தீராத நோய்களை தீர்க்கும் திருவையாறு அகத்தியர்

திருவையாறு தியாகராஜ சுவாமி கோயில் பிரசித்தி வாய்ந்த அளவிற்கு, அதன் நுழைவு வளைவு எதிரே உள்ள ஒத்தத்தெருவில் இருக்கும் அகத்திய முனிவரின் கோவில் நிறைய பேருக்கு தெரிவதில்லை. இங்கு  அகத்திய மாமுனிவருக்கும் அவர் மனைவி லோபா முத்ரைக்கும் அழகிய சிறு தனிக்கோவில் அமைந்துள்ளது . மேற்குப்  பார்த்த  சந்நதியாக  மிகுந்த   தெய்வீக அம்சத்துடன் விளங்குகிறது இக்கோவில். அகத்தியருக்கு  இப்படி  தனிக்கோயில் இருப்பதே  மிகவும் அரியதும் சிறப்புமாக கருதப்படுவதால் , இந்த  திருத்தலத்தில் அகத்தியர்  மனைவியோடு இருப்பதென்பது கூடுதல் சிறப்பாகும்.

காவிரியின் வடகரையிலுள்ள இந்த திருத்தலம் ,ஒரு காலத்தில் திருவையாறு  தியாகய்யர் வாழ்ந்த புஷ்ய மண்டபத் தெருவில் இந்த அகத்தியர் மூலவராக அருள்பாலித்துக் கொண்டிருந்தார் என்கிறார்கள். சொல்லப்போனால், அகத்தியரின் திருமேனி மட்டுமே அங்கு இருந்து, அவர் மீது பக்தி கொண்டு வழிபட்டு வந்த அன்பர்களுக்கு அருள் புரிந்து வந்தார். ஒரு கட்டத்தில், அந்த இடத்திலிருந்து அகத்தியரை இட மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது.

அவரின்  பக்தர்களில் ஒருவரான முருகானந்தம் என்பவர் அந்த  மூலவரை எடுத்து வந்து தன்னுடைய  இல்லத்திற்கு  அருகிலேயே ஒரு கீற்று கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபட்டு வந்தார் அந்தத் தெரு வாசிகளும், பக்தர்களும் அகத்தியருக்கு சிறு கோயில் கட்டத் தொடங்கி குடமுழுக்கும் நடத்தினர்.  பக்தர்களின் முயற்சியால், மூலவர் கருங்கல் சிற்பத்திலும், உற்சவர்  பஞ்சலோகத்திலும் உருவாக்கப்பட்டது.
பௌர்ணமியன்று மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும் அர்ச்சனைகளும் நடைபெற்று, உற்சவ மூர்த்தியின்வீதியுலாவும் நடைபெறுகிறது

இந்த ஆலயத்திலுள்ள அகத்திய முனிவரின் கையில் மருத்துவ குடுவை இருப்பதால் இவர் நோய் தீர்க்கும் மருத்துவராக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு மருந்து சாப்பிட்டால் அனைத்து நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.  மேலும் ஜோதிடம், தமிழ்மொழி, சாஸ்திரம், மருத்துவம் ஆகியவற்றில் அகத்தியர் வல்லவர் என்பதால், அவரை வணங்குபவர்களுக்கு, அகத்திய முனிவரின் அருளால் சகல வித்தைகளும் கைகூடும் என்பது இங்கு வந்து பயனடைந்தவர்களே சாட்சி.

Sharing is caring!