தூதுவளையில் இவ்வளவு நன்மைகளா??

சளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று. இதன் சிறப்புகள் பற்றிப் பேசுகிறார் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

* உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
* தூதுவளை இலைகள் மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளதால், இதனை ‘ஞானப் பச்சிலை’ என்ற பெயராலும் அழைக்கின்றனர்.

* தூதுவளையின் இலை, தண்டு முதலியவற்றில் சிறிய முட்கள் காணப்படும். தூதுவளை இலை உண்டிக்குச் சுவையைத் தரும். இதன் இலைகள் நம் உணவில் கீரையாகவும், ரசம், துவையல் செய்து உண்ணவும் பயன்படுகிறது.
* தூதுவளை பூ ஆண்மையைப் பெருக்கும் தன்மை கொண்டது. காயானது, வாதம், பித்தம், கபம் என மூன்று நோய்களையும் நீக்கும் குணமுடையது.

* நுரையீரல், மூச்சுப்பாதை தொடர்புடைய நோய்கள் அனைத்தையும் நீக்குகிறது.
* தூதுவளை மூலிகையின் அனைத்து பாகங்களுமே (இலை , தண்டு, பூ, காய், கனி, வற்றல்) இருமல், சளி முதலிய நோய்களிலிருந்தும், கண் நோய்கள், எலும்பு நோய்கள், காது நோய்கள் ஆகிய நோய்களுக்கெல்லாம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

* தூதுவளையின் இலைகள் மூச்சுப்பாதையில் கோழையகற்றி செய்கையை வெளிப்படுத்தி இருமல், இரைப்பு நோய்களைக் குணப்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தது.
* தினந்தோறும் காலையில் ஒரு கைப்பிடி தூதுவளை இலையும், 3 அல்லது 5 மிளகும் சேர்த்து மென்று சாப்பிட கப நோய்கள் குணமாகும்.

* இலைகளைத் துவையல், குழம்பு செய்து சாப்பிட கோழைக்கட்டு நீங்கும். இலையை எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்டு வர மார்புச் சளி, இருமல், நீரேற்றம் முதலியவை கட்டுப்படும்.
* தூதுவளைக் கீரை, வேர், காய், வத்தல், ஊறுகாய் இவற்றை கற்ப முறைப்படி 40 நாட்கள் சாப்பிட்டு வர பித்த மிகுதியால் வரக்கூடிய கண் நோய்கள் எல்லாம் நீங்கும்.

* தூதுவளை இலை, கண்டங்கத்திரி இலை, ஆடாதோடா இலை இவைகள் ஒவ்வொன்றும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதனிலிருந்து முறைப்படி சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட சளி, இருமல், இரைப்பு முதலானவைகள் குணமாகும்.
* தேவையான அளவு தூதுவளம் பழத்தை எடுத்து அது மூழ்கும் அளவு தேன் விட்டு வெயிலில் வைத்து துழாவி ஊற வைக்க பக்குவமடையும். இவ்வாறு செய்யப்படும் மணப்பாகு (சிரப்) குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கோழையகற்றி சிரப்பாகும். குழந்தைகளை அடிக்கடி தொந்தரவு செய்யும் சளியானது தீரும்.

* தூதுவளையைக் கொண்டு செய்யப்படும் குடிநீருடன் (கஷாயம்) தேன் கலந்து பருக சுரம், ஐய சுரம், வளி சுரம் இவை அனைத்தும் குணமாகக் கூடும்.
* தூதுவளையின் இலை மற்றும் பழச் சாற்றுடன் வெந்நீர் கலந்து உட்கொள்ள சீரண சக்தி அதிகமாவதுடன் மலச்சிக்கலும் தீரும்.

* தூதுவளை இலைகளுடன் மிளகு சேர்த்து சிதைத்து, அதனைக் கொடுக்க வயிற்றில் உண்டாகும் வாயு மற்றும் வலி குணமாகும். தூதுவளையிலிருந்து எடுக்கப்படும் உப்பானது இருமல், காசம், சுவாசம் முதலிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

* தூதுவளை பற்றிய அறிவியல் ஆய்வு கட்டுரைகள் பல, அதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி, ஈரலைப் பாதுகாக்கும் குணம் இருப்பதாக நிரூபித்துள்ளன. மேலும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் இருப்பதாக கூறுகின்றன.
* எலும்பு, பற்கள் இவற்றிற்கு முக்கியமான தாதுச்சத்தான கால்சியம் சத்து இதன் இலைகளில் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் முடிவாக கூறுகின்றன.

* உடலுக்கு வலு வேண்டுமென்றால் தூதுவளை, மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு நான்கையும் சேர்த்து எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.

* இருமல், இரைப்பு, சளி முதலிய பிரச்னைகளை தீர்ப்பதோடு ஆண்மை சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
* காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.
* தூதுவளையை நேரடியாக வெயில் படாத இடத்தில் காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல், இளைப்பு போன்ற பிரச்னைகள் நீங்கி உடல் ஆரோக்கியமடையும். தூதுவளை கீரையால் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறது. ஜீரண சக்தியைத் தூண்டுகிறது.

* தூதுவளை கீரையை சமையலில் சாம்பார், ரசம், துவையல் போன்ற முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கு குறைந்த அளவு கொடுக்கலாம். சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் பிரச்சனை தீரும் வரையும் மற்றவர்கள் வாரத்திற்கு 2 முறையும் பயன்படுத்தலாம்.

Sharing is caring!