திருமுடியால் விளக்கேற்ற முனைந்த கணம்புல்ல நாயனார்…

வட வெள்ளாற்றின் தன்கரையில் அமைந்துள்ள இருக்குவேளூரில் பிறந்தவர் கணம்புல்லர். பிறப்பிலேயே செல்வ வளம் மிக்கவர். அங்கிருந்த மக்களுக்கு ஒப்பற்ற தலைவராய் விளங்கினார். சிறுவயது முதலே சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார். சிவாலயங்களில் சிவபெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றும் பணியை தமது தலையாய பணியாக கொண்டு செய்துவந்தார்.

ஆலயங்களில் ஒளிதீபம் ஏற்றினால் இருள் அகன்றி வெளிச்சம் முழுமையும் பரவுவது போல் அஞ்ஞானம் என்னும் இருள்நீங்கி இறைவனை அடையச்செய்யும் பெரும் பேறான மெய்ஞானத்தைப் பெறலாம் என்னும் எண்ணத்தைக் கொண்டிருந்தார். எத்தகைய பணியிலும் நெய் தீபம் ஏற்றும் பணியை மட்டும் விடாது செய்துவந்தார். இவருடைய அன்பினால் மகிழ்ந்த சிவ பெருமான் இவரை சோதிக்கும் பொருட்டு இவருக்கு வறுமையை உண்டாக்கினார். எத்தகைய வறுமை வந்தால் என்ன. விளக்கேற்றும் பணியில் தொய்வு வரக்கூடாது என்று மனம் தளராமல் மகிழ்வுடன் இப்பணியை செய்துவந்தார் கணம்புல்லர்.

வறுமையின் நிலை தொடரவே இருக்குவேளூரில் உள்ள நிலபுலன்களை விற்று கையில் கிடைத்த பணத்தோடு சிவாலயங்களுக்குச் சென்று நெய் தீபம் ஏற்ற ஊரை விட்டு வெளியேறி இறுதியாக தில்லைக்கு வந்தடைந்தார். தில்லை நாதர் மனதை கவர்ந்ததால் அவரையே தரிசித்து வாழ்வோம் என்று அங்கேயே சிறிய வீடு எடுத்து வசிக்கலானார்.

திருப்புலீச்சரம் என்னும் சிவாலயத்தில் அன்றாடம் விளக்கேற்றும் பணியை செய்துவந்தார். கையில் இருந்த இருப்புகளெல்லாம் குறையலாயிற்று. அதைப்பற்றி கவலைப்படாத கணம்புல்லர் கண் ணும் கருத்துமாய் தன்னுடைய விளக்கேற்றும் பணியில் இன்புற்றிருந்தார்.

ஆயிற்று. கையில் இருந்த செல்வமும், வீட்டில் இருந்த பொருள்களும் விளக்கேற்றும் பணியில் முழுவதுமாக கரைந்துவிட்டது. விளக்கேற்ற நெய் தேடிய கணம்புல்லர் பிறரிடம் இரந்து கேட்க அஞ்சினார். உடலால் உழைத்து  செல்வத்தை ஈட்டி விரும்பும் நாயகனுக்கு விளக்கேற்றலாம் என்று எண்ணினார். கணம்புல்லை விற்பனை செய்ய தொடங்கினார். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் இறைவனுக்கு நெய்தீபம் ஏற்றி மகிழ்ந்தார்.  அதிலும் குறையை உருவாக்கினார் சிவபெருமான். கணம்புல் விற்பனையாகவில்லை. அதனால் என்ன என்று கணம்புல்லில் விளக்கு தரித்தார். விளக்கு என்னமோ எரிந்தது. ஆனால் நீடித்து ஜாமம் வரை எரியும் விளக்குகள் விரைவில் அணைய தொடங்கின.

சிவபெருமானின் மீது கொண்ட அணையும் விளக்கை தடுக்க அன்பினால் தன்னுடைய திருமுடியைக் கொண்டே நமசிவாய வாழ்க என்னும் திருமந்திரம் சொல்லி விளக்கை எரிய வைக்க முயன்றார். போதும் சோதனை என்று நினைத்த சிவபெருமான்  ரிஷப வாகனத்தில் அன்னையுடன் தரிசனம் தந்தார். அளவற்ற மகிழ்ச்சியில் அவர்தம் பாதம் பணிந்த கணம்புல்ல நாயனாருக்கு  சிவலோக பதவி தந்தார்.

சிவாலயங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று இவருடைய குரு பூஜை கொண்டாடப்படுகிறது.

Sharing is caring!