தீராத நோயையும் தீர்க்கும் வஹ்னிவாசினி

குணப்படுத்துவது சற்று கடினமே என்று மருத்துவர்கள் கைவிடும் தீராத நோய்கள்  தீர வேண்டுமா? .மலை போல் வந்த பிரச்னைகள்  பனி போல் விலக வேண்டுமா? உடல் ஆரோக்யம் பெற்று மூவுலகிலும் நிகரில்லாத பேறையும் அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் திதி நித்யா தேவியான வஹ்னிவாசியை வணங்கினால் வேண்டியது வேண்டியபடி கிடைக்கும். இவள் அக்னி மண்டபத்தில்  உறைந்திருக்கிறாள். நம் உடலில் மூலாதாரத்தில் அக்னி மண்டலம் உள்ளது.  இங்கு குண்டலினி  வடிவில் அம்பிகை இருக்கிறாள் என்பது ஐதிகம்.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன் ஸ்ரீ சக்கரம் வைத்து  கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால் திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நீங்கள்  வளர்பிறை பஞ்சமி அல்லது தேய் பிறை ஏகாதசி திதியில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய திதி நித்யா தேவி வஹ்னிவாசினி. சுக்லபக்ஷ் பஞ்சமி, கிருஷ்ணபக்ஷ ஏகாதசி அன்று  இவளை வழிபடுங்கள்.
சதுர்த்தி திதியன்று வீட்டில் விளக்கேற்றி வஹ்னிவாசினியை வணங்கினால் உங்கள் வாழ்வில் உள்ள துன்பங்களை அடியோடு நீக்கி  உலகிலுள்ள  இன்பங்களைத் தடையின்றி வழங்குவாள்.

வஹ்னிவாசினி:
திதி நித்யா தேவிகளின் ஐந்தாம் இடத்தை அலங்கரிப்பவள். வஹ்னி என்பது மூன்று என்ற எண்ணிக்கையை குறிக்கும். லலிதாம்பிகையின் பஞ்சதசா க்ஷரி  மகா மந்திரத்தில் வாக்பவ,காமராஜ, சக்தி கூடங்களும் மூன்று தான். தங்கம் போன்ற நிறத்தைக் கொண்டிருக்கும் இவளது இடது கரங்களில் தாமரைமலர், கரும்பு வில், சங்கு, அமிர்தம் போன்றவற்றையும்  வலது கரங்களில் செங்கழுநீர் மலர், தங்கத்தாலான சொம்பு, மாதுளம்பழம், மலர் அம்பு போன்றவற்றை ஏந்தி எட்டுகரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முக்கண்களை உடைய இவள் இரத்தினத்தாலான மகுடத்தை அணிந்து அழகுடன் காட்சியளிக்கிறாள்.
மூலமந்திரம்:
ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

Sharing is caring!