துன்பங்களை நீக்கும் வஜ்ரேஸ்வரி

ஒவ்வொரு பிறவியிலும் ஒருவன் செய்யும் புண்ணியங்கள் எப்படி அடுத்தடுத்த பிறவியில் தொடர்கிறதோ அதுபோல்  தெரிந்தும்  தெரியாமலும் செய்த பாவங்களும் விடாது கருப்பு போல் நம்மை பின் தொடரும் என்று இந்துமத சாஸ்திரம் சொல்கிறது. இப்பிறவியில் நான் எவ்வித பாவமும் செய்யவில்லை என்று சொல்பவர்கள் அறியாமல் செய்த பாவங்களை நீக்க பிரயாசித்தம் செய்து கொள்ள நினைத்தால்  மஹா வஜ்ரேஸ்வரியை வழிபடலாம்.

முற்பிறவியிலும், இப்பிறவிப்பயனையும் தீர்க்கும் தீர்க்கதரிசி  இவள் தான். பக்தர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும் சக்தியைக் கொண்டவள் இவள். துர்வாஸ முனிவர் தன்னுடைய லலிதாஸ்தவரத்னத்தில் ஸ்ரீலலிதாம்பிகை  உறையும் ஸ்ரீ நகரின் 12 ஆம் மதில் சுற்று வஜ்ரமணியாலும் அதற்கு அருகில் வஜ்ர மயமான நதி ஓடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு அதிதேவதையாக வஜ்ரேஸ்வரி இருப்பதாகவும்  அதில் குறிப்பிட்டுள்ளார். அபயம் என்று ஓடிவரும் பக்தர்களை துன்பங்களிலிருந்து காக்கிறாள்  மஹா வஜ்ரேஸ்வரி.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன் ஸ்ரீ சக்கரம் வைத்து  கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால் திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நீங்கள்  வளர்பிறை சஷ்டி அல்லது தேய் பிறை தசமி திதியில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய திதி நித்யா தேவி மஹா வஜ்ரேஸ்வரி. சுக்லபக்ஷ சஷ்டி, கிருஷ்ணபக்ஷ தசமி அன்று  இவளை வழிபடுங்கள்.
அன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி மஹா வஜ்ரேஸ்வரியை வணங்கினால் அனைத்து துன்பங்களையும் இப்பிறவியில் செய்த பாவங்க ளையும் அடியோடு நீக்கி மோட்சம் தருவாள்.

மஹா வஜ்ரேஸ்வரி:
திதி நித்யா தேவிகளின் ஆறாம் இடத்தை அலங்கரிப்பவள்.  சக்தி பீடங்களில் ஜாலாமந்திர் பீடத்தின் அதிதேவதையாக விளங்குகிறாள். அன்னையின் மருதாணி இடப்பட்ட திருக்கரங்களை பாசம், அங்குசம்,கரும்பு வில், மாதுளம் கனிகள் அலங்கரிக்கின்றன. பாதங்களில் சதங்கையும் தண்டும் அலங்கரிக்கின்றன. முக்கண்களைக் கொண்டு முக்காலத்தையும் உணர்ந்தவள் இவள் என்று போற்றப்படுகிறாள். ஆற்றல் மிக்க காரணத்தினாலேயே இப்பெயரை பெற்றிருக்கிறாள். புன்சிரிப்போடு சிவப்பு பட்டாடையும் அணிகலனையும் அணிந்து அருள்பாலிக்கிறாள். வாழ்வில் மேன்மையடைய வைக்கும் ஆற்றல் மிக்கவள் மஹா வஜ்ரேஸ்வரி.

மூலமந்திரம்:
ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

Sharing is caring!