திருவோணம் நட்சத்திரக்காரர்கள்

27 நட்சத்திரங்களின் வரிசையில் 22-வது நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம். ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம். சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. திரு என்னும் அடைமொழியுடன் விளங்கும் நட்சத்திரத்தில் இதுவும் ஒன்று.

திருவோணம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டிருப்பவர்களான நீங்கள் செவ்வாயை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். எதிலும் தூய்மையைக் கடைப் பிடிப்பீர்கள். அகத்தோற்றத்திலும் புறத்தோற்றத்திலும் தூய்மையைக் கொண்டிருக்கும் நீங்கள் தொலைநோக்கு பார்வையுடன் பார்ப்பீர்கள். திருவோணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு செல்வாக்கோடு இருப்பீர்கள். வீண் செலவுகளை செய்ய மாட்டீர்கள் ஆனால் வறுமை என்று வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்குவீர்கள்.

திருவோணம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சுக்கிரனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். சுகவாசிகளாக இருப்பதையே விரும்புவீர்கள். இயல்பாகவே இறைபக்தி சிந்தனையுடன் வாழ்வீர்கள். குடும்பத்துடன் பற்றுகொண்டு வாழ்வீர்கள். பழிபாவத்துக்கு அஞ்சி வாழ்வீர்கள்.  ஆடை ஆபரணங்களை விரும்பி அணிவீர்கள். அறிவுபூர்வமாக யோசிப்பீர்கள். எங்கு இருந்தாலும் தலைமை பொறுப்போடு வலம் வருவீர்கள். உழைப்பதற்கு அஞ்சமாட்டீர் கள்.

 திருவோணம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் புதனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். கோபத்தில் வல்லவர்களாக இருந்தாலும் குணத்திலும் சிறந்து விளங்குவீர்கள். பிரதிபலன் பாராமல் உதவி செய்வீர்கள் என்றாலும் அவ்வப்போது கருமித்தனம் கலந்து இருக்கும். எளிமையாக வாழ விருப்பம் கொண்டுள்ள நீங்கள் கலைகளில்  ஈடுபாடு கொண்டிருப்பீர்கள்.

திருவோணம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சந்திரனை அம்சமாக கொண்டவர்கள். சகல செளபாக்கியத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள். எல்லோருடனும் நட்பு கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகள், பெற்றோர்கள் சகிதம் ஒற்றுமையாய் வாழவே விரும்புவார்கள். சட்டென்று தோன்றும் கோபம் சடுதியில் மறைந்து சாந்தமாய் மாறிவிடும் இயல்பை கொண்டிருபீர்கள்.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் பெற்றோர்களை கைவிடமாட்டார்கள். அழகிய தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். ஆடை ஆபரணங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். பழி பாவங்களுக்கு அஞ்சி வாழ்வீர்கள். பிரம்மாண்டமான தொழிலை நடத்தும் திறமைசாலிகள். தெய்வத்தின் அருளை பெற்றிருப்பீர்கள். சிறுவயதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூடா நட்பால் குடும்பத்துக்குள் பகை வளரும் வாய்ப்புண்டு. அதைக் கடந்துவிட்டால் சாதனைகள் பல செய்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். கலைகளில் ஆர்வமிக்கவர்களாக விளங்குவீர்கள்.

Sharing is caring!