால், கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்குவதைத் தடுக்கலாம்.

இட்லி பின்னாடி இப்படியொரு வரலாறா?

உளுந்தைப் பற்றிய குறிப்புக்கள் அகநாறு, புறப்பாடல், முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.

‘இட்டரிக’ என்று ஏழாம் நூற்றாண்டிலும் ‘இட்டு அவி’ என 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட நிலையில் பின்பு ‘இட்டு அவி’ என்ற இரட்டைச் சொல் மருவி ‘இட்டலி’ என்ற ஒரு சொல்லாய் திரிந்து அதன் பின்னர் ‘இட்லி’ என்றாகிவிட்டது.

இந்தியாவுக்கு கி.பி.800-க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலத்தில் வந்திருக்கலாம் என்கிறது ஒரு சாரார் வரலாறு.இந்தோனேஷியாவில் இதை `கெட்லி” (Kedli) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுதான் மருவி, `இட்லி’ ஆனது என்கிறார்கள்.

அதெல்லாம் இல்லை கன்னடத்தில் இதற்கு ஒரு வார்த்தை உண்டு… இட்டாலிகே (Iddalige). கி.பி.920-ம் ஆண்டிலேயே சிவகோட்டிஆச்சார்யா என்பவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றும் இன்னொரு சாரார் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கி.பி.1130-ம் ஆண்டில் மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், மானசொல்லாசா (Manasollaasa) என்ற நூலில், இட்டாரிகா (Iddariga) என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.அது இட்லிதான் என்கிறார்கள்.

10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ (Idada) எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு.

Sharing is caring!